Ad

சனி, 29 மே, 2021

`28 வயதில் எம்.பி; 1,000 பள்ளிகளை திறந்து சாதனை’ - 101 வயதில் மறைந்த டி.எம்.காளியண்ணன் கவுண்டர்

28 வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை எனப்படும் திருச்செங்கோடு முதல் பாராளுமன்ற உறுப்பினர், 1,000 பள்ளிகளை திறந்த கல்வியாளர், 36 முறை தேர்தலைச் சந்தித்தவர், ஜமீன்தார் என்றாலும், தனது சொத்துகளை மக்களுக்காக செலவிட்டவர் செய்தவர் என்று பல்வேறு சிறப்புகளை பெற்ற டி.எம்.காளியண்ணன் கவுண்டர், தனது 101 வயதில் கொரோனா தொற்றால் காலமானார். 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்தவர் டி.எம்.காளியண்ணன் கவுண்டர். கஸ்தூரிப்பட்டி ஜமீன் பரம்பரையில் வந்தவர். இவரது தந்தை முத்துநல்லிக் கவுண்டர், தாய் பாப்பாயம்மாள். இவர், 1921 ஆம் ஆண்டு, ஜனவரி 10 - ஆம் தேதி பிறந்தார். அப்போதே, இவர் பி.காம், எம்.ஏ பொருளாதாரம் உள்ளிட்டப் படிப்புகளை படித்தார். இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள். இவர், கஸ்தூரிப்பட்டி ஜமீன் வம்சமாக இருந்தாலும், ஏகபோகமாக நிலபுலன்கள் இருந்தாலும், கடந்த 1956 - ஆம் ஆண்டு, டாக்டர் சுப்பராயன் கொண்டு வந்த ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்துக்கு முழு ஆதரவளித்து, தனது நிலங்களை வழங்கினார்.

ஆறுதல் சொல்லும் மதிவேந்தன்

கடந்த, 1948 - ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபைக்கு சென்ற இளம் உறுப்பினர் இவர்தான். அப்போது, காளியண்ணன் கவுண்டருக்கு வயது 28. டாக்டர் சுப்பராயன் இந்தியாவின் தூதுவராக இந்தோனேசியா சென்றதால், அரசியல் நிர்ணய சபையில் ஒரு இடம் காலியானது. அதை நிரப்ப, டி.எம் காளியண்ணன் பெயரை, சுப்பராயன் பரிந்துரைத்தார். அதோடு, காளியண்ணன் கவுண்டரை காமராஜரும் பரிந்துரை செய்தார். அதனால், அவர் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வானார்.

Also Read: நாமக்கல்: `'யாரோடு பேசுகிறாய்'; 2-வது மனைவி மீது சந்தேகம்!’ - மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவர்

அப்போது, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் அம்பேத்கார், நேரு, ராஜாஜி, ராஜேந்திரபிரசாத், முன்ஷி, மௌலானா அப்துல் கலாம் ஆசாத், சிவசுப்ரமணியம், வெங்கட்ராமன் மற்றும் தேசிய தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, எம்.எல்.ஏ, எம்.பி, எம்.எல்.சி ஆக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராகவும், பொருளாளராகவும், மேலவை துணைத்தலைவராகவும் பொறுப்புகள் வகித்திருக்கிறார். இப்படி, பல்வேறு பொறுப்புக்களுக்காக 36 முறை தேர்தலில் நின்ற பழுத்த அனுபவம் கொண்டவர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேலம் பகுதியில் பெரிய பதவியான ஜில்லா போர்டு தலைவர் பதவியை வகித்தவர். அந்தப் பதவி அமைச்சர் பதவியைவிட அதிகாரமிக்கது. இந்தப் பதவியை வைத்து ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஆயிரம் பள்ளிகளை இவர் திறந்தார்.

இறுதி அஞ்சலி

'இங்குள்ள பிள்ளைகள் நாலெழுத்து படிக்கோணும். அதுக்காகதான் ஆயிரம் பள்ளிகள். கடைக்கோடி பிள்ளைக்கும் கல்வி கிடைக்கணும்னா, இன்னும் அதிகம் பள்ளிகளை திறப்பேன்' என்று தெரிவித்தார். ஜமீன்தார், பல பதவிகளை வகித்தவர் என்றபோதிலும், எளிமையான, ஆடம்பரம் இல்லாத அரசியல்வாதியாக திகழ்ந்தார். ஏழை மக்கள் என்ன உதவி கேட்டாலும், உடனே அதை செய்து கொடுப்பார். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், தகுதியான பலருக்கும் சிபாரிசு செய்து அரசு பணிகளை வாங்கி கொடுத்திருக்கிறார். தேர்தல் செலவுக்காகவும், மக்களுக்கு உதவுவதற்காகவும் யாரிடமும் நிதி பெறாமல், தனது சொத்துகள் அனைத்தையும் விற்று செலவு செய்தவர்.

தொடர்ந்து, சேலம் மாவட்ட நூலக தலைவர், இந்தியன் வங்கி இயக்குநர் ஆகிய பதவிகளையும் வகித்தார். திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அர்ததநாரீஸ்வரருக்கு கோடி அர்ச்சனை செய்வித்தார். அதோடு, சிலப்பதிகாரத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்ட காளியண்ணன் கவுண்டர், தொடர்ந்து கண்ணகி விழாவை 66 ஆண்டுகளாக நடத்தி வந்தார். 'மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் வெட்டி உபரி நீரை திருமணி முத்தாற்றில் விட்டால், 70 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்' என்று 1952 - ஆம் ஆண்டிலிருந்தே பாடுபட்டவர். திருச்செங்கோடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தை நிறுவியவர். பள்ளிபாளையம் காவிரி பாலம், சேசசாயி காகித ஆலை ஆகியவை இவர் கொண்டு வந்தது. இவரது, ஒரே ஆசை கண்ணகிக்கு கோட்டம் கட்ட வேண்டும் என்பது. அது இன்று வரை கனவாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான இவர், பழுத்த ஆன்மிகவாதியும்கூட. சிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் விளங்கினார். ஆனால், அரசியலை வைத்து சொத்து சேர்க்காதவர்.

இறுதி அஞ்சலி

இப்படிப்பட்ட சிறப்புமிக்க காளியண்ணன் கவுண்டருக்கு வயது 101. வீட்டிலேயே முடங்கியிருந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரது உறவினர்கள், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்று மறைந்தார். இதை அறிந்த தமிழக அரசு, காளியண்ணன் கவுண்டரின் உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி சின்ராஜ், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் காளியண்ணன் கவுண்டரின் உடல், செங்கோடன்பாளையம் மின்மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்க்கை வாழ்ந்த காளியண்ணன் கவுண்டர் புகழ், நூற்றாண்டுகள் கடந்தாலும் மறையாது என்பதே திண்ணம்.



source https://www.vikatan.com/news/tamilnadu/kaliyannan-koundar-died-in-corona-virus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக