2020-ம் ஆண்டின் இறுதி வரை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்துவந்த தங்கத்தின் விலை புதுவருடத்தில் அதிரடியாகக் குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்துவந்தது.
தொடர்ந்து சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்த தங்கத்தின் விலை இரண்டு நாள்களாக அதிகரித்தே காணப்படுகிறது. அப்படியாக, நான்கு மாதங்களுக்குப் பின் சவரன் தங்க நகை ரூ. 37,000-ஐ தாண்டியிருக்கிறது. இந்தத் திடீர் மாற்றங்கள் குறித்து ஈரோட்டிலுள்ள ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதனிடம் பேசினோம்.
``கொரோனா பேரிடர் காலத்தில் உலகளவில் நிலையற்ற பொருளாதார சூழல் நிலவிவருகிறது. அதனால் தங்கத்தைப் பாதுகாப்பானதாகக் கருதி அதிக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். தற்போது இந்தியாவில் நகைக்கடைகள் செயல்படவில்லை என்றாலும் தங்கத்தின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. கொரோனா சூழலில் இந்திய ரூபாய் மதிப்பு சற்று குறைந்திருக்கிறது. இன்னொரு பக்கம், டாலர் மதிப்பு அதிகரித்திருக்கிறது. இதுவும் தங்கத்தின் விலை ஏறியிருப்பதற்கு முக்கிய காரணம்.
கொரோனா சூழலில் தங்கத்தின் ஏற்ற இறக்கத்தைக் கணிக்க முடியாததாகவே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தங்கத்தின் விலை இன்னும் சற்று அதிகரிக்கும். தங்கத்தைப் பொறுத்தவரை எந்த அளவுக்கு விலை அதிகரிக்கிறதோ அதே அளவுக்கு நிச்சயம் குறையும்.
கொரோனா முதல் அலையின் தாக்கத்தின்போது உலகளவில் தங்கத்தின் விலை ஏறியது. மேலும் விலை அதிகரித்துக்கொண்டே போய்விடுமோ எனும் பீதியில் அவசரமாகத் தங்கத்தை மக்கள் வாங்கினர். யாரும் சற்று எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை அதன்பின் குறைய ஆரம்பித்தது. அதனால் அவசரப்பட்டுவிடாமல் பொறுமையாக இருந்து தங்கம் வாங்குவது புத்திசாலித்தனம்" என்கிறார் அவர்.
source https://www.vikatan.com/business/finance/once-again-gold-price-get-increased-is-it-right-time-to-buy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக