சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமியை கடந்த 5.5.2021-ம் தேதி முதல் காணவில்லை என அவரின் அம்மா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடிவந்தனர். போலீஸாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காணாமல் போன 17 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து திருவொற்றியூர் போலீஸார் அந்த இளைஞரைத் தேடிவந்தனர். போலீஸாரின் தேடுதலில் காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரைச் சேர்ந்த முருகேசன் (23) என்பவர்தான் சிறுமியை அழைத்துச் சென்றார் என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
பின்னர் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, முருகேசனையும் சிறுமியையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சிறுமியைக் காதலிப்பதாகக்கூறி அவரைத் திருமணம் செய்து கொள்வதாக முருகேசன் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியிருக்கிறார். பின்னர் சிறுமியை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக தாலிகட்டி பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸார் முருகேசனைக் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
Also Read: போக்சோ: `பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொள்கிறீர்களா?' - உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும் எதிர்வினையும்!
மற்றொரு சம்பவத்தில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் கடந்த 15.4.2021-ம் தேதி முதல் காணவில்லை என அவரின் அம்மா ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியைத் தேடிவந்தனர். போலீஸ் விசாரணையில் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை அழைத்துச் சென்ற செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல் (19) என்பவரை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். சிறுமியை திருமணம் செய்ததோடு, அவருக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்திருக்கிறார். இதையடுத்து ஞானவேல் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
ஆன்லைன் விபரீதம்:
சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, 28.5.2021-ம் தேதி முதல் காணவில்லை என நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. நொளம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியை ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி மதுரை, அலங்காநல்லூரைச் சேர்ந்த சதீஷ் (21) என்பவரை பிடித்து சிறுமியை மீட்டனர். விசாரணையில் 16 வயது சிறுமிக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் சதீஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் சிறுமியிடம் ஆசைவார்த்தைகளைக் பேசி அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் போலீஸார் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு அவரைக் கைது செய்தனர்.
நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் வெவ்வேறு சம்பவங்களில் போக்சோ வழக்குகளில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-3-youths-in-pocso-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக