கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் நோயாளிகளுக்குத் தனிமை மையங்கள் மற்றும் படுக்கை வசதி கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நோயாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின் (ஜூவல்ஒன்) சார்பில் கொரோனா சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. இதனை உணவுத் துறை அமைச்சர் ஆர். சக்ரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி.அருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே.செல்வராஜ், அரசு உயரதிகாரிகள், எமரால்டு ஜுவல் நிர்வாக இயக்குநர், அவர்தம் குடும்பத்தினர் முன்னிலையில் திறப்புவிழா நடைபெற்றது.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வளாகத்தில் அமைந்துள்ள இம்மையத்தில் 290 படுக்கைகளும் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் உள்ளன. கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் அதனைக் குறைக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி அரசுக்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவிடும் வகையிலும் எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனம் இம்மையத்தைத் துவங்கியுள்ளது. இதில் அளிக்கப்படும் சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளிகளுக்குச் சத்துள்ள உணவு அளித்தல், அவர்களது மனநலம் பேணுதல், அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுதல் ஆகிய அம்சங்களில் இம்மையம் தனிப்பட்ட கவனம் செலுத்தும். இதற்கென இங்கு படுக்கை வசதி, மின்விசிறி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முதலான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நல்ல சத்துள்ள உணவு மற்றும் தின்பண்டம் அளிக்கப்படுகிறது. மேலும் நோயாளிகள் மன அழுத்தமின்றி பொழுதைக் கழித்திட வைஃபை, DTH, புரொஜக்டர் வசதிகள், செல்போன் சார்ஜிங் பாயிண்ட்ஸ், விளையாட்டுகள் முதலான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளின் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள எப்போதும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தயாராக உள்ளனர்.
எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே. சீனிவாசன் இதுகுறித்துக் கூறுகையில், “இந்தப் பெருந்தொற்றானது ஒவ்வொருவரது வாழ்க்கையையும் பாதித்துள்ளது. கோவை நகரில் இது அதிகரித்துவருவது கவலையை ஏற்படுத்துகிறது. சமூக நலம் பேணுவதே எங்களது முதன்மையான குறிக்கோள். நமது மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திட நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். அரசு எடுத்துவரும் முயற்சிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரது ஒத்துழைப்போடும் நாம் இந்தச் சோதனையான காலகட்டத்தைக் கடந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தக் கொரோனா சிகிச்சை மையம் துவக்கிட உறுதுணையாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் ஜூவல்ஒன் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இதற்காக இடம் கொடுத்து உதவிய ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவிற்கு எங்கள் நன்றிகள் உரித்தாகும். கொரோனா எனும் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் ஜூவல் ஒன் தன்னை அர்பணித்துக் கொள்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதனை நாம் நிச்சயம் வெல்வோம்” என்றார்.
source https://www.vikatan.com/oddities/miscellaneous/jewel-one-opens-corona-relief-center-with-300-beds-in-coimbatore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக