கொரோனா தொற்று உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அடுத்த பேரிடியாக `மியூக்கர் மைக்கோசிஸ்' என்ற கரும்பூஞ்சைத் தாக்குதல் பெருகி வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களே பெரும்பாலும் கரும்பூஞ்சைத் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் கவனத்துடன் கையாள வேண்டிய கரும்பூஞ்சைத் தாக்குதலுக்கு ஆம்போடெரிசின்- பி (Amphotericin-B) என்கிற மருந்து செலுத்தப்படுகிறது. இந்தியாவில் இம்மருந்து குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படும் நிலையில் தற்போது அமெரிக்காவில் இருந்து 10 லட்சம் குப்பிகளை இறக்குமதி செய்யவிருக்கிறது மத்திய அரசு.
இந்நிலையில் கரும்பூஞ்சைத் தாக்குதல் குறித்தும், ஆம்போடெரிசின் – பி மருந்தின் பயன்பாடு குறித்தும் மருத்துவரும், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளருமான ரவீந்திரநாத்திடம் கேட்டோம்…
``கரும்பூஞ்சை என்கிற Mucormycosis, புதிதாக உருவானதல்ல. ஏற்கெனவே இருப்பதுதான். காற்றில் கலந்திருக்கும் அதன் விதையை நாம் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஏன் இப்போது இதன் தாக்குதல் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது என்பதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. இன்னும் முழுமையான காரணங்கள் கண்டறியப்படவில்லை. அதற்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
கொரோனா போன்று இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றுகிற நோய் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களே இத்தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து விடுவதாலும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் குறைந்து விடுவதாலும் கரும்பூஞ்சைத் தாக்குதல் ஏற்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் சிலருக்கு உடலில் cytokine storm ஏற்படும். நோய் எதிர்ப்பாற்றலுக்காக உருவாகும் cytokine என்கிற ரசாயனம் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகி தாறுமாறாக செயல்பட ஆரம்பிக்கும். வெளியே இருந்து தாக்கிய நோய்க்கிருமிகளை மட்டும் அல்லாமல் நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களை அழிக்க ஆரம்பித்து விடும். நுரையீரலில் உள்ள திசுக்கள், சிறுநீரகம் மற்றும் ரத்தக்குழாய் செல்களை அழிக்கும். இதனால் ரத்தக்கட்டு ஏற்பட்டு ரத்த அடைப்பால் உறுப்புகளை செயலிழக்க வைக்கும். நுரையீரலில் உள்ள திசுக்களைத் தாக்கி அழிப்பதால் இறந்துபோன திசுக்களில் பாக்டீரியா தொற்று உண்டாகி நிமோனியா ஏற்பட்டு இறப்பதற்கான வாய்ப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. ஆகவே cytokine storm ஏற்படாமல் தடுப்பதற்காக ஸ்டீராய்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் குறைவதால் இப்பூஞ்சைத் தொற்று ஏற்படலாம் என்கிற கருத்தும் நிலவி வருகிறது.
Also Read: Black fungus தொற்றுநோய்: கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குவது ஏன்?
கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு அந்த வைரஸ் உடலில் பல்கிப் பெருகும் காலகட்டத்தில் ஸ்டீராய்டு தர மாட்டார்கள். யாருக்குத் தேவை இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படும். கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்படும் ஸ்டீராய்டைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக ஸ்டீராய்டு அளிக்கப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், மூட்டு வலி, தண்டுவடப் பிரச்னைக்கு ஆளாகியுள்ளவர்கள் நீண்டகாலம் ஸ்டீராய்டு எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தக் கரும்பூஞ்சைத் தாக்குதல் ஏற்படுவதில்லை என்பதால் ஸ்டீராய்டு காரணமாக இத்தாக்குதல் ஏற்படுகிறது என்று உறுதிபடக் கூற முடியாது.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களது ரத்தத்தில் serum ferritin என்கிற ஒருவகையான இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கிறது. அது கரும்பூஞ்சையை ஈர்க்கும் தன்மை கொண்டது என்பதால் அதன் மூலம் இப்பூஞ்சைத் தாக்குதல் ஏற்படுகிறது என்கிற கருத்தும் நிலவுகிறது. மேலும் ஜிங்க் மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் இத்தொற்று ஏற்படலாம் என்கிற கருத்தும் உள்ளது” என்கிறார் டாக்டர்.
கரும்பூஞ்சைத் தாக்குதலுக்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்து அவரிடம் கேட்டதற்கு…
``மூக்குப் பகுதியில் வீக்கம், மூக்கடைப்பு, அதீத சளித் தொந்தரவு, சளியில் ரத்தம் வருதல், இருமும்போது ரத்தம் வருதல், கண் வீக்கம் மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவை ஏற்படும்போது உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு விடுவது சிறந்தது. கரும்பூஞ்சைத் தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அது தாக்கியிருக்கும் பகுதியை மட்டும் அகற்றிவிடலாம். இல்லையென்றால் உடலில் அதன் தாக்குதல் பரவி உயிருக்கே உலை வைக்கும் நிலை ஏற்பட்டுவிடும். கண்ணில் தாக்கினால் கண்ணை அகற்றி விட வேண்டும். இல்லையென்றால் பார்வை நரம்புகளின் துளை வழியாகச் சென்று மூளையைத் தாக்கிவிடும் அபாயம் உள்ளது.
எனவே, மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாகக் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்பவர், ஆம்போடெரிசின் - பி மருந்து பற்றிச் சொன்னார்.
``கரும்பூஞ்சைத் தாக்குதல் ஏற்பட்டுள்ள பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, ஆம்போடெரிசின் – பி மருந்தைச் செலுத்துவதன் மூலம் அது மற்ற உறுப்புகளுக்குப் பரவுவதைத் தடுக்க முடியும்.
ஆம்போடெரிசின் – பி மருந்துக்கான தேவை இதுவரை பெரிய அளவில் இருந்ததில்லை. ஆகவே இந்தியாவில் நான்கைந்து மருந்து நிறுவனங்கள் மட்டுமே இம்மருந்தை குறைந்த அளவில் உற்பத்தி செய்து வந்தன. ஆகவேதான் அதற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது அமெரிக்காவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது சரியான முடிவு. அதே போல் நம் நாட்டிலேயே அம்மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கரும்பூஞ்சைத் தாக்குதல் எதனால் ஏற்படுகிறது என்கிற ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சரியான காரணங்கள் கண்டறியப்படும்போதுதான் அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களே பெரும்பாலும் கரும்பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொரோனா தொற்று ஏற்படாதபடி பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடப்பதே இச்சூழலில் முக்கியமானது” என்கிறார் ரவீந்திரநாத்.
தமிழகம், டெல்லி, குஜராத், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் கரும்பூஞ்சை தொற்றை Epidemic ஆக, அதாவது, பெருவாரியாகப் பரவும் நோயாக அறிவித்துள்ளன. மற்ற மாநிலங்களும் விரைவில் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-about-the-importance-of-amphotericin-b-in-black-fungus-treatment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக