தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3116 நபர்களில் 2300 பேர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள திரைப்பட நாடக நடிகர்களாக இருக்கிறார்கள். இந்த கொரோனா காலக்கட்டத்தில் எந்த வித உதவியும் இல்லாமல், நிற்கதியாக நிற்கும் எங்களை, வசதி படைத்த சக நடிகர்,நடிகைகள் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லையே” என்கிற வருத்ததோடு நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் வாட்ஸ் அப் தகவல்களாக சென்றுள்ளது.
இது குறித்து முதலில் நடிகர் சங்கத்திற்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். “ 2015-ம் ஆண்டு நடிகர் சங்கத்தின் தேர்தல் பெரும் சட்டப்போராட்டத்திற்குப் பிறகே நடந்ததது. அதில் விஷால் தலைமையிலான அணி பதவிக்கு வந்த பிறகு, 200 கோடி மதிப்பிலான நடிகர் சங்கத்தின் சொத்துக்களை மீட்டு, நடிகர் சங்கத்திற்குப் புதிய கட்டிடமும் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் 2018-ம் ஆண்டு மீண்டும் நடிகர் சங்கத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் மீண்டும் விஷால் தலைமையிலான அணியும், அதற்கு எதிராக ஐசரி கணேசன் தரப்பில் ஒரு அணியும் போட்டியிட்டது. 83 சதவீதம் வாக்குப்பதிவுடன் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதற்கு மறுதினமே சில நடிகர்கள் நீதிமன்றத்தில் தேர்தல் முடிவுக்கு எதிராக வழக்கு போட்டதால் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கண்காணிக்க, கண்காணிப்பு அதிகாரியையும் நீதிமன்றம் அமைத்துள்ளது.
இதுதான் இப்போது சிக்கலாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் ஷூட்டிங் நடக்காமல் போனதால், நடிகர், நடிகைகள் பலரும் பெரும் நெருக்கடியை சந்தித்தனர். பல நடிகர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை வந்தபோது, பூச்சி முருகன் தலைமையில் சில நடிகர்கள், சங்க நிர்வாகத்தை கண்காணிக்கும் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து 44 லட்சம் பணம் நிவாரணத் தொகையைாக வாங்கி 2000 திரைப்பட நாடக நடிகர்களுக்கு வழங்கினார்கள்.
இந்த ஆண்டு மீண்டும் ஊரடங்கு போடப்பட்டதால் மீண்டு்ம் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக சினமா ஷூட்டிங் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் என்றால் பண வசதி படைத்தவர்கள் என்கிற எண்ணம் மக்களிடம் உள்ளது. தற்போது நடிகர் சங்கத்தில் உள்ளவர்களில் பத்து சதவீதம் பேர்தான் வசதி படைத்தவர்கள். மீதம் உள்ளவர்கள் தினக்கூலிகளைப் போலத்தான். நடிக்கப் போனால்தான் வாழ்க்கை என்கிற நிலை இருக்கிறது.
இப்போதுள்ள கடினமான சூழ்நிலையில் திரைப்பட நாடக நடிகர்கள் பலர் வாழ்வாதரத்திற்கே கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கவில்லை. பல நடிகர்கள் மருத்துவச் செலவைக்கூட செய்ய முடியாமல் மரணம் அடைந்துள்ளார்கள். இந்த நேரத்தில் எங்களுக்கு கைகொடுக்கவேண்டிய பெரிய நடிகர்கள் ஃபெப்ஸி அமைப்பிற்கு நிதி உதவி செய்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதில் தவறில்லை. ஃபெப்ஸி அமைப்பில் தென்னிந்திய நடிகர் சங்கம் அங்கம் வகிக்கவில்லை என்கிற விவரமே பல நடிகர்களுக்கு தெரியவில்லை.
ஃபெப்ஸி 24 தொழிலாளர் சங்கங்களை உள்ளடக்கியது. அதில் பல சங்ககங்கள், அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்திலும் பதிவாகியுள்ளது. ஆனால் நடிகர் சங்கத்தில் 300 பேர் மட்டுமே அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதுதான் அடிப்படையான சங்கம். அந்தச் சங்கத்திலிருந்துதான் சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலரும் அங்கம் வகித்தனர்.
ஃபெப்ஸி அமைப்புக்கு நிதி உதவி அளித்தால் அது நடிகர்களுக்கும் கிடைத்துவிடும் என்கிற எண்ணம் பெரிய நட்சத்திரங்களிடம் உள்ளது. உண்மையில் அது டெக்னீசியன் உள்ளிட்ட 24 சங்கங்களின் உறுப்பினர்களுக்கு மட்டுமே பலன் உண்டு. நடிகர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. கஷ்டப்படும் நடிகர்களுக்கு அரசு தரப்பு மூலமும் பெரிதாக எந்த உதவியும் வரவில்லை. எனவே ஃபெப்ஸிக்கு கொடுப்பதை போன்று நடிகர் சங்கத்திலுள்ள உறுப்பினர்களுக்கும் நிதி உதவி செய்தால் பலரது குடும்பங்கள் காப்பாற்றப்படும் என்கிற உருக்கமான கோரிக்கை திரைப்பட நாடக நடிகர்களிடம் உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் 130க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களில் 40 பேர் கொரோனா காரணமாகவும், பலர் வேறு பல உடல் நலக்குறைவாலும் இறந்திருக்கிறார்கள். இவர்களுக்கு சங்கத்திலிருந்து பெரிய அளவிலான எந்த உதவியும் கிடைக்கவில்லை” என்கிறார்கள்.
திரைப்பட, நாடக நடிகர் வித்யா நம்மிடம் “ பதினைந்து வருடமாக ஜூனியர் ஆர்டிஸ்டா இருக்கேன். தினமும் ஷூட்டிங் போனாதான் எங்களுக்கு வருமானமே, ஆனால் ஷூட்டிங் நடப்பதற்கே இப்போது தடையானால் எங்கள் நிலைமையை நினைச்சுப்பாருங்க. வாடகை கொடுக்க முடியல. பெரிய நடிகர்கள் எல்லாம் ஃபெப்ஸிக்கு உதவி பண்றாங்க. அது தப்பில்ல, அவர்களோடு இணைந்து நடிக்கும் ஜீனியர் நடிகர்கள் நிலையையும் சேர்த்து நினைத்துப் பார்க்கணும்ல. அதுதான் எங்களுக்கு வருத்தமா இருக்கு, யாரிடம் போய் உதவி கேட்பது என்று புரியாமல் தவித்து வருகிறார்கள். நடிகர் சங்கம் செயல்பாட்டில் இல்லாமல் இருப்பதால் சங்கத்திடம் முறையிடவும் முடியல. அரசாங்கம் தரப்பிலும் எந்த உதவியும் இல்லை. இப்படி கண்ணீராக கழிகிறது எங்கள் வாழ்க்கை” என்று கண்ணீர் விடுகிறார்.
நடிகர் சங்கத்தில் பொறுப்பில் யாரும் இல்லை என்பதால் அந்த சங்கத்தில் ஏற்கனவே பொறுப்பில் இருந்த சிலரிடம் பேசியபோது “நடிகர் சங்கம் முழு செயல்பாட்டில் இருந்திருந்தால், சக நடிகர்களுக்கு இந்த நிலை வந்திருக்காது. ஆனால், சிலரது சொந்த விருப்பு வெறுப்புக்காக நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு சங்கச் செயல்பாட்டை முடக்கி விட்டார்கள். இதனால் நடிகர் சங்கம் மூலம் யாருக்கும் உதவிசெய்ய முடியாமல் உள்ளது. கடந்த ஆண்டே அதிகாரிகளிடம் கெஞ்சியே சங்கப்பணத்தை சிறிதளவு வாங்கிக் பிரித்துக்கொடுத்தோம். வேகமாக நடந்துவந்த சங்கக் கட்டிடம் கட்டும் பணிகளும் நின்றுபோய் உள்ளது. உண்மையில் பல நடிகர்கள் உதவி செய்ய முன்வந்தாலும் யார் மூலம் உதவியை கொண்டுச் சேர்ப்பது என்கிற யோசனையில் அமைதியாகவும் இருந்துவிடுகிறார்கள். உண்மையில் இந்தக் கொரோனா காலத்தில் நடிகர்கள் பலரது வாழக்கை நாதியற்ற நிலையில் இருக்கிறது என்பது உண்மைதான்.” என்கிறார்கள்.
சக நடிகர்களின் கண்ணீரைத் துடைக்க கரங்களை நீட்டுவார்களா ஸ்டார் நட்சத்திரங்கள்?
source https://www.vikatan.com/government-and-politics/cinema/junior-artists-and-playwrights-live-in-difficulty-during-the-corona-period
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக