Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

இன்றைய சூரிய கிரகணம் தரப்போகும் பலன்களும் நாம் செய்ய வேண்டியவையும் - ஒரு ஜோதிட வழிகாட்டல்!

வானியல் நிகழ்வுகளில் முக்கியமானவை கிரகணங்கள். இவற்றில் சந்திர கிரகணம் என்பது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ஏற்படும் நிகழ்வு ஆகும். அதேபோன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

ஜோதிட ரீதியில் சொல்வதாக இருந்தால் சூரியன் கேதுவோடு இருக்கும்போது வரும் பௌர்ணமி சந்திர கிரகணமாகவும் சூரியன் கேதுவோடு இருக்கும்போது வரும் அமாவாசை சூரிய கிரகணமாகவும் விளங்கும். அதேபோன்று சூரியன் ராகுவோடு சஞ்சரிக்கும்போதும் சந்திர சூரிய கிரகணங்கள் ஏற்படும் என்பதைப் பல்லாயிடம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் முன்னோர்கள் கணித்திருக்கிறார்கள்.

சூரிய கிரகணம்

இப்படி நிகழும் கிரகணங்களால் பல்வேறு பாதிப்புகள் பூமியில் நிகழும் என்றும் இரு சூரிய கிரகணங்களுக்கு இடையே சில முக்கிய நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஜோதிட ரீதியாகச் சொல்வது உண்டு. இதனால் கிரகணம் நிகழும் வேளையில் முன்னோர்களை வழிபடுவது வழக்கம். மேலும் அந்த வேளையில் செய்யும் மந்திர ஜபம் மிகுந்த பலனைத் தரும் என்றும் இந்த வேளையில் செய்யும் தானம் மிகுந்த பலனைப் பெற்றுத்தரும் என்றும் ஜோதிடர்கள் சொல்வார்கள்.

அப்படி வானியல் முக்கியத்துவம் வாய்ந்த சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இன்று (4-12-2021) காலை 10 .59 நிமிடத்துக்குத் தொடங்கும் இந்த கிரகணம் மாலை 3 மணி 7 நிமிடம் வரை நீடிக்கிறது. இத்தனை பெரிய கிரகணம் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அண்டார்ட்டிகா ஆகிய பகுதிகளில் தெரியும் என்றும் இந்தியாவில் தெரியாது என்றும் அறிவியல் அறிஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோன்று நம் பஞ்சாங்கங்களிலும் இந்தக் கிரகணத்துக்கு எந்தவிதமான சடங்குகளையும் செய்ய வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது பிலவ வருடத்தில் வரும் கிரகணங்கள் எதையும் நான் அனுஷ்டிக்கத் தேவையில்லை என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.
ராகு - கேது

நமக்குத் தெரியாத கிரகணத்தால் நமக்கு பாதிப்பு ஏற்படாது என்றாலும் சில ஜோதிடர்கள் உலக அளவில் பல நாடுகளில் இந்தக் கிரகணம் தெரியும் ஆதலால் உலகில் பல பகுதிகளிலும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். நாமும் இந்த உலகத்தில்தான் இருக்கிறோம் என்பதால் நமக்கும் அதன் விளைவுகள் ஏற்படலாம் என்கிறார்கள். பெரிய அளவில் இல்லை என்றாலும் மிகச் சிறிய அளவிலாவது பாதிப்பு இருக்கும் என்கிறார்கள் ஜோதிடர்கள். அப்படிப்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்பது குறித்து ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயனோடு பேசினோம்.

“இந்த சூரிய கிரகணம் நமக்குத் தெரியாது என்பதால் அதற்கு சடங்குகள் எதுவும் செய்யத் தேவையில்லை. என்றாலும் உலகில் எங்கோ நில அதிர்வு ஏற்பட்டால் எப்படி இங்கு சுனாமி வருகிறதோ அதேபோன்று இந்த சூரிய கிரகணம் சில நாடுகளில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பலனைத் தரும். நம் நாட்டுக்குப் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் சில பொருளாதாரச் சிக்கல்கள் வந்துபோகும்.

சூரியனே தானியங்களுக்கு அதிபதி. அறிவியல் பிரகாரமும் அவரே தானியங்களை விளைய முக்கியக் காரணம் ஆகிறார். எனவே அப்படிப் பட்ட சூரியனுக்கு கிரகணம் ஏற்படுவதால் உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு. பணவீக்கமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. அடுத்த சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வருகிறது. அதுவரை இந்நிலையே நீடிக்கும். அதன்பிறகு உலகத்தில் பல நன்மைகள் நடைபெறும்.

ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

இந்த சூரியகிரகணத்தால் தனிப்பட்ட முறையில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் கிரகண காலத்தில் தானங்கள் செய்வது ரொம்ப முக்கியம். ஏழை எளியவர்களுக்கு உணவு தானம், அரிசி தானம் ஆகியன செய்யுங்கள். ஒன்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் கிரகண காலத்தில் நீங்கள் என்ன தானம் செய்கிறீர்களோ அது பல மடங்காகத் திரும்பி வரும் என்கிறது சாஸ்திரம். நீங்கள், பணம் தானம் செய்தால் பணமாகக் கிடைக்கும். உடை தானம் செய்தால் உடையாகக் கிடைக்கும். உணவு தானம் செய்தால் வாழ்வில் உணவுப் பஞ்சமே இருக்காது.

அதேபோன்று பசுவுக்கு அகத்திக்கீரை தருவதும் அதைத் தொட்டு வணங்கி வேண்டிக்கொள்வதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும். தவறாமல் இந்தப் புண்ணியகாலத்தில் அவரவர்கள் ‘சிவாய நம’ என்றோ ‘ஓம் நமோ நாராயணா’ என்றோ ‘ராம ராம’ என்றோ அல்லது அவரவர் குலதெய்வங்களின் நாமங்களையோ சொல்லிக் கொண்டிருந்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறினார்.



source https://www.vikatan.com/spiritual/astrology/the-importance-of-solar-eclipse-happening-today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக