Ad

வெள்ளி, 28 மே, 2021

`மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை!’ - ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய இந்த கூட்டம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பின்னர் நேற்று காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 43-வது கூட்டம் ஆகும்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி காட்சி மூலம் நடத்திய இந்த கூட்டத்தில், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நிர்மலா சீதாராமன்

இந்தக் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய உரையின் முக்கிய அம்சங்களை இங்கு பார்க்கலாம்.

``இந்த கூட்டத்தில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது மாநிலத்தின் சார்பாக பங்கேற்பதற்கு என்னைப் பரிந்துரைத்த தமிழக அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குழுவில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில் பங்களிப்பை வழங்கிடவும், இந்த கூட்டத்தில் பரிசீலனையில் உள்ள பல்வேறு விஷயங்களில் தமிழக அரசின் கருத்துகளை முன்வைக்கவும் நான் காத்திருக்கிறேன்.

இந்த மன்றத்தில் இது என்னுடைய முதல் உரையாகும். இங்கே, தமிழ்நாட்டு அரசின் பிரதிநிதியாகவும், எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாகவும், நான் பங்கேற்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக கடைபிடிக்கும் கொள்கைகள் மற்றும் லட்சியங்களுக்காக, அக்கட்சி மக்களின் தீர்க்கமான ஆதரவை பெற்றது. இந்த மன்றம் அமைக்கப்பட்டதிலிருந்து இது எங்கள் கட்சியின் முதல் உரையாகும். எனவே, நடைமுறையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் அமைப்பு மற்றும் மாநில சுயாட்சி மீதான அதன் விளைவுகள் குறித்து எங்கள் கருத்துகளை முன்வைக்க உங்களையும், இந்த மன்றத்தின் சக உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி தனது உரையை தொடங்கினார்.

பழனிவேல் தியாகராஜன்

``உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசிகள், கொரோனா தடுப்பு மருந்துகளாக அறியப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா காரணமாக 2021- 22 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியங்கள் இல்லை என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ளவ் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வரி விலக்கு கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருத்துவ பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் சிகிச்சை கருவிகள் மற்றும் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும் எனவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் வரி விலக்கு பட்டியலில் சேர்க்கப்படும்” என சீதாராமன் உறுதி அளித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ptr-palanivel-thiyagarajan-speech-in-gst-council-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக