சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்களையும் பற்றி விவாதித்து கொண்டிருக்கும் நெட்டிசன்கள் கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்கள் பற்றியே விவாதிக்க வேண்டிய சூழல். மே 26-க்கு பிறகு ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகள் தடைசெய்யப்படலாம் என்ற செய்திகள் வலம் வரத்தொடங்கின. காரணம், இந்தியாவில் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான புதிய டிஜிட்டல் விதிகள் மே 26 முதல் அமலுக்கு வரவிருந்தன.
பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட இந்த புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்று நடக்க சமூக வலைதளங்களுக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் 26-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதை ஏற்காத சேவைகள் தொடர்ந்து இந்தியாவில் செயல்பட அனுமதிக்கப்படாது என்று தெரிவித்திருந்தது இந்திய அரசு. இருந்தும் மே 26 வரை முன்னணி சமூக வலைதளங்கள் எதுவும் புதிய விதிகளை ஏற்பதற்கு எத்தனிக்கக்கூடவில்லை. அதற்கான முன்னெடுப்புகளையும் தொடங்காமலேயே இருந்தன.
கடைசி நேரத்தில் அரசின் அழுத்தத்தின் காரணமாக ஃபேஸ்புக், கூகுள் உட்பட அனைத்து நிறுவனங்களும் புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்பதாக அறிவித்தன. ஆனால், தொடக்கத்திலிருந்தே ட்விட்டர் நிறுவனம் திடமாக இந்த விதிகளை நிராகரித்து வருகிறது.
"இந்தப் பேரிடர் காலத்தில் மக்கள் தங்களுக்குள் வெளிப்படையான விவாதங்களை மேற்கொள்ள ட்விட்டர் நிறுவனம் உதவியிருக்கிறது. பலர் தங்களுடைய குறைகளை ட்விட்டரில் பகிர்கின்றனர், சிலர் தங்கள் தேவைகளைப் பகிர்கின்றனர். அனைத்து வகையிலும் மக்களுக்கு உதவவே நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். எங்கள் சேவைகளை இந்தியாவில் தொடர்ந்து வழங்க இந்திய அரசின் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே நடக்க முயற்சி செய்கிறோம். மற்ற நாடுகளில் செயல்படுவதைப் போலவே, இந்தியாவிலும் நாங்கள் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க முயற்சி செய்வோம். அரசுகளின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு மக்களின் கருத்துரிமை மற்றும் தனியுரிமை பாதிக்காத வகையில் எங்கள் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவோம்" என ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில்தான் மற்றொரு விஷயத்தில் அரசுடன் மோதியது ட்விட்டர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்களிடையே 'டூல்கிட்' சர்ச்சை ஒன்று ட்விட்டரில் எழுந்திருந்தது. இந்தச் சர்ச்சையில் காங்கிரஸ் கட்சியை சாடி பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா பதிவிட்ட ஒரு ட்வீட்டை 'Manipulated Media' என்று குறித்தது ட்விட்டர். இதற்கு ஆட்சேபனைத் தெரிவித்து ட்விட்டர் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறது இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம். அதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் குர்கானில் இருக்கின்ற ட்விட்டர் அலுவலகங்களுக்கு 'நோட்டீஸ்' கொடுக்க காவல்துறை விரைந்திருக்கிறது.
"அரசின் இந்தப் போக்கு அச்சுறுத்தும் விதத்தில் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் எங்கள் பணியாளர்கள்குறித்து கவலைப்படுகிறோம்" என இது குறித்து தெரிவித்திருக்கும் ட்விட்டர், புதிய டிஜிட்டல் கொள்கையில் பயனர்களின் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை ஆகியவற்றைத் தடுக்கும் சில அம்சங்களை நீக்குவது குறித்து அரசிடம் ஆலோசிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இருதரப்பும் ஆலோசனை செய்து மக்களுக்கான சிறந்த முடிவை எடுப்போம் எனவும் தெரிவித்திருக்கிறது ட்விட்டர் தரப்பு.
இந்திய அரசின் செயல்களைக் குற்றம்சாட்டும் வகையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ட்விட்டரின் கருத்துக்களை மறுப்பதாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதிலளித்திருக்கிறது. "வீண் வாதங்களை விடுத்து அரசின் விதிமுறைகளை ஏற்று ட்விட்டர் நடக்க வேண்டும். சட்டங்களும் கொள்கைகளும் இந்நாட்டின் இறையாண்மைக்கு இன்றியமையாதது. ட்விட்டர் ஒரு சமூக வலைதளம் மட்டுமே, இந்தியாவின் சட்டரீதியான கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும் எனச் சொல்லும் இடத்தில் ட்விட்டர் இல்லை" என்றது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.
இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப்பும் புதிய விதிகளை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது. புதிய டிஜிட்டல் கொள்கையில் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் குறுஞ்செய்திகளின் முதல் அனுப்புநரைக் கண்டறிந்து அரசு கேட்டால் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது இந்திய அரசு. இதனைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வாட்ஸ்அப்.
"சர்ச்சைக்குரிய வகையில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் முதல் அனுப்புநரைக் கண்டறிந்து கூறுவது தனியுரிமை மீறல் ஆகாது. அது வாட்ஸ்அப்பின் செயல்பாடுகளையும் எந்த வகையிலும் பாதிக்காது" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் புதிய தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் முடிவில்தான் இருக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகள் குறித்துப் பேசும் போது, "உள்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நாங்கள் எப்போதும் செயல்படுவோம். எங்கள் அறிக்கைகள் எப்போதும் வெளிப்படைத்தன்மையுடனே இருக்கும். இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்கும்போது அதனையும் வெளிப்படைத்தன்மையுடனே கையாளுவோம்" எனத் தெரிவித்திருக்கிறார். ஃபேஸ்புக்கும் புதிய கொள்கைகளில் சில விஷயங்கள் குறித்து அரசுடன் ஆலோசிக்க இருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு புதிய டிஜிட்டல் கொள்கைகள் குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசும் போது, "புதிய கொள்கைகளால் வாட்ஸ்அப் பயனர்கள் பயப்படத் தேவையில்லை. சமூக வலைதளங்களைத் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்தி விடக் கூடாது என்பதற்காகவே புதிய டிஜிட்டல் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
பயனர்கள் தங்கள் குறைகளைக் கூறி அதனை நிவர்த்தி செய்வதற்கான புதிய வழிமுறைகளும் புதிய டிஜிட்டல் கொள்கைகளில் இருக்கின்றன. மக்களின் தனியுரிமையை அரசு மதிக்கிறது. இந்திய இறையாண்மை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கும் குறுஞ்செய்திகள், குற்றம் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான குறுஞ்செய்திகள் ஆகியவற்றைக் களைவதற்காகவே முதல் அனுப்புநரைக் கண்டறிந்து கூற வேண்டும் என புதிய கொள்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும், மற்ற வழிமுறைகளில் தீர்வு காணப்படவில்லை என்றால் மட்டுமே. இதனால், சாதாரண வாட்ஸ்அப் பயனருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டிருக்கும் புதிய டிஜிட்டல் கொள்கைகளின்படி 50 லட்சம் பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்டிருக்கும் எந்தத் தளமும் மூன்று அதிகாரிகளை தங்கள் நிறுவனங்களில் நியமிக்க வேண்டும். Chief compliance officer, Nodal contact person மற்றும் Resident grievance officer ஆகிய மூன்று பொறுப்புகளுக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அந்த நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கும் தங்கள் நிறுவனத்தின் முகவரியைத் தங்கள் தளங்களில் குறிப்பிட வேண்டும். தங்கள் தளங்களில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் பதியப்படும் உள்ளடக்கங்களை இந்திய அரசு அல்லது அதிகாரிகள் நீக்கக் கோரினால் 36 மணி நேரத்திற்குள் அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற பல விதிமுறைகளை புதிய கொள்கைகளில் குறிப்பிட்டிருக்கிறது இந்திய அரசு.
source https://www.vikatan.com/technology/tech-news/social-media-platforms-yet-to-comply-with-the-new-digital-policies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக