Ad

ஞாயிறு, 30 மே, 2021

மகாராஷ்டிரா: `வேதனையாகத்தான் இருக்கிறது; 3-ம் அலை வரலாம்!’ - எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பொதுமுடக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் வரும் ஒன்றாம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. அதனை வரும் 15ம் தேதி வரை நீட்டிக்க மாநில அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. அதனை முதல்வர் உத்தவ் தாக்கரே முறைப்படி அறிவித்து ஆற்றிய உரையில், ``கொரோனா மூன்றாவது அலையில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தற்போதுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளாதீர்கள். மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக ஆய்வு செய்து தேவையான கட்டுப்பாடுகளை தளர்த்தும் அல்லது அதிகரிக்கும்.

restriction in mumbai

மக்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது எனக்கு மன வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அது தேவையாக இருக்கிறது. சொந்த மக்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதை விட வேறு மோசமானது எதுவும் இல்லை. நமது மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால்தான் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளேன். இந்த கட்டுப்பாடுகளை தொடரவேண்டும் என்று நான் விரும்பவில்லை.

ஆனால் கொரோனா வீரியத்தின் காரணமாகவே சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வந்ததை விட இப்போது வந்துள்ள கொரோனா வீரியமிக்கது. அதோடு இது வேகமாக பரவுகிறது. மேலும் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் அதிலிருந்து குணமடைய அதிக நாட்கள் பிடிக்கிறது. இது நமது கட்டுப்பாட்டை மீறிவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். படுக்கைகளை அதிகரிக்கவேண்டும். டாக்டர்கள் மற்றும் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்.

கொரோனா மூன்றாவது அலை எப்போது, எந்த தேதியில் வரும் என்று எனக்கு தெரியாது. எனவே நாம் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது. கடந்த சில நாட்களில் இருக்கும் கொரோனா தினத்தொற்று எண்ணிக்கை, கடந்த ஆண்டில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தோடு ஒத்துப்போகிறது. கொரோனாவில் இருந்து குணமடைவது 92 சதவீதமாக அதிகரித்திருப்பதோடு இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. கொரோனா தொற்று நகரங்களில் குறைந்து வருகிறது. ஆனால் கிராமங்களில் அதிகரித்து வருகிறது. மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த விதித்த கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

கொரோனா மூன்றாவது அலை மகாராஷ்டிராவில் கடுமையாக தாக்கும் பட்சத்தில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படும். தற்போது தினமும் 1,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவையாக இருக்கிறது. குழந்தைகளுக்கு தொற்று ஏற்படவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தொற்றக்கூடும். குழந்தைகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து இருப்பதால் யாரும் கவலைப்படவேண்டியதில்லை. அப்படியே பரவினாலும் அது நமது மூலம்தான் பரவும். எனவே எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இத்தொற்றில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாக்கலாம் என்பது குறித்து அரசு குழந்தைகள் சிகிச்சை நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து வருகிறது.

கொரோனா ஸ்வாப் டெஸ்ட்

கொரோனா தொற்றால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு அரசு பொறுப்பேற்றுக்கொள்ளும். விரைவில் அரசு இதுதொடர்பான வழிமுறைகளை வெளியிடும். கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மகாராஷ்டிராவில் 18 - 44 வரையுள்ளவர்கள் 6 கோடி பேர் இருக்கின்றனர். ஆனால் தடுப்பூசி குறைவாக இருக்கிறது. தேவையான தடுப்பூசி கிடைத்துவிட்டால் உடனே தடுப்பூசி போடப்படும் அளவும் அதிகரிக்கும். ஜூன் மாதம் தேவையான தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் 3,000 க்கும் அதிகமானோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.10 சதவீதத்திற்கும் குறைவான நோய்த்தொற்று இருக்கும் மும்பை போன்ற நகரங்களில் மட்டும் கடைகள் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கலாம். அத்தியாவசியம் சாராத கடைகளை திறப்பது உள்ளூர் தேசிய பேரிடர் மேலாண்மை குழு முடிவு செய்யும். அதேசமயம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசியம் சாராத பொருட்களை டெலிவரி செய்ய விதிக்கப்பட்டு இருக்கும் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/politics/get-ready-for-corona-third-wave-maharashtra-chief-minister-uddhav-thackeray-warns-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக