கொரோனா வைரஸின் கோரத் தாண்டவம் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தமிழகத்தில், தலைநகர் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு படிப்படியாகக் குறைய, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாகத் தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பில் கோவைதான் முதலிடம்.
Also Read: கொரோனா வைரஸ் பாதிப்பில் சென்னையை முந்திய கோவை - இந்த நிலைவரக் காரணம் யார்?
ஆனால், இந்த நேரத்திலும் கோவையைச் சேர்ந்த நண்பர்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இணைய வழியாக மருத்துவர்கள் மூலம் ஆலோசனை சொல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நண்பர்களாக இணைந்து முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு YANA (You Are Not Alone) என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த முயற்சியை முன்னெடுத்தவர்களில் ஒருவரான கண்ணன், ``நான் சொந்தமாக கார்மென்ட்ஸ் வைத்திருக்கிறேன். பொதுவாக பேரிடர் காலங்களில் நாங்கள் நண்பர்கள் இணைந்து, எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம். கொரோனா பாதிப்புகளைத் தொடர்ந்து கவனித்து வந்தோம். இங்கு யாரும் தனித்துவிடப் பட்டவர் இல்லை என்பதற்காகதான் YANA என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தோம்.
எங்கள் நண்பர்கள் பட்டியலில் நிறைய மருத்துவர்கள் உள்ளனர். 75% பேர் விழிப்புணர்வு இல்லாததால்தான் ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும் அளவுக்குச் செல்கிறார்கள். அவர்களை சரியாக வழிநடத்தினால் வீட்டில் இருந்தே, இதை சரியாக எதிர்கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறினர்.
கொரோனா குறித்து மக்களிடம் நிறைய சந்தேகங்கள் உள்ளளன. இப்போதைய சூழ்நிலைக்கு அவர்கள் வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களை அணுகுவது கடினம். அவர்கள் வீட்டிலிருந்தே மருத்துவர்களை அணுகவும், கொரோனா குறித்த விழிப்புணர்வு பெறவும் உருவாக்கப்பட்டதுதான் இந்த YANA. ஒரு மருத்துவர் பேசினால் மக்களின் நம்பிக்கை பல மடங்கு அதிகரித்துவிடும். கோவை மட்டுமல்லாமல் சென்னை, சேலம், அமெரிக்கா, யூ.கே சிங்கப்பூர் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து 31 மருத்துவர்கள் இதில் இணைந்துள்ளனர்.
அவர்களின் ஓய்வு நேரங்களில் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இதுவரை 400-க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறோம். மிகுந்த பயத்துடன் வருபவர்கள், மருத்துவர்களிடம் பேசிய பிறகு தெளிவாகிவிடுகின்றனர்.
இதன் மூலம் உடல்நிலை சற்று மோசமாக இருப்பவர்களை எல்லாம் உடனடியாகக் கண்டறிந்து மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். ஆன்லைன் வழியாக நடப்பதால் இதை ஒருங்கிணைக்கும் பணிகளில் சில கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். அதனால் இந்தி, கன்னடம் என்று எந்த மொழியாக இருந்தாலும் மொழிப்பெயர்ப்பு உதவியுடன் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம்.
ஆலந்துறை என்ற கிராமத்தில் எந்த வசதியும் கிடைப்பதில்லை என்று ஒருவர் ஆதங்கத்துடன் ஆடியோ வெளியிட்டிருந்தார். அவரை ட்ராக் செய்து பேசியதில், அவரும் எங்கள் அணியில் அங்கம் ஆகிவிட்டார். அவர் மூலம் அந்தக் கிராமத்தில் சிலருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்” என்றார்.
மருத்துவர் அகிலா, ``கொரோனாவால் மக்கள் அனைவரும் தனித்துவிடப்பட்டது போன்ற ஒரு சூழலில் இருக்கிறார்கள். அறியாமையால் பலர் காயமடைகின்றனர். தவறான விஷயங்களைப் போட்டு குழப்பிக்கொள்கின்றனர். சுற்றி நடப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் கேட்டு, அதனாலும் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. சூடாக ஆவி பிடித்தால் பாதிப்பு இருக்காது என்று சிலர் கூறியதைக் கேட்டு, மூக்கு வெந்துபோய் எல்லாம் வந்தனர் மக்கள்.
கண்ணன், இந்தப் பணியில் இணைந்துள்ள மருத்துவர்கள் என நாங்கள் எல்லாம் பள்ளியில் இருந்து நண்பர்கள். வெளிநாட்டில் இரண்டாவது அலை முடிந்துவிட்டதால், என் மருத்துவ நண்பர்கள் இந்த முன்னெடுப்புக்கு உதவி செய்யத் தயாராக இருந்தனர். எங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இந்த முயற்சி.
அரசாங்க விதிகளை நாங்கள் முழுமையாகக் கடைப்பிடிக்கிறோம். யாருக்கும் மருத்துவக் குறிப்புகள் வழங்குவதில்லை (prescription). காரணம், நாம் அப்படி ஏதாவது கொடுத்து பழைய மருந்தை நிறுத்தி வேறு பாதிப்புகள் வந்துவிடக் கூடாது. அறிவியல் பூர்வமாக எங்களுக்குத் தெரிந்த விளக்கங்களை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி வருகிறோம். சரியான தகவல்களைக் கொடுத்தால் ஆபத்தான கட்டத்துக்கு முன்பு காப்பாற்றிவிடலாம் என நம்புகிறோம்.
தடுப்பூசி போட்டுக்கொள்வது எந்தளவுக்குப் பயனளிக்கும் என்பதை பல காலகட்டங்களில் பார்த்திருக்கிறோம். அதுகுறித்து விழிப்புணர்வு செய்கிறோம். எங்கள் அணியில் இருப்பவர்கள் மூலம் மருத்துவமனைப் படுக்கைகள், உணவு போன்றவற்றுக்கும் வழிகாட்டுகிறோம்.
இந்தியாவில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் எங்களிடம் ஆலோசனை கேட்கலாம். தயவு செய்து அனைவரும் வீட்டில் இருங்கள். அரசு விதிகளைப் பின்பற்றுங்கள். மக்களை பாதுகாப்பதற்காகத்தான் விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. எல்லா உயிர்களும் மிக மிக முக்கியம். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிக்கடி சோதனை செய்து கொள்ளலாம்.
பல்ஸ் ஆக்ஸி மீட்டரை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
ஆக்ஸிஜன் அளவு 94 இருக்க வேண்டும். 3 நிமிடம் நடந்து விட்டு மீண்டும் செக் செய்ய வேண்டும்.
ஆக்ஸிஜனை 94 என்றளவில் சீராக இருக்க வேண்டும்.
மாஸ்கை சரியாக அணியுங்கள்” என்றார்.
குழப்பங்களும் அச்சமும் சூழ்ந்துள்ள இந்தப் பெருந்தொற்று சூழலில் மக்களுக்கு நம்பிக்கையும் விழிப்புணர்வும் கொடுக்கும் இந்த நண்பர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்!
YANA-வில் ஆலோசனை பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர், ``நான் டபுள் மாஸ்க் போட்டு மிகவும் பாதுகாப்புடன்தான் இருந்தேன். ஆரம்பத்தில் ஒரு வாரத்துக்கு சளி பிடித்திருந்தது. காய்ச்சல், உடல் வலிதான் அறிகுறி என நினைத்துவிட்டு விட்டேன். ஆனால், ஒரு நாள் இரவு தூங்க முடியவில்லை. காய்ச்சல், உடல்வலி வந்துவிட்டது. டெஸ்ட் எடுத்தேன். பாசிட்டிவ் ஆகிவிட்டது.
என் மனைவிக்கும் பாசிட்டிவாகிவிட்டது. அது சற்று அதிர்ச்சியாகதான் இருந்தது. எங்களின் அடிப்படை தேவைகளுக்கே சிரமப்பட்டோம். நண்பர் மூலமாக YANA பற்றி தெரிந்து ஆலோசனை பெற்றேன். எங்களுடைய சந்தேகங்களை எல்லாம் தெளிவுபடுத்தினர்.
அதன் பிறகு அருகில் இருந்த கேர் சென்டருக்கு வந்துவிட்டோம். எங்களால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாகவே இருந்தோம். நாங்கள் முயற்சி செய்தே 2 மணி நேரத்தில் மருத்துவரிடம் அப்பாய்மென்ட் கிடைத்துவிட்டது. ஆரம்பத்தில் என்ன செய்தென்று தெரியாமல் இருப்பவர்கள் இவர்களிடம் ஆலோசனை செய்து மிகவும் உதவியாக இருக்கும்.
லேசான அறிகுறி இருந்தாலே டெஸ்ட் எடுத்து தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. கொரோனா உறுதியானவர்கள் முதலில் பயப்படக் கூடாது. மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும். நம்மால் அடுத்தவருக்கு பரவக்கூடாது என்ற விழிப்புணர்வு இருந்தாலே போதும். தடுப்பூசியும் போட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.
உங்கள் கையில் ஸ்மார்ட் போனில் Zoom Application இருந்தால் இந்த ஆலோசனையைப் பெற முடியும். பிறகு, https://yanaindia.org/ என்ற இணையதளத்துக்கு சென்று அதில் Make an appointment என்ற இணைப்பை கிளிக் செய்து, உங்கள் தகவல்களை நிரப்பினால் போதும். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் மருத்துவர்களை பிடித்து, இந்த நேரத்தில் Zoom ஆப்பில் வரவும் என்று அதற்கான லிங்கை உங்கள் எண்ணுக்கு அனுப்பிவிடுவார்கள். இதற்கு எந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-friends-started-yana-initiative-to-guide-people-in-this-pandemic
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக