சென்னை கே.கே. நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். அதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையில் அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். விசாரணைக்குப்பிறகு ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆசிரியர் ராஜகோபாலனை காவலில் எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடந்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்களும் சமூகவலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டன. துணைகமிஷனர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்அப் நம்பருக்கு மாணவிகள், பெற்றோர்கள் புகார்களை அனுப்பி வந்தனர். அதன்அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
சென்னை அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றிய ஆனந்த் என்பவர் மீதும் அந்தப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். அந்தப் புகாரும் சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து ஆசிரியர் ஆனந்த்தை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது. அதுதொடர்பான உத்தரவு ஆசிரியர் ஆனந்துக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
Also Read: PSBB ஆசிரியர் ராஜகோபாலனின் லேப்டாப்பில் என்ன இருந்தது? - அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுத்த போலீஸ்
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு, ``கே.கே.நகர் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் வழக்கைத் தொடர்ந்து எங்களுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. சென்னையில் உள்ள புகார்களை விசாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். மற்ற மாவட்டங்களில் உள்ள புகார்களை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஆசிரியரால் பாலியல் தொல்லைக்குள்ளான மாணவிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அதனால் மாணவிகள் தைரியமாக புகாரளிக்கலாம். அதே நேரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் அதைக் கண்டுக்கொள்ளாத பள்ளி நிர்வாகம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் ஆசிரியர் ஆனந்த்தை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. அவரிடமும் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
கே.கே.நகர் பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து சென்னையில் இன்னொரு பள்ளி ஆசிரியர் ஆனந்த், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/teacher-anand-suspend-in-chennai-after-sexual-harassment-complaint
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக