Ad

திங்கள், 31 மே, 2021

மும்பை: `எங்கள் 16 வயது மகளை தடுப்பூசிக்காக அமெரிக்கா செல்ல அனுமதியுங்கள்!' - பெற்றோர் மனு

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால் சில பெற்றோர் 18 வயதுக்கு உட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட விரும்புகின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. மும்பையின் தென் பகுதியில் வசிப்பவர் விரல். இவரின் மனைவி பிஜல் தக்கர். இவர்களுக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். அவர்களின் மகள் அமெரிக்காவில் பிறந்தவர். எனவே அவருக்கு அமெரிக்காவில் நிரந்த குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. தற்போது மும்பையில் தன் பெற்றோருடன் தங்கி இருக்கிறார். அப்பெண்ணிற்கு அமெரிக்கா சென்று கொரோனா தடுப்பூசி போட அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

இதற்காக அப்பெண்ணுடன் அவரின் சித்தியை அனுப்பி வைக்க பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது சொந்த நாட்டிற்குச் செல்லும்போது அவர் மைனராக இருக்கும்பட்சத்தில் அவருடன் அமெரிக்காவை சேராத ஒருவரும் அமெரிக்காவிற்குச் செல்ல முடியும். இந்த விதியை பயன்படுத்தி அப்பெண்ணுக்கு அவரின் சித்தி பூர்வா பாரிக்கை சட்டபூர்வ பாதுகாவலராக நியமிக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அப்பெண்ணின் பெற்றோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பூர்வாவை தங்கள் மகளின் சட்டபூர்வ பாதுகாவலராக நியமித்து கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

``11ம் வகுப்பு படிக்கும் எங்கள் மகளுக்கு பள்ளி ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு அமெரிக்கா சென்று தடுப்பூசி போட போதிய கால அவகாசமிருக்கிறது. அமெரிக்காவில் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள 21 நாள்கள் அங்கு தங்கி இருக்கவேண்டியிருக்கிறது.

என் பெற்றோர் சமீபத்தில்தான் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாங்கள் அவர்களுடன் இருக்கவேண்டியிருக்கிறது. அவர்களை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டியிருக்கிறது. எனவே எங்களால் எங்கள் மகளுடன் அமெரிக்காவிற்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது.

மும்பை உயர்நீதிமன்றம்

என் மகளுடன் அமெரிக்கா சென்று வர பூர்வா முன்வந்துள்ளார். 14 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் அமெரிக்காவிற்கு விமானத்தில் தனியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், எங்கள் மகளை தனியாக அனுப்புவது பாதுகாப்பாக இருக்காது என்று உணர்கிறோம். எனவே பூர்வாவை எங்கள் மகளின் சட்டபூர்வ பாதுகாவலராக நியமித்து உத்தரவிடவேண்டும். இதன் மூலம் சட்டப்படி பூர்வா எங்கள் மகளுடன் அமெரிக்கா சென்று வர முடியும்'' என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்'' அந்தப் பெற்றோர்.

இம்மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.



source https://www.vikatan.com/news/india/mumbai-parents-request-bombay-hc-to-allow-their-daughter-to-go-usa-to-get-vaccinated

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக