கொரோனா வைரஸ் பாதிப்பில் தலைநகர் சென்னையை ஓவர்டேக் செய்து கோவை முதலிடம் பிடித்துள்ளது. தடுப்பூசி முதல் ஆக்ஸிஜன் படுக்கைகள் வரை அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் #DontBoycottCoimbatore என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டானது. ஊரடங்கு காலத்திலும் மக்கள் தடுப்பூசிக்கும், ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கும் அலைந்து கொண்டிருக்கிக்னறனர்.
Also Read: கோவை:``தடுப்பூசி இருக்கிறது; ஆனால் மக்களுக்கு செலுத்துவதில்லை" - குற்றஞ்சாட்டும் வானதி சீனிவாசன்
ஆனால், வழக்கம் போல மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். கடந்த சில நாள்களாக கோவையில் பரவலாக கொரோனா தொற்று குறைய தொடங்கியிருப்பதாக சுகாதாரத்துறை கூறி வருகிறது.
ஆனால், இன்றைய தேதி வரை கோவை மாவட்டத்தில் தடுப்பூசி பிரச்னை ஓயவில்லை. அரசு அறிவிப்பின்படி, கோவை மாவட்டத்தில் இன்றைய தேதிக்கு 18-44 வயதுடையவர்களுக்கான தடுப்பூசியின் கையிருப்பு பூஜ்ஜியம். “இன்றைய தினம் 45+ வயதினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி வருவது சிறிது தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், காலை 11 மணி முதல் தடுப்பூசி போடப்படும்” என்று இரவில் அறிவிக்கின்றனர்.
அறிவிப்பு மிக தாமதமாக வருவதால், மக்களிடம் அந்தத் தகவல் முழுமையாக சென்று சேர்வதில்லை. இதனால், மக்கள் அதிகாலை 4 மணி முதல் தடுப்பூசி தேடி சென்று மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
மறுபக்கம் தடுப்பூசி தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கொடுக்கும் தகவலுக்கும், மத்திய அரசின் கோவின் (COWIN) இணையதளத்தில் உள்ள தகவல்களுக்கும் பெரிய அளவுக்கு வித்தியாசம் உள்ளது. மாநில அரசு அறிக்கைபடி கோவை மாவட்டத்தில் மே 29-ம் தேதி 18-44 வயதுடையவர்களுக்கு 9,012 எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டதாக கூறுகின்றனர். ஆனால், கோவின் இணையதள தகவல்படி அதே மே 29-ம் தேதி 18-44 வயதுடையவர்களுக்கு 6,739 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதிலேயே 2,273 எண்ணிக்கை வித்தியாசம் இருக்கிறது. மே 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் 18-44 வயதினருக்கு 45,082 எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டுள்ளதாக கோவின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதே காலகட்டத்தில் கோவை மாவட்டத்தில் 18-44 வயதினருக்கு 67,447 எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில அரசு கூறுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் 22,395 என்ற மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. “குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால், சாமானிய மக்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தடுப்பூசி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றனரே தவிர அவர்களிடம், வெளிப்படைத்தன்மை இல்லை. அதிகம் பாதிப்புள்ள கோவைக்கு இனியும் தாமதிக்காமல் விரைந்து தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்கின்றனர் கோவை வாசிகள்.
திரைப்பட கலைஞரும், கோவை வாசியுமான தனம், “நீண்ட போராட்டத்துக்கு பிறகுதான் என் கணவருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், ‘எங்களுக்கு எப்போது வரும் என தெரியாது. வரும் ஊசியை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து கொடுக்கிறோம்’ என்றார். இரண்டாவது அலை தொடங்குவதற்கு முன்பே மத்திய அரசு தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு அதிகளவு கொடுத்துவிட்டனர்.
தனக்கு போகத்தான் தானமும், தர்மமும். அறிவியல்பூர்வமாக பாதிப்புகளை கணிக்காமல் விட்டுவிட்டனர். இப்போது மக்களை அலைக்கழித்து கொண்டிருக்கின்றனர். தடுப்பூசிக்காக அதிகாலை 4 மணி முதல் வரிசையில் காத்திருக்கின்றனர். ஊரடங்கு காலத்திலும் மக்களை பதற்றத்தில் வைத்திருக்கின்றனர்.
மக்களுக்கு தெளிவான தகவல்களை வழங்குவதில்லை. அந்த காலத்தில் மக்களை தேடி வந்து அம்மை தடுப்பூசி போட்டனர். இப்போது நாம் தேடி சென்றாலும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதில்லை. கோவை என்பது மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பகுதி. இங்கு ஒரு அரசு மருத்துவமனை மட்டும் போதாது.
எனவே, கூடுதலாக அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கூறி வருகிறோம். தொலைநோக்கு பார்வையில் சிந்தித்து கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது” என்றார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தடுப்பூசி விவகாரத்தில் பாரபட்சமோ, ஒளிவுமறைவோ இல்லை. சென்னைக்கு அடுத்து கோவைக்குதான் அதிகளவு தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளோம்.
18-44 வயதினருக்கு தடுப்பூசியை பொறுத்தவரை அரசாணை என்ன சொல்கிறதோ? அதைத்தான் கடைபிடிக்கிறோம்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-corona-vaccine-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக