நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் வரை கொரோனா பரவல் அதிகரித்தபடி இருந்த நிலையில், தற்போது தளர்வற்ற ஊரடங்கு அமலில் இருப்பதால் நோயின் தாக்கம் குறையத் தொடங்கியிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 448 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்கள்.
Also Read: கரும்பூஞ்சை நோய்! - மருத்துவர்கள் விளக்கங்களும் சிகிச்சையும்
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றவர்கள் `மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கறும்பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் இந்த நோய் பரவி வருவது மக்களிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கறும்பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண்ணான அவர், கொரோனா நோய்த்தொற்று காரணமாக மே 1-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய அவருக்கு சில தினங்களுக்கு முன்பு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கறும்பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று உயிரிழந்தார். கறும்பூஞ்சை நோய்க்கு நெல்லை மருத்துவமனையில் பெண் பலியாகி இருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கறும்பூஞ்சை தொற்றால் நெல்லை மருத்துவமனையில் ஏற்பட்டிருக்கும் முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/tamilnadu/tirunelveli-woman-died-due-to-black-fungus-infection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக