Covid question: குழந்தையின்மைக்கான சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? தடுப்பூசி போடுவதால் கருத்தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் வருமா?
- சிவராமன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
``நிச்சயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கருத்தரிக்கும் முயற்சிகளில் இருப்போருக்கு கொரோனா தடுப்பூசிகளால் எந்தப் பிரச்னையும் வந்ததாக தற்போதுவரை தகவல்கள் இல்லை. ஒருவேளை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகுதான் அந்தப் பெண்ணுக்கு, தான் கருத்தரித்திருப்பதே தெரிய வந்தது என்றாலும் பிரச்னையில்லை. பயந்துகொண்டு கருவைக் கலைக்கத் தேவையில்லை. நம்மிடையே இருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ, குழந்தை குறைகளுடன் பிறந்ததாகவோ எந்தத் தகவலும் இல்லை.
இனிமேல்தான் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்ளப் போகிறவர்கள் என்றால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு அதன் பிறகு கருத்தரிக்கலாம்".
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்போர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
- இளஞ்செழியன் (விகடன் இணையத்திலிருந்து)
``நிச்சயம் போட்டுக்கொள்ளலாம். அனீமியாவுக்கும் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை ஆபத்தான அறிகுறி. அதை கவனிக்காமலோ, முறையான சிகிச்சை மேற்கொள்ளாமலோ தவிர்க்காதீர்கள். ரத்தச்சோகை இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எல்லாவித தொற்றுகளும் எளிதில் பாதிக்கும் என்பதால் உடனடியாக அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/will-covid-vaccines-have-any-impact-on-fertility-doctor-clarifies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக