விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது சிறுவை கிராமம். இந்த கிராமத்தில்தான் இடுகாட்டிற்கு இறந்தவரின் உடலை எடுத்து செல்வதற்கு பாதை இல்லாததினால், பிணம் போன்ற பொம்மையை சாலையிலேயே வைத்து எரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, அந்த ஊரைச் சேர்ந்த செல்வதுரை என்பவரிடம் பேசினோம். "எங்க ஊர்ல சுமார் 500 குடும்பம் இருக்கு. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக மொத்தமாக 3 இடுகாடுகள் உள்ளது. ஊரின் ஒரு பகுதியில், பட்டியல் சமூகத்தினர் உள்ளனர். இவர்களுக்கு அதில் ஒரு இடுகாடு உள்ளது. அதனால் எந்தவிதமான பிரச்னையும் இல்ல. 300 குடும்பங்களைக் கொண்ட மூன்று வெவ்வேறு மாற்று சமூகத்தினர், ஊரின் மற்றொரு பகுதியில் ஒன்றரக் கலந்து வசிக்கிறோம். இதில் ஓரிரு குடும்பங்களை மட்டுமே கொண்ட ஒரு சமூகத்தினருக்கு சாலை ஓரமாகவே ஒரு இடுகாடு தனியாக உள்ளது.
பெருவாரியான குடும்பங்களை கொண்ட மற்ற இரு சமூகத்தினருக்கும் சேர்த்து ஒரு இடுகாடு உள்ளது. இந்த இரு சமூக மக்களுக்கான இடுகாட்டுக்கு போறதுக்கு தான் தலைமுறை தலைமுறையா பாதையில்ல. ஓரிரு குடும்பங்களை மட்டுமே கொண்ட அந்த மாற்று சமூகத்தினருக்கு சாலை ஓரமாகவே இடுகாடு இருகிறதால, எங்களின் இன்னல்களை புரிஞ்சிக்காமல், எங்கள் இடுகாடுக்கு பாதை அமைக்க வழி விடமாட்டேங்கிறாங்க. ஊரின் சாலை முடிவுல இருந்து சுமார் 1 கி.மீ தொலைவுக்கு பட்டா நிலத்தில தான் இறந்தவங்க பிணத்தை தூக்கிக்கிட்டு நடந்து போகணும். பாதை ஏதும் இருக்காது. சின்னதா வரப்பும், வாய்க்காலும் மட்டும்தான் இருக்கும். வரப்புக்கு இரண்டு பக்கத்துலயும், நெல்லு மற்றும் சவுக்கு நடவு செய்திருப்பாங்க. வயலில் இறங்கி நடந்து போக முடியாது என்ற காரணத்தினால பல்லாக்கு போன்ற ஜோடிப்பு எல்லாம் இறந்தவர்களுக்கு செய்வது கிடையாது. 'கை பாடை'யில் தான் தோளில் சுமந்து கொண்டு போகணும். மழைக்காலம் என்றால் சேரும், சகதியுமாக இருக்கும். இடுகாட்டுக்கு முன்னாடி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஓடை ஒன்னு இருக்கு. அதுல மழைவெள்ளம் வந்துடுச்சுன்னா இன்னும் கஷ்டமா இருக்கும்.
இதனால இடுகாட்டுக்கு போறதுக்கு பாதை வேண்டும் அப்படினு, பல வருஷமா கலெக்டர், சேர்மன், பி.டி.ஓ, எம்.எல்.ஏ என பலர் கிட்டயும் மனு கொடுத்திருந்தோம். ஆனா, பலன் இல்லாம இருந்துட்டு வந்துச்சு. கிராமசபை கூட்டத்தில் பாதை வேண்டும் என தீர்மானம் போட்டாலும் கிடப்பிலேயே தான் கிடைக்கும். அதனாலும் எந்தப் பயனும் இல்லை. ஊராட்சி மன்ற தேர்தலில் 'ஒருவர் ஜெயிச்சுட்டா... மற்றொருவர் வழி விட மாட்டேன்' அப்படி ஒருவருக்கொருவர் சொன்னபடியா காலம் போய்கிட்டு இருந்துச்சு. கடந்த 19ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிச்சி துரைசாமி(46) என்ற நபர் இறந்துட்டாரு. 'கை பாடை' கட்டி தான் தூக்கிட்டு போகணும் என்ற நிலை இருந்ததினால, எங்க ஊர்க்காரங்க சிலபேரை கூப்பிட்டோம். கொரோனா வைரஸ் பாதித்து இறந்தவர் என்ற காரணத்தினால, யாரும் பயந்துகிட்டு கிட்ட வரல. வெளியூரைச் சேர்ந்த அவங்க உறவுக்கார பிள்ளைங்க சிலரோட உதவியால, அந்த உடலைக் கஷ்டப்பட்டு எடுத்துக்கிட்டு போய் எரிச்சிட்டோம். அப்போதான் ஊர்க்காரங்க எல்லாம் இணைந்து 'இடுகாடுக்கு பாதை வேணும்' அப்படின்னு தீவிரம் காட்ட ஆரம்பிச்சாங்க.
Also Read: தி.மலை: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்? ; மூதாட்டி இறுதிச்சடங்கில் அவலம்! - நடந்தது என்ன?
இடுகாட்டுக்கு போக பாதை அமைக்க வேண்டுமென்றால், 19 பட்டா நிலத்துக்காரங்க வழி விடணும். எனவே, 'எங்களுக்கு அதிகமாக இடம் வேண்டாம். அனைவருக்கும் பொதுவாக, வரப்புக்கு வலப்புறமாக உள்ளவர் 5 அடி, இடப்புறமாக உள்ளவர் 5 அடி என மொத்தம் 10 அடி கொடுத்தால் போதும்" எனப் பேசினோம். நம்ம ஊருக்காக தானே என்ற காரணத்தினால, 16 பேர் ஒத்துக்கிட்டாங்க. ஏன்...! குறைந்த அளவு (தோராயமாக 20 சென்ட்) நிலம் வச்சிருக்கிற கணவனை இழந்த ஒரு அம்மா கூட ஒத்துக்கிட்டாங்க. ஆனா, தனலட்சுமி, தண்டபாணி, சுப்பிரமணியன் என்ற மூன்று நபர்கள் மட்டும் மறுப்பு தெரிவிச்சாங்க. ஓரிரு குடும்பங்களை கொண்ட மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் அவர்கள்.
அதே சமயம், இந்த மூவருடைய நிலம் தான் பாதை அமைப்பதற்கு தொடக்கமே. அவங்க நிலத்தை தாண்டிதான் அனுமதி கொடுத்த 16 பேருடைய நிலமும் இருக்கு. 'இடுகாட்டிலிருந்து பாதை அமைச்சிகிட்டு வாங்க. யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலனா நானும் வழிவிடுறேன். இல்லனா... விடமாட்டேன்' அப்படின்னு ஒரு கண்டிஷன் போட்டாரு தண்டபாணி என்பவர்.
சுப்பிரமணியன் என்பவருடைய அப்பா, 'என் நிலத்தின் வழியே இடுகாட்டுக்கு பாதை அமைத்துக்கொள்ளலாம்'. அப்படின்னு 2008-ம் ஆண்டு 'ஸ்டாம்ப் பேப்பர்'ல கையெழுத்து போட்டு கொடுத்திருக்காரு. ஆனா, இப்போ சுப்பிரமணியன் என்பவர் வழி விடமாட்டேன்னு மறுக்கிறார். பாதை அமைக்கிற முயற்சியில ஈடுபட்டபோது, இந்த மூணு பேரும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க.
'எங்களுக்கு, இடுகாட்டிற்குச் செல்ல பாதை வேண்டும். இல்லையென்றால் சாலையிலேயே தான் இனிமேல் பிணங்களை எரிப்போம்' என கூறி பிணம் போன்ற ஒரு பொம்மையை தயார் செய்து நேற்று சாலையில் வைத்து எரித்தோம்.
அரசு அதிகாரிகள் மேற்கொண்டு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே... அடுத்தக்கட்ட முடிவை எடுப்போம். கடந்த பிப்ரவரி மாதம், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி காணை பகுதியில நடந்துச்சு. 'சுடுகாட்டிற்கு பாதை வேண்டு'மென அன்று மனு கொடுத்திருந்தோம். சமீபத்தில கொஞ்ச நாளுக்கு முன்னாடி, அந்த புகார் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு செயலாக்கத்தில் இருப்பதாக குறுஞ்செய்தி மட்டும் வந்திருந்தது. ஆனால் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லாமல் தான் உள்ளது. இந்நிலையில்தான் தனலட்சுமி, சுப்பிரமணியன் என்ற இருவரும் மயிலம் காவல் நிலையத்தில், நேற்று 'ஊர்மக்கள், தங்கள் நிலத்தில் அனுமதியின்றி பாதை அமைக்கிறதாக' புகார் கொடுத்திருக்காங்க போல. இடுகாட்டிற்கு இறந்தவரின் உடலை எடுத்து செல்வதற்கு பாதை தானே கேட்கிறோம்..." என்றார் ஏக்கமாக.
Also Read: சுடுகாட்டுக்கு பாதையில்லை; தடையை அகற்றி பிணத்தை தூக்கிச் சென்ற பெண்கள் - முதல்வர் தொகுதியில் அவலம்
அதனைத் தொடர்ந்து, மயிலம் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் அசாருதீன் என்பவரைத் தொடர்புகொண்டு பேசினோம். "ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இடுகாட்டிற்கு பாதை அமைப்பதற்காக தங்களது நிலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். பாதை அமைப்பதற்குத் தொடக்கத்திலேயே இந்த மூன்று நபர்களுடைய நிலம்தான் இருக்கிறது. இவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, பாதைபோன்று மண் அணைக்கும்போது, 'எங்களிடம் சரியாக கேட்கவில்லை' என கூறி இந்த மூன்று நபர்களும் புகார் அளிக்க வந்தனர். புகாரின்படி சி.எஸ்.ஆர் (CSR) போட்டுக்கொடுத்து இருக்கிறோம். இரு தரப்பையும் அழைத்துப் பேச உள்ளோம்" என்றார்.அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் விமலா என்பவரிடம் பேசினோம். "இதில் அரசு நிலங்கள் என்பது இல்லை. அனைத்தும் பட்டா நிலங்கள்தான். ஊர் மக்களே இணைந்து இடுகாட்டுக்கு பாதை அமைப்பதற்கு தங்களது நிலங்களை கொடுத்து வருகின்றனர். மூன்று நபர்கள் மட்டும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதனாலேயே நேற்று அந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அது தொடர்பான தகவலை சமர்பிக்கவே இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளேன்" என்றார். வானூர் வட்டாட்சியர், கொரோனா தொற்று காரணமாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், தற்போதைய பொறுப்பு வட்டாட்சியரிடம் பேசினோம். "சிறுவை கிராமத்தில், 300 குடும்பங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்களுக்கு அக்காலத்திலேயே தனியாக அரசு நிலத்தில் பாதை இன்றி இடுகாடு அமைந்துவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பட்டா நிலத்தின் வழியேதான் சென்று வந்துள்ளனர். கொரோனா சூழல் நிலவுவதால் இறந்தவரின் உடல்களை தூக்கி செல்ல முடியாது என்று, பொதுமக்களாகவே இணைந்து அவர்களுடைய நிலத்திலேயே 10 அடி பாதையை அமைப்பதற்கு முயற்சி செய்து வந்துள்ளனர்.
இதற்கு ஒரு நபர் மட்டும் 'எங்களுக்கு நிலம் கொடுக்க விருப்பமில்லை. எங்கள் நிலத்தில் பாதை அமைக்க கூடாது' என ஆட்சியேபனை தெரிவித்துள்ளார். அவரிடம் பேசியபோது, "அவங்க என்னை மிரட்டுறாங்க. என்னிடம் சுமூகமாக பேசியிருந்தால் கொடுத்துவிடுவேன். ஆனால் திட்டுறாங்க" என கூறினார். சுமூகமான முடிவு எட்டப்பட வேண்டும் என்பதற்காக வரும் புதன்கிழமையன்று இரு தரப்பையும் அழைத்துப் பேசலாம் என உள்ளோம்" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/villagers-involved-in-the-protest-as-there-is-no-way-to-the-cemetery
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக