`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்தச் சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக்கொள்வதற்கும், ஆண்களைப் பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம்.
Also Read: ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 12 - ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?
இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இதழ்களில் குடும்ப வன்முறைகள் பற்றியும், உருவகேலி, உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன், ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை, பெண்ணின் புற அழகா, இயல்பா... எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது, ஆண்கள் தோழியை எப்போது காதலியாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள் ஆகியவை குறித்து பேசியிருந்தோம். இந்த இதழில் ``ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?'' என்பது பற்றி பேசியிருக்கிறோம். இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை பிரபலங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் ஆண்களின் குறைவாகப் பேசுகிற இயல்பு பற்றி தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் பாடகர் உன்னி கிருஷ்ணன்.
``என்னோட இயல்பே குறைவான பேச்சுதான். இது எங்க அப்பாகிட்ட இருந்து எனக்கு வந்த குவாலிட்டி. ஸ்கூல் படிக்கிறப்போ ஃபிரெண்ட்ஸோட சினிமாவுக்குப் போவோம். இடைவேளையில வாங்குற பாப்கார்னை மத்தவங்க எல்லாம் பத்து நிமிஷத்துல சாப்பிட்டு முடிச்சிருப்பாங்க. நான் மட்டும் படம் முடியுற வரைக்கும் சாப்பிட்டுகிட்டு இருப்பேன். `உனக்கு ரொம்ப பொறுமை ஜாஸ்திடா’ன்னு கிண்டலடிப்பாங்க. ஆனா, அந்த இயல்புதான் இன்னிக்கு வரைக்கும் என் வாழ்க்கையை ஸ்ட்ரெஸ் இல்லாம வழி நடத்துது.
பேச்சு குறைவா இருந்தா மத்தவங்க பேசுறதை உன்னிப்பா கவனிக்க முடியும். அப்படி கவனிச்சுட்டு பேசுறப்போ நம்மளோட பதில் ரொம்ப தெளிவா இருக்கும். மத்தவங்க பேச்சுக்கு உடனே ரியாக்ட் பண்ணா அது தப்பாகூட போகலாம். மத்தவங்க பேசுறதை உள்வாங்கி, அதுக்குப் பதில் சொல்லணுமா, வேண்டாமான்னு யோசிச்சுதான் பதில் சொல்வேன். அதனால, என்னோட துறையில `கமிட்டியில உன்னிகிருஷ்ணன் இருந்தா அந்த இடம் ஸ்மூத்தா இருக்கும்’னு சொல்வாங்க’’ என்றவர், தன்னுடைய இயல்பு, குடும்ப வாழ்க்கைக்கு எந்தளவுக்கு நன்மை செய்கிறது என்பதையும் பகிர்ந்துகொண்டார்.
Also Read: ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 7 - அம்மாவுக்கு அன்பான மகன்... மனைவிக்கு அன்பான கணவனா?
``வீட்டுக்குள்ளேயும் எனக்கு ரொம்ப சீக்கிரம் கோபம் வராது. எப்பவாவது கொஞ்சம் கோபப்பட்டு பேசினாலும் வீட்ல அதுக்கு உடனே ரெஸ்பான்ஸ் இருக்கும். குழந்தை வளர்ப்புலயும் எப்பவும் கத்திக்கிட்டே இருந்தா நம்ம மேல மரியாதை இருக்காது. ஆனா, எப்பவாவது நியாயமா கோபப்பட்டா, அந்தக் கோபத்துக்கு மரியாதை கிடைக்கும். அந்த நேரத்துல நாம சொல்ற விஷயங்கள் குழந்தைங்க மனசுல நல்லா பதியும். அதனாலதான், `பிள்ளைங்க விஷயத்தை அவர் பார்த்துப்பாரு’ன்னு சொல்வாங்க என் மனைவி.
திருமண வாழ்க்கை நிம்மதியா இருக்கணும்னா கணவன் மனைவி ரெண்டு பேர்ல ஒருத்தர் பொறுமைசாலியா இருந்தா போதும். என் மனைவி மனசுல இருக்கிறதை அப்படியே பேசக்கூடியவங்க. அது ரொம்ப நல்ல இயல்புதான். இருந்தாலும், நான் அப்படி கிடையாது. இடம், பொருள் பார்த்து நிதானமாதான் பேசுவேன். அதனால அவங்க என்னை, `நீங்க ரொம்ப சாஃப்டா இருக்கீங்க. யாராவது உங்களை ஏமாத்திடுவாங்க. கவனமா இருங்க’ன்னு சொல்லிட்டே இருப்பாங்க. குடும்பத்துல ஒருத்தர் அப்படி ஒருத்தர் இப்படி இருந்தாதான் பேலன்ஸ்டா இருக்கும்கிறது என்னோட கருத்து.
Also Read: ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 8 - ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை?
எங்களுக்கு கல்யாணமாகி `26 வருஷங்கள் ஆச்சு. இதுல மொத்தமா மூணு அல்லது நாலு முறைதான் சண்டை போட்டிருப்போம். `நாம ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கிறதுக்கு உங்க இயல்புதான் காரணம்’னு மனைவி சொல்வாங்க. ஆண்கள் குறைவா பேசினா, கிடைக்கற பெரிய பலன் இதுதாங்க!’’ என்று சிரிக்கிறார் உன்னி கிருஷ்ணன்.
ஆண்கள் குறைவாகப் பேசுவதன் உளவியல் காரணத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/lifestyle/relationship/singer-unnikrishnan-shares-about-his-silent-character-and-family-life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக