வங்கதேசத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் ஐந்து பேர், இளம்பெண் ஒருவரை கடந்த வாரம் பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளனர். ஆரம்பத்தில் அந்த பெண் அங்கிருந்து தப்பித்து கேரளா தப்பி சென்றுள்ளார். விடாமல் பின் தொடர்ந்த அந்த கும்பல் அவரை மீண்டும் வலுகட்டாயமாக பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு இளைஞர்களுக்கு தனது அறையை அளித்து உதவியுள்ளார் பெண் ஒருவர். அவர்கள் கடத்தி வந்த பெண்ணை கொடூரமாக தாக்கி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பின் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வடகிழக்கு மாநிலங்களில் வெகு வேகமாக பரவிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பார் என முதலில் கருதப்பட்டது. இந்த காணொளியை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், `உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ மத்திய இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்தனர். இதனை தொடர்ந்து அசாம் மாநில அரசு இவர்களை கைது செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த இவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் கூறியது.
இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று பெங்களூரில் தங்கி இருந்த குற்றவாளிகளான சாகர் (23), முகமது பாபு சாஹிக் (30), ரிடோய் பாபோ (25), ஆகியோரை ராமமூர்த்தி நகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஹைதராபாத்தில் இருந்த ஹகில் (23), மற்றும் அவர்களுக்கு உதவிய பெண்ணை கைது செய்தனர்.
இதுகுறித்து ராமமூர்த்தி நகர் காவல்துறையினர் தெரிவிக்கையில், இவர்களின் மேல் பாலியல் வன்கொடுமை மற்றும் தாக்குதல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் தொடர்பான தகவல் கிடைத்ததும், சந்தேகத்திற்கிடமாக இங்கு இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். தப்பித்து ஹைதராபாத்தில் தங்கியிருந்தவர்களை காவல்துறையின் ஒரு குழுவினர் சென்று கைது செய்தனர்” என்று கூறினர்.
விசாரணையில் கைதானவர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணும் வங்காளதேசம் நாட்டிலிருந்து வந்த ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. வாக்குமூலம் பெறுவதற்க்காக பாதிக்கப்பட்ட பெண்ணை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பண விவகாரத்தில் அப்பெண்ணை வங்கதேசத்தில் இருந்து கடத்தி வந்து, பாலியல் சித்ரவதை செய்ததும் தெரிய வந்திருக்கிறது. இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்றும், அவர்கள் கேரளாவில் மறைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே சம்பவ இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது இருவர் தப்பிக்க முயன்றனர், அவர்களின் கால்களில் சுட்டு போலீஸார் மீண்டும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source https://www.vikatan.com/news/crime/five-bangladeshi-nationals-arrested-in-bangalore-for-sexual-harassment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக