Ad

திங்கள், 31 மே, 2021

வாணக்காரர் பாய் பட்டாசு... தொள தொள தாத்தா சட்டை..! - தீபாவளி ஃப்ளாஷ்பேக் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என்னுடைய பால்ய வயதுகளில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் என்பது மிக இனிமையான மறக்க முடியாத நினைவுகள். புது உடை, தீபாவளி பலகாரங்கள் மற்றும் பட்டாசு எனப் பல நினைவுகள் மறக்க முடியாதவை.

இரட்டை நகரம் போல இரட்டை கிராமம் என்று சொல்லலாம். இரு வேறு பஞ்சாயத்துகளைச் சேர்ந்த இரு கிராமங்கள் எந்த எல்லைக் கோடும் இல்லாமல் ஒரே ஊராகவே பார்ப்பவர்களுக்குத் தெரியும். அதுபோன்று எங்கள் கிராமத்தின் அடுத்து உள்ள பகுதிக்குக் காவேரிபாளையம் என்று பெயர். ஏன் அந்தப் பெயர் வந்தது என்ற பெயர்க் காரணம் எனக்குத் தெரியவில்லை. எங்கள் ஊரிலிருந்து காவிரி ஆறு நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதனால் இந்தப் பெயர் வந்ததா என்று தெரியவில்லை.

தாத்தா - Representational Image

காவேரிபாளையத்தில் சுமார் முப்பது இஸ்லாமியக் குடும்பங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் வாணக்காரர் குடும்பம். வாணக்காரர் வீடு என்று சொல்வார்கள். இரு சகோதரர்கள் இணைந்து குடும்பமாகப் பட்டாசு மற்றும் வாண வெடிகள் செய்யும் தொழில் செய்து வந்தார்கள் (இப்பொழுதும் அதில் ஒருவர் மட்டும் தீபாவளி சமயம் பட்டாசு விற்பனை செய்துவருகிறார்). சித்தாம்பூர் வாண வெடி என்பது அன்றைய காலகட்டத்தில் எங்கள் பகுதியில் மிகப் பிரபலம். பல ஊர்த் திருவிழாக்களுக்கு வாண வேடிக்கை நிகழ்வுக்கு இவர்கள் செல்வார்கள். பலமுறை போட்டி வாண வேடிக்கையில் பரிசுகளையும் வென்றிருக்கிறார்கள். அவருடைய மகன் புதுவிதமான வாண வெடிகளைச் செய்வதற்கு முயற்சி செய்துகொண்டே இருப்பார்.

தீபாவளிக் கொண்டாட்டங்களில் முதலாவதாக பட்டாசு.

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கையில் எங்கள் அப்பாவிடம் ஒரு இருபது அல்லது முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு வாணக்கார பாய் (இஸ்லாமிய சகோதரர்களைப் பொதுவாகக் குறிப்பிடும் வார்த்தை) வீட்டிற்கு நானும் என் அண்ணாவும் செல்வோம். எங்களைப் பார்த்ததும் அந்தப் பெரியவர் "வாய்யா மாப்ள..." என்று உரிமையுடன் அழைப்பார். எங்கள் ஊரிலுள்ள அனைத்து இஸ்லாமியக் குடும்பங்களும் பிற மதத்தினரை மாமன் மச்சான் முறை வைத்துதான் கூப்பிடுவார்கள். அதற்கான காரணம் எனக்குத் தெரியாது. ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சியும் ரமலான் அன்று பிரியாணியும் தவறாமல் கொடுத்தனுப்புவார்கள். ஊர்த் திருவிழாக்களின் போது கோவிலுக்கு வந்து அனைத்து விதமான கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்துக்கொள்வார்கள்.

Kids - Representational Image

"வெடி வாங்க வந்தோம்..." என்று நாங்கள் சொன்னவுடன் நாங்கள் கொண்டு செல்லும் பையில் பட்டாசுகளை நிரப்பிக் கொடுப்பார்கள். என்னுடைய அப்பாவும் அவரும் நண்பர்கள் என்ற காரணமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. யானை வெடி, லட்சுமி வெடி, சட்டி கலசம் (மண் சட்டியில் மருந்தை நிரப்பிப் பூச்சட்டி) பென்சில் எனப் பலவிதமான பட்டாசுகளைப் பையில் போட்டு எங்களிடமிருந்து நாங்கள் வைத்திருக்கும் குறைவான தொகையைப் பெற்றுக்கொண்டு கொடுப்பார். இன்றைக்கு நினைத்துப் பார்க்கையில் நிச்சயமாக நாங்கள் கொடுத்த தொகைக்கு அவர்கள் கொடுத்த பட்டாசின் அளவு மிக அதிகம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுபோன்ற மனிதர்களை கிராமங்களில் பார்க்க முடியும். பணத்தைவிட பழகிய பழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு திருவிழா சமயம் வெடி தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட ஒரு விபத்தினால் வாணக்கார பாயும் அவர் மனைவியும் இறந்து விட்டார்கள். எங்கள் ஊரிலுள்ள அனைவரும் வருந்திய துயரச் சம்பவம் அது.

அதுதவிர எங்களுடைய அப்பா எங்களுக்கு பிற பட்டாசுகளை (மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, கலசம், சாட்டை, சங்கு சக்கரம், பாம்பு மாத்திரை, பொட்டு வெடி எனப்படும் டாட் கேப், துப்பாக்கி, துப்பாக்கியில் போட ரோல் கேப், அணுகுண்டு, ராக்கெட் போன்றவை) முசிறியிலுள்ள சிந்தாமணி சிறப்பங்காடி பட்டாசுக் கடையில் நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய்க்கு (முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு இது மிகப் பெருந்தொகை) வாங்கி வருவார். வந்த பிறகு அதை நான்காகப் பிரித்து எங்களுக்குக் கொடுத்துவிடுவார். நாங்கள் அதைத் தனித்தனியாகப் பையில் போட்டு வைத்துக்கொள்வோம். பிறகு பகல் நேரங்களில் வெயிலடித்தால் செய்தித் தாளைக் கீழே பரப்பிக் காய வைப்போம் (அப்பொழுதான் அனைத்து வெடிகளும் நன்றாக வெடிக்கும்). இதெல்லாம் தீபாவளிக்கான முன்னேற்பாடுகள். பிறகு தீபாவளி நாளுக்காகக் காத்திருப்போம்.

Crackers - Representational Image

இரண்டாவதாக புதிய உடை.

அநேகமாக டெய்லரிடம் சென்று உடை தைத்து அணிந்த கடைசித் தலைமுறை நாங்களாகத்தான் இருப்போம்.

அன்றய காலகட்டத்தில் புதிய உடை என்பது வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே கிடைக்கும். ஒன்று தீபாவளி சமயம், மற்றொன்று பிறந்த நாளின் போது.

தீபாவளிப் புதுத்துணி உடுத்துவதற்காகக் கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவெளியில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் உற்சாகமான மனநிலையிலேயே இருப்போம். இன்றுபோல அதை ஒரு பெரிய பிரபலமான துணிக்கடையிலோ அல்லது ஆயத்த ஆடைகளாகவோ (Ready Made) எடுப்பதற்கான பொருளாதாரம் கிடையாது. என்னுடைய பெற்றோர் அரசுப் பணியில் இருந்ததனால் அவர்களுக்கு கோ ஆப் டெக்ஸ் (CO-OP Tex) எனும் அரசு நிறுவனத்தில் பண்டிகைக்குத் தேவையான துணிகளை எடுத்துக்கொள்ளலாம். அதற்கான தொகையை மாதத் தவணையாகச் செலுத்திக்கொள்ளும் வசதி உண்டு. முசிறியில் உள்ள அந்தக் கடையிலேயே எங்கள் தீபாவளி உடைகள் எடுக்கப்படும். எனக்கும் என்னுடைய அண்ணாவிற்கும் ஒரே துணியில் மேல் சட்டை மற்றும் அரைக்கால் டவுசர் எடுப்பார்கள். என்னுடைய சகோதரிகளுக்கும் அதுபோலவே ஒரே துணியில் பாவாடை சட்டை எடுத்துத் தைப்பார்கள். கிட்டத்தட்ட பள்ளிச் சீருடை போன்று (Uniform) இருக்கும்.

டெய்லரிடம் அளவு கொடுப்பதற்காக எங்களையும் அழைத்துச் செல்வார்கள். அப்போது முசிறி கடை வீதியில் ஸ்டைலோ டெய்லர் (Stylo Tailor) என்ற கடையிலேயே எங்களுக்கு உடைகள் தைக்கப்படும். அழகாக அளவெல்லாம் எடுத்துவிட்டு கடைசியில் எனக்கும் என் அண்ணாவிற்கும் ஒரே அளவில் தைத்துவிடுவார். அதன் காரணத்தை இன்று யோசித்துப் பார்த்தால் தைப்பதற்கு முன் துணி வெட்டுவதற்கான நேரத்தை மிச்சப் படுத்துவதற்காக அவர் அவ்வாறு செய்திருப்பாரோ என்று தோன்றுகிறது. புதுத் துணி உடுத்தப் போகிறோம் என்ற ஆர்வத்தில் அளவெல்லாம் சரியாக இருக்கிறதா என்று எப்போதும் யோசித்ததில்லை. சற்றுப் பெரிதாக இருந்தாலும் சுருட்டி அரைஞாண்கயிறில் மாட்டி கீழே விழாதவாறு உடுத்திக்கொள்வோம். மேல் சட்டைக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை. என்ன ஒன்று, சற்று தொள தொளவென தாத்தா சட்டை போல இருக்கும். அதுவும் தீபாவளிக்குள் தைத்துக் கொடுத்துவிடுவார்களா என்ற பதற்றம் துணிகள் தைத்து நம் கைக்கு வரும் வரை இருக்கும். ஒரு வழியாக தீபாவளிக்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு உடைகள் எங்கள் கைக்கு வரும்.

Kids - Representational Image

மூன்றாவதாக தீபாவளிப் பலகாரங்கள்.

தீபாவளி தொடங்க பத்து நாள்கள் இருக்கும்போது எங்களுடைய அம்மா பலகாரம் தயாரிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்வார். முறுக்கு செய்ய மாவரைப்பது, அதிரசத்திற்கு மாவு இடிப்பது, பின் அதிரச மாவுடன் வெல்லப் பாகு கலந்து அதிரச மாவைக் கிளறி ஒன்றிரண்டு நாள்களுக்கு ஊற வைத்து பின்பு அதிரசம் மற்றும் முறுக்கு சுடுவார்கள். பூந்தி மற்றும் லட்டு செய்வார்கள். எங்களுக்குத் தேவையான தின்பண்டங்கள் அந்தப் பத்து நாள்களுக்கு திகட்டத் திகட்டக் கிடைக்கும்.

தீபாவளி அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு வடைக்குத் தேவையான கடலைப் பருப்பையும் உளுந்தம் பருப்பையும் ஊறவைத்து விட்டு உறங்கி அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து அப்பாவும் அம்மாவும் ஆட்டுரலில் (அப்பொழுது எங்கள் வீட்டில் மாவரைக்கும் இயந்திரங்கள் கிடையாது) வடைக்கு மாவு ஆட்டுவார்கள். அனைத்தையும் ரெடி செய்த பின் நான்கு மணி வாக்கில் பலகாரம் சுடத்தொடங்குவார்கள். அனைத்தும் தயாராகிக் கொண்டிருக்கும்போதே ஐந்து மணிக்கு எங்களை எழுப்பிவிடுவார். நாங்கள் பட்டாசு வெடிக்கத் தொடங்குவோம்.

தீபாவளி பலகாரங்கள் | Representational Image

ஆறு மணிக்கு பட்டாசு வெடித்து முடித்தவுடன் அனைத்தும் தயாராக இருக்கும். புதிய உடைகள், பலகாரம் மற்றும் நல்லெண்ணெய் சிகைக்காய் தூள் வைத்து சாமி கும்பிட்டு விட்டு அனைவருக்கும் எண்ணை தேய்த்து விடுவார்கள். பின்பு சிகைக்காய் தேய்த்துக் குளித்துவிட்டு, புத்தாடை எடுத்து அணிந்துகொண்டு இறைவனை வணங்கிவிட்டு ஏழு மணி வாக்கில் சாப்பிட அமர்வோம். சிறிது நேரம் கழித்து புத்தாடையுடன் வெடிகளை வெடிப்போம். ஒருவழியாக இரவு மீதமிருக்கும் மத்தாப்பு, பூக்கலசங்கள் போன்றவற்றை வெடித்து விட்டு, கொஞ்சம் பட்டாசுகளைக் கார்த்திகை தீபத்தன்று வெடிப்பதற்காக எடுத்து வைத்து விட்டு ரசம் சாதம் சாப்பிட்டு விட்டு உறங்கச் செல்வோம். அந்த வருட தீபாவளி நினைவுகளை மகிழ்ச்சியுடன் அசைபோட்ட படி அடுத்த வருட தீபாவளி பற்றிய எண்ணத்துடன் தூங்குவோம்.

இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு காத்திருந்து அனுபவிப்பதில் உள்ள நிறைவும் மகிழ்ச்சியும் (Satisfaction and Happiness) புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால், நான் மேற்சொன்ன எதற்காகவும் இன்று அவர்கள் காத்திருக்கத் தேவையில்லாத நிலை இருப்பதே அதற்கான காரணமாக இருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.

- ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/village-man-shares-about-his-nostalgic-diwali-memories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக