சூயஸ் கால்வாயில் சிக்குண்ட ராட்சத கப்பல் விபத்தை அடுத்து இன்னொரு இன்னொரு பெரிய சம்பவம் இலங்கை கடலில் நிகழ்ந்துள்ளது. மே 15 அன்று இந்தியாவின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து, 25 டன் நைட்ரிக் அமிலம், பிற பெயர் குறிப்பிடப்படாத இரசாயனங்கள், மற்றும் அழகுசாதனப் பொருள்கள் என மொத்தம் 325 மெட்ரிக் டன் எரிபொருட்களைக் கொண்ட 1,486 கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு இலங்கை நோக்கி புறப்பட்டது ஒரு கப்பல். சிங்கப்பூரைச் சேர்ந்த இந்த எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் (MV X-Press Pearl) என்ற கப்பலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நங்கூரமிட்ட எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் (MV X-Press Pearl) கப்பலில் ஏற்பட்ட தீ, கப்பலின் எல்லா பாகங்களுக்கும் பரவியதால் ஏராளமான கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளன. இந்த கொள்கலன் கப்பல் கடந்த மே 20 அன்று இந்தியாவின் குஜராத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தபோது கடலோரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 25 பணியாளர்களும் செவ்வாய்க்கிழமை அன்று பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டனர். அவர்களில் இருவர் காலில் காயம் அடைந்து மருத்துவமனையில் தங்கியுள்ளனர் என்றும் மற்றவர்கள் கொழும்புவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் இந்த வாரம் கிழக்கு இந்தியாவைத் தாக்கிய சூறாவளியுடன் தொடர்புடைய பலத்த காற்று இலங்கை கடலோரங்களில் அசுரத்தனமாக வீசி வருகின்றது. இந்நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள இப்பெரிய விபத்துக்கு உதவ ஐரோப்பாவிலிருந்து தீயணைப்பு வீரர்களுடன் உள்ளூர் அதிகாரிகளும், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களும் இணைந்து கப்பலையும் அதன் சரக்குகளையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆயினும் அசுரத்தனமான அலைகளும், விடாது கொட்டும் மழையும் இந்த நடவடிக்கைக்கு பெரும் இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் விமானப்படை ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி புதன்கிழமை அன்று சுமார் 425 கிலோகிராம் தீயணைப்பு இரசாயனங்கள் கப்பலுக்குள் போடப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நான்கு இழுபறி படகுகள் மற்றும் மூன்று இலங்கை மற்றும் இந்திய கப்பல்கள் இந்த தீயணைப்பு முயற்சி நடவடிக்கையில் மேலும் இணைந்துள்ளன என இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் இந்திக டி சில்வா கூறி உள்ளார்.
இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இந்திய கடற்படை, மற்றும் மீட்பு நிபுணர்களுடன் இணைந்து ஒரு பெரிய சுற்றுச்சூழல் பேரழிவின் அச்சங்களுக்கு மத்தியில் நீருக்குள் மெல்ல மெல்ல கலந்து கொண்டிருக்கும் எண்ணெய் மற்றும் இரசாயன மாசுவை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கப்பல் மொத்தமாக மூழ்கினால், 325 மெட்ரிக் டன் எரிபொருள் கடலில் கலந்து, கடல் வாழ் உயிரினங்களின் சூழலியல் வாழ்வாதாரத்தை மொத்தமாக சேதப்படுத்தி விடக்கூடிய அபாயம் நிலவுகிறது.
இலங்கையின் நீர்கொழும்பு பகுதி அழகிய கடற்கரைகளுடன் கூடிய பிரபல சுற்றுலா தளம் மட்டுமன்றி, பெருமளவான மீனவர்கள் வாழும் பெரிய மீன்பிடி பகுதியாகும். எனவே இந்த தீ விபத்து கடல் வாழ் உயிரினங்களை மாத்திரமன்றி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.
கடல்நீர் பெருமளவில் மாசுபட்டு இருப்பதால், தற்காலிகமாக இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கப்பலில் இருந்து வெளியேறும் தீப்பொறிகள் அந்தப் பகுதியின் குடியிருப்பாளர்களுக்கு மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் அச்சப்படுகின்றனர். அதனால், உடனடியாக காற்று மற்றும் நீரின் தரத்தை சோதிக்கத் தொடங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கசிவு குறித்து ஏற்கனவே கப்பல் குழுவினர் அறிந்து இருந்ததாகவும், ஆனால் கசிவு ஏற்பட்டிருந்த கொள்கலன்களை இறக்குவதற்கு கத்தார் மற்றும் இந்திய துறைமுகங்கள் அனுமதி மறுத்து விட்டதாகவும் கப்பலுக்கு சொந்தமான எக்ஸ்-பிரஸ் ஷிப்பிங் நிறுவனம் கூறுகிறது. இந்தியாவின் குஜராத் ஹசிரா மற்றும் கத்தாரின் ஹமாத் ஆகிய இரண்டு துறைமுகங்களிலும் கொள்கலன்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே நைட்ரிக் அமிலத்தை கசியும் ஒரு கொள்கலனை கப்பலில் இருந்து இறக்குவதற்கு இரு துறைமுகங்களுக்கும் விண்ணப்பங்கள் செய்யப்பட்டதாகவும், ஆனால் கசிந்த அமிலத்தை சமாளிக்க சிறப்பு வசதிகளோ அல்லது நிபுணத்துவமோ எங்களிடம் இல்லை என்று காரணம் சொல்லப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அந்த இரு துறைமுகங்களும் இப்பிரச்னையை உதாசீனப்படுத்தாமல் முறையாக கையாண்டிருந்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கும்.
இந்த ஆசிட் கசிவுக்கு மோசமான பேக்கேஜிங் தான் காரணம் என்று கப்பலுக்கு சொந்தமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்களின் (X-Press Feeders) நிர்வாகத் தலைவர் டிம் ஹார்ட்னோல் கூறியுள்ளார். X-Press Pearl என்ற இந்த கொள்கலன் கப்பல் 2021-ம் ஆண்டில் கட்டப்பட்டது. 186 மீட்டர் நீளம் கொண்ட இது X-Press Feeders எனும் சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமானது.
இப்போதைய மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் இந்த X-Press Pearl கப்பல் தீ விபத்திலிருந்து மீண்டு, மீண்டும் நீரில் அதன் பயணத்தை தொடருமா இல்லை மொத்தமாக எரிந்து சாம்பலாகி கடலோடு கலந்து விடுமா என்பதுதான்.
ஏதோ ஒரு இடத்தில் நிகழும் சிறு தவறு, எங்கோ ஒரு இடத்தில் காட்டப்படும் சிறு அலட்சியம் எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்துகிறது என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது!
source https://www.vikatan.com/news/general-news/x-press-pearl-vessel-catches-fire-in-sri-lanka-coast
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக