நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் அருகில் வெடி சத்தத்துடன் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகவும், அணைக்க உடனடியாக வரும்படியாகவும் வந்த அவரச அழைப்பின் அடிப்படையில் குன்னூர் தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்திருக்கிறார்கள்.
அங்குச் சென்று பார்த்தபோது வீட்டின் அருகில் இருந்த சிறிய குடிசை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் தென்பட்டுள்ளன. ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் உடலில் காயத்துடன் இருந்துள்ளனர்.உடனடியாக மூன்று பேரையும் மீட்ட தீயணைப்புத் துறையினர், சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்தபோது, வெடி பொருள்கள் மற்றும் பட்டாசுகள் போன்றவற்றைக் கண்டறிந்தனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சட்டவிரோதமாக காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடியை தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டிருப்பதை உறுதி செய்த காவல்துறையினர், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இரண்டு தரப்பிலும் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய குன்னூர் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர்,"சித்தி விநாயகர் கோவில் பகுதியில் வசிக்கும் கண்ணன், அபு, சுரேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து அபு என்பவரது காலி வீட்டில் பன்றிகளுக்கு வைக்கும் அவுட்டு காய் (நாட்டு வெடி) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அது எதிர்பாராத விதமாக திடீரென வெடித்துள்ளது. அப்போது வீட்டின் உள்ளே வந்த 10 வயது சிறுவன், கண்ணன், அபு ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. மூவரும் குன்னூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
source https://www.vikatan.com/news/crime/country-bomb-accident-in-coonoor-three-persons-injured
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக