`இந்தியன்’ படத்தில் மனோரமா கேரக்டர், தன் கணவர் உயிர் இழந்ததற்கான இழப்பீட்டுத் தொகையை வாங்கச் சென்ற இடத்தில் லஞ்சம் கேட்பது தாங்காமல், `பிணத்தோட வாயில இருக்கிற அரிசியைக்கூடப் பிடுங்கித் தின்னுவீங்கடா’ என்று மண் அள்ளி சாபம் விடுவார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பெயரால் சமூகத்தை ஏமாற்றிக்கொண்டிருப்பவர்களையும் இப்படித்தான் வசைபாடத் தோன்றுகிறது நமக்கு.
கொரோனா இரண்டாம் அலையில் குழந்தைகள் சிலர், தங்கள் பெற்றோர்களை இழந்திருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்தக் குழந்தைகளின் பெயரால் பலரிடம் இருந்து பணம் பறித்துக்கொண்டிருக்கிறார்கள் சமூக விரோதிகள் சிலர் என்கிற பகீர் தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளரான தேவநேயன். `கொரோனா கால தத்தெடுப்பு தொடர்பான வாட்ஸ் அப் மெசேஜ்களின் பின்னணியில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று அவரிடம் கேட்டோம்.
``வாட்ஸ் அப்பில் ஒரு குழந்தையின் புகைப்படத்துடன் `இந்தக் குழந்தையின் பெற்றோர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டார்கள். இந்தக் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்ற வாசகங்களுடனும் மொபைல் எண்ணுடனும் பல மெசேஜ்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மெசேஜ்களை நம்பியும் அந்தக் குழந்தைகளின் மீது இரக்கப்பட்டும், பலர் அதை ஃபார்வேர்டு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த முறையில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடியாது என்பதும், ஒரு குழந்தையின் புகைப்படத்தை இப்படிப் பொதுவெளியில் பகிர்வது சட்டப்படி குற்றம் என்பதும் ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த மெசேஜ்களிலிருக்கிற அந்தக் குழந்தைகளின் உறவினர்களுடைய செல்போன் எண்ணை நீக்கிவிட்டு, சமூக விரோதிகள் சிலர் தங்களுடைய செல் நம்பரை சேர்த்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் குழந்தைகள் மீது இரக்கப்பட்டும் தத்தெடுப்பது தொடர்பான சட்ட செயல்பாடுகள் தெரியாமலும் அந்த எண்ணுக்கு போன் செய்பவர்களிடம் சில ஆயிரங்களைப் பறித்துக்கொண்டு, அந்த சிம்மை மாற்றிவிடுகிறார்கள் இந்த விஷமிகள். இது தமிழகம் முழுக்க நடந்துகொண்டிருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பெருந்தொற்று நேரத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் புகைப்படத்தை வைத்துச் சம்பாதிப்பவர்களை என்னவென்று சொல்வது’’ என்று வருத்தப்பட்டவர் தொடர்ந்தார்.
Also Read: Covid Questions: ஹார்ட் அட்டாக் வந்து ஸ்டென்ட் வைத்தவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?
``இளம் சிறார் நீதி சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தையும் பெயரையும் அவர்களைப் பற்றிய தகவல்களையும் சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, ஊடகங்களில் வெளிப்படுத்துவதுகூட குற்றம்தான். இப்படியொரு செய்தியை வெளியிட்ட நான்கு ஊடகங்களுக்குக் கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்தது. கொரோனாவாலோ, மற்ற காரணங்களாலோ ஒரு குழந்தை தன் பெற்றோர்களை இழந்துவிட்டால், உடனடியாக 1098 என்ற எண்ணுக்கு தகவல் அளியுங்கள். அவர்கள், அக்குழந்தையைக் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பார்கள். இந்த நலக்குழு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிறது.
Also Read: Covid Questions: தடுப்பூசி போட்ட சில நாள்களில் டிடி ஊசி போட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
இந்த நலக்குழு `பெற்றோரை இழந்த குழந்தையை, அதனுடைய நெருங்கிய உறவினர்கள் யாராவது சரியான முறையில் வளர்ப்பார்களா... இந்தக் குழந்தையைத் தவறான நோக்கத்தில் தத்தெடுக்க முயல்கிறார்களா’ என்பதை ஆய்வு செய்யும். அதன் முடிவு பாசிட்டிவ்வாக இருக்கிறபட்சத்தில் அவர்களிடம் குழந்தையைத் தத்துக்கொடுப்பார்கள். அந்தப் பாதுகாவலர்களுக்கு `மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு’ மாதம்தோறும் ஒரு தொகையை வழங்கும். தவிர, பாதுகாவலரிடம் ஒப்படைக்க குழந்தைக்கு `ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்னை வருகிறதா’ என்பதைக் கண்காணித்துக்கொண்டும் இருப்பார்கள். இதுதான் நடைமுறை. இதைத் தவிர்த்து, இரண்டு பேரை சாட்சி வைத்துக்கொண்டு, பாண்டு பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டால் அது தத்தெடுப்பு கிடையாது. ஒருவேளை, பணத்தைக் கொடுத்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்தீர்களென்றால், உங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’’ என்கிறார் தேவநேயன்.
இரக்க குணத்தால் ஏமாந்து விடாதீர்கள் மக்களே!
source https://www.vikatan.com/social-affairs/crime/activist-warns-about-whatsapp-scam-regarding-child-adoption-during-pandemic
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக