Ad

ஞாயிறு, 30 மே, 2021

கர்நாடகா: `ஒரு டோஸ் ரூ.900’ ; தடுப்பூசி விவகார சர்ச்சை! - சிக்கலில் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ.

இந்தியா முழுவதும் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக அந்தந்த மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல், கர்நாடகாவிலும் வரும் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கானது நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் விரைந்து சென்று தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது தான் சிறந்த வழி என பல்வேறு திசைகளிலிருந்தும் விழிப்புணர்வு குரல்கள் எழுந்து வருகிறது. இந்த சூழலில் மக்களின் உயிர் காக்கும் தடுப்பூசியிலும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகள் வருமானம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தடுப்பூசி

பெங்களூருவிலுள்ள பசவனகுடியில் வசித்து வரும் சமூக ஆர்வலரான வெங்கடேஷ் என்பவர் தன் மகனுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக அங்கு அமைந்துள்ள ஏ.வி. தனியார் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை (28.05.2021) அன்று மாலை தொலைபேசியின் வாயிலாக அழைத்து விசாரித்துள்ளார். அப்போது இவரிடம் பேசிய மருத்துவமனை ஊழியர் ஒருவர், “ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை 900 ரூபாய். இதற்கு நீங்கள் முதலில் சென்று பசவனகுடி எம்.எல்.ஏ. அலுவலகம் அல்லது வாசவி மருத்துவமனையில் பதிவு செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

“மருத்துவமையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு நான் ஏன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்?” என்று வெங்கடேஷ் கேள்வி கேட்க, “எம்.எல்.ஏ. அலுவலகத்திலிருந்து தான் எங்களுக்கு தேவையான அளவு தடுப்பூசிகள் கொண்டுவரப்படுகிறது. வாசவி மருத்துவமனை செவிலியர்கள் தான் தடுப்பூசி செலுத்துவதை நிர்வகித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

“இருப்பினும் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு இவ்வளவு விலையா?” என்று திகைப்புடன் வெங்கடேஷ் கேட்க, “ஆம், இதில் வசூலிக்கப்படும் பணம் அனைத்தும் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு தான் சென்று சேரும்” என்று மேலும் திகைப்பூட்டும் பதிலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பசவனகுடி எம்.எல்.ஏ. உட்பட பெங்களூரு தெற்கு தொகுதியின் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூர்யாவும் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தேஜஸ்வி சூர்யா

இது தொடர்பாக, பசவனகுடி எம்.எல்.ஏ. ரவி சுப்ரமணியா மீதும், தேஜஸ்வி சூர்யா மீதும் காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் வெங்கடேஷ் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, இதை மறுத்துள்ள பசவனகுடி எம்.எல்.ஏ. ரவி சுப்ரமணியா, “எனக்கும் அந்த மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. என் மீதும் பொறாமை கொண்ட சிலர் இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தி வருகின்றனர். இதில் நான் தொடர்புபட்டிருபதாகக் கூறும் அந்த மருத்துவமனை ஊழியர் மீதும், அந்த சமூக ஆர்வலர் மீதும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள பெங்களூரு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பவண் கெடா மற்றும் ஸ்ரீனிவாஸ், “இது போன்ற அசாதாரண சூழலில் மக்களுக்கு அவசியமான தடுப்பூசிகளில் கூட வருமானம் ஈட்ட முற்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் திட்டமிட்டு பற்றாக்குறையை ஏற்படுத்தி தனியார் மருத்துவமனைகளின் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். நகரம் முழுவதும் தேஜஸ்வி அந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் சென்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமான பதாகைகளே நிரம்பியுள்ளது. இதிலேயே வெட்ட வெளிச்சமாக தெரிகிறது அவர் தான் இதற்கு முக்கியக் காரணம் என்று. இதில் அவர்கள் இருவருக்கும் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். அதோடு, அவர்களுடைய சட்டமன்ற பொறுப்பு மற்றும் தேஜஸ்வி சூர்யாவின் நாடாளுமன்ற பொறுப்பு உடனடியாக பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்” என்று காரசாரமாக சாடியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. எம்.பி-யான தேஜஸ்வி சூர்யா இக்குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார். எனக்கும் அம்மருத்துவமனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதற்கு ஊக்குவிக்கும் விதமாகவே அந்த பதாகைகள் வைக்கப்பட்டன. மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் அதில் கிடையாது” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து பேசிய சமூக ஆர்வலர் வெங்கடேஷ், “காவல்துறை விசாரணையின் போது என் தொலைபேசியை சோதனையிடுகையில் யார் பொய்யாக பேசி வருகிறார்கள் என்று தெரியவரும்” கூறினார்.

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் தேஜஸ்வி சூர்யா, தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து பெங்களூரு ஷாலினி மைதானத்தில் கட்டண தடுப்பூசி முகாம் நடத்தினார். பின்னர், மக்களின் எதிர்ப்பு வலுத்ததால் அது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா இது குறித்த கருத்துக்கள் ஏதும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். விரைவில் அம்மௌனம் கலையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-sparks-against-bjp-mp-mla-in-corona-vaccination

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக