Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

நின்றுபோன மாணவரின் இதயத்துடிப்பு; சாலையில் செவிலியர் செய்த முதலுதவியால் மீண்ட உயிர்!

சாலை விபத்தில் இதயத்துடிப்பு நின்று போய், மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவரை, அந்த வழியாக வந்த செவிலியர், கொஞ்சமும் தாமதிக்காமல் சாதூர்யமாகச் செயல்பட்டு காப்பாற்றியது மன்னார்குடி பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாலையில் கிடந்த அந்த மாணவருக்கு செவிலியர் அவசர சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அவசர சிகிச்சை அளிக்கும் செவிலியர் வனஜா

Also Read: 108 ஆம்புலன்ஸில் பிரசவம்; மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணியாற்றி வருபவர் வனஜா. இவர் தனது குடும்பத்தினருடன் காரில் நேற்று, தஞ்சை மாவட்டம் மதுக்கூர் சென்றுவிட்டு, மன்னார்குடிக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது மதுக்கூர் சாலையில் உள்ள லெக்கணாம்பேட்டை அருகே டுவீலரில் சென்றுகொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவர், ஆடுகளின் மீது மோதி கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்திருக்கிறார்.

காரில் சென்று கொண்டிருந்த செவிலியர் வனஜா, உடனடியாக காரை நிறுத்திவிட்டு, அந்த மாணவரை காப்பாற்றும் முயற்சியில் துரிதமாகச் செயல்பட்டிருக்கிறார். மயக்கம் அடைந்த நிலையில் கிடந்த மாணவரின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்ததோடு, இதயம் துடிப்பற்ற நிலையில் இருந்திருக்கிறது. செவிலியர் வனஜா, அந்த மாணவரின் மார்பில் தனது இரு கைகளையும் வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்திருக்கிறார்.

செவிலியர் வனஜா

அதனை தொடர்ந்து, அந்த மாணவரின் இதயம் மீண்டும் செயல்படத் தொடங்கி, சுயநினைவு திரும்பியிருக்கிறது. உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸை வரவழைத்து, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அந்த மாணவரை அனுப்பி வைத்திருக்கிறார் செவிலியர் வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் இருந்து உயர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த மாணவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

அந்த மாணவர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லியம்பட்டினத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் வசந்த் என்பதும், இவரது சொந்த ஊர் மன்னார்குடி அருகே உள்ள கருவாக்குறிச்சி என்பது தெரிய வந்திருக்கிறது.

Also Read: `பயப்பட வேண்டியது நீங்கள் அல்ல!'- மாணவிகளுக்கு தைரியமூட்டும் `நிமிர்ந்து நில் துணிந்து சொல்'

சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவர் வசந்த்திற்கு, கொஞ்சமும் தாமதிக்காமல் அவசர முதலுதவி சிகிச்சை அளித்த செவிலியர் வனஜாவுக்குப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.



source https://www.vikatan.com/news/tamilnadu/mannargudi-nurse-performed-cpr-to-save-a-youth-s-life-who-met-with-accident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக