’என் தங்கச்சி படிச்சவ’, ‘சேரன் பாண்டியன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் நடிகை சித்ரா. இவர் நடித்த நல்லெண்ணெய் விளம்பரம் பிரபலம் ஆனதால் ‘நல்லெண்ணெய்’ சித்ரா என்றால் அதிக பரிச்சயம். நேற்று (21/05/2021) இவருடைய பிறந்த நாள்.
காலையில் இருந்தே இவருக்கு உடன் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என சினிமா தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்ததாம்.
‘’21-ம் நூற்றாண்டு, வருஷமும் 21, நாளும் மே 21-ன்னு சொல்லி சிலர் வாழ்த்தினப்ப சந்தோஷமா இருந்தது. அதேபோல நேற்று எனக்கு வந்த முதல் வாழ்த்து என்னை ரொம்பவே நெகிழ வச்சிடுச்சு’’ என்றவர் அதைப் பற்றியும் விவரித்தார்.
‘’என்னுடைய பொண்ணு ‘அம்மா என்னுடைய வாழ்த்துதான் முதல் வாழ்த்தா இருக்கும்’னு முதல் நாள் ராத்திரி 10 மணி வரைக்கும் சொல்லிட்டு இருந்தா. ஆனா, என்ன களைப்போ, லேசா கண்ணசந்து தூங்கிட்டா. சரியா நள்ளிரவு 12 மணி அடிக்கப் போகுது. நானும் எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு ’தூங்கப் போக வேண்டியதுதான்’னு கிளம்பற அந்த செகண்ட் சரியா மொபைல் ஒலித்தது.
எடுத்தா, முருகானந்தம். துறையூரைச் சேர்ந்தவர். என்னுடைய ரசிகர். ‘‘வாழ்த்துக்கள் மேடம்’’னு அவர் சொன்ன நொடி எனக்கு ஒரு மாதிரி நெகிழ்ச்சியாகிடுச்சு. ஒரு ரசிகர் நள்ளிரவு 12 மணிக்கும் ‘’நாம ஃபோன் பண்ணினா இந்த நேரத்துலயும் எடுப்பாங்கன்னு ஒரு உரிமையோடு பேசின முருகானந்தம், ‘சேரன் பாண்டியன்’ காலத்துல இருந்து என்னுடைய ரசிகர். சின்னப் பையனா அம்மாவுடன் சேர்ந்து படம் பார்த்து என்னுடைய ரசிகரானவர். ஆரம்பத்துல இருந்தே அப்பப்ப பேசுவார். ஒரு கட்டத்துல என்னுடைய ஃபேமிலி ஃப்ரெண்ட் ஆகிட்டார். இன்னைக்கும் ஊர்ல என் பேர்ல ரசிகர் மன்றம்னு வச்சு என்னுடைய பிறந்த நாள் வர்றப்ப உதவிகள் செஞ்சிட்டு வர்றார்.
சென்னைக்கு வந்தா எங்க வீட்டுக்கு வராம போனதே இல்லை. அங்க அவருடைய விவசாய நிலத்துல கிடைக்கிற காய்கறிகள், வேர்க்கடலைன்னு கொண்டு வருவார்.
’ஒரு தடவை நாட்டுக்கோழி கொண்டு வந்தேன்; கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல இறங்கினதும் பறந்துடுச்சு'னு வந்து நின்னார். எனக்கு உடல்நிலை சரியில்லைன்னா, பதறிடுவார். அவங்க வீட்டுல வயசான பாட்டி இருக்காங்க. அவங்ககிட்ட ஃபோனைக் கொடுத்து கைவைத்தியம் சொல்லச் சொல்லுவார்.
ஒரு ஆர்ட்டிஸ்ட்- ரசிகர் இடையிலான உறவு இப்படியெல்லாம் கூட இருக்குமானு சிலர் கேட்கலாம். சினிமாவை விட்டு ஒதுங்கி பல வருஷமாகியும், பிடிச்ச ஒரு ஆர்ட்டிஸ்ட்டை குடும்பத்துல ஒருவரா நினைக்கிற ரசிகர்கள் தமிழ்நாட்டுல நிச்சயம் இருப்பாங்கங்கிறதுக்கு நாங்கதான் சாட்சி.
‘கொரோனாவால சென்னை வரமுடியலை’னு சொன்னார். இல்லாட்டி மறுநாளே பழங்கள், பரிசுப் பொருள்களோட வந்து நிற்கிற மனுஷன்.
அவர் வாழ்த்தின அடுத்த சில நிமிடங்கள்ல எழுந்த என் மகளே, ‘நான் தானம்மா முதல்ல விஷ் பண்ணணும்... எப்படி அந்த அங்கிள் ஃபோன் பண்ணலாம்’னு கோபிச்சுக்கிட்டா’ ’’ என்கிற சித்ரா தற்போதும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
’’ஜூன் மாதம் கூட மலையாளத்துல ஒரு படம் நடிக்க கமிட் ஆகி இருந்தேன். கொரோனாவால் அந்த வாய்ப்பை விட்டுட்டேன். இப்ப தொழிலை விட பாதுகாப்பு ரொம்ப முக்கியமா இருக்கில்லையா’’ என்கிறார்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-chithra-shares-her-happiness-on-fans-birthday-wish
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக