Covid questions: ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது கோவிட் தடுப்பூசி போடக்கூடாதா? அப்படி போட்டால் ௭ன்னவாகும்?
- வசந்தி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.
``ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது தடுப்பூசி போடுவதைத் தவிர்ப்பதே சிறந்தது. ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் வழக்கமாக வரக்கூடிய மாரடைப்பு, ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம், தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், கைகால்களில் இயக்கமின்மை போன்றவை ஏற்பட்டால் அதற்குக் காரணமாகத் தடுப்பூசியின் மேல் பழியைப் போட்டுவிடுவார்கள். தவிர ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு தடுப்பூசி போட்டால்தான், பக்க விளைவுகள் வரும்போது அவற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து, அவற்றுக்குத் தடுப்பூசி காரணமா என்பதைப் பதிவு செய்ய முடியும்.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது ரத்தக் குழாய்கள் சுருங்கும். அந்த நிலை வாசோ கன்ஸ்ட்ரிக்ஷன் (Vasoconstriction) எனப்படும். அதிகம் கோபப்பட்டாலோ, கத்தினாலோ, அழுதாலோகூட ரத்தக்குழாய்கள் சுருங்கும். அப்படி அவை சுருங்குமிடத்தில் கொழுப்பு இருந்து அந்த இடத்தில் ரத்தம் உறைந்துதான் மாரடைப்போ, பக்கவாதமோ ஏற்படுகிறது.
Also Read: Covid Questions: ஹார்ட் அட்டாக் வந்து ஸ்டென்ட் வைத்தவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?
மாரடைப்போ, பக்கவாதமோ ரத்த அழுத்தத்தால் வந்ததா, தடுப்பூசி போட்டுக்கொண்டதன் விளைவாக வந்ததா என்று தெரியாமல் பொத்தாம் பொதுவாகத் தடுப்பூசிதான் காரணம் என்று அதைத் தவிர்ப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இப்படித் தவறான பிரசாரங்களைத் தடுப்பதற்காகவும், தடுப்பூசிகளின் மேல் பழியைப் போடுவதைத் தவிர்ப்பதற்காகவும், தடுப்பூசி போடுவதால் பின்விளைவுகள் வராமலிருக்கவும்தான் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றுக்கான சோதனைகளை மேற்கொண்டு, அவை நார்மலாக இருக்கும் பட்சத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கிறோம்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/news/healthy/can-people-with-high-bp-take-covid-19-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக