Ad

சனி, 15 மே, 2021

'தஞ்சாவூர்:அதிகரிக்கும் கொரோனா: ஆம்புலன்ஸில் பல மணி நேர காத்திருக்கும் அவலம்!-கண்ணீரில் உறவினர்கள்!'

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகாக வருபவர்கள் ஆம்புலன்ஸிலே பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டுள்ளது.தன் உறவினர் ஒருவரை அழைத்து வந்த வயதான பெண் ஒருவர், "எதாவது பண்ணி உசுர காப்பாதுங்க!" என தன்னைவிட வயதில் குறைந்த செவிலியர் ஒருவரின் காலில் விழுந்து கெஞ்சியது மனதை கணக்கச்செய்தது.

ஆம்புலன்ஸில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதி தீவிரமடைந்து வருகிறது.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது அனைவரையும் பெரும் கவலையடையச் செய்துள்ளது.கொரோனாவின் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதும் குறிப்பிடதக்கது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 32,903 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 27,637 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,891 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த மூன்று நாட்களில் மட்டுமே 28 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை

இந்நிலையில் நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆக்ஸிஜன் படுக்கைகள் பெரும்பாலும் நிறைந்துவிட்டதால் கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருபவர்கள் ஆம்புலன்ஸிலேயே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி கூறியதாவது,"கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில் மாற்று ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை.

தொற்று தீவிரமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வருபவர்கள் 12 மணி நேரம் வரை ஆம்புலன்ஸிலேயே காத்திருக்க வேண்டிய துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நேற்று மாலை நாச்சியார்கோயில் பகுதியிலிருந்து மாலை 5 மணிக்கு வந்த பெண் ஒருவருக்கு இரவு 11.30 மணிக்குத்தான் படுக்கை கிடைத்தது.அதுவரை அவர் ஆம்புலன்ஸிலேயே காக்க வைக்கப்பட்டுள்ளார்.ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கை அவருக்குத் தேவைப்பட அந்த வசதி இல்லாத நார்மல் படுக்கையிலேயே இடம் கிடைத்துள்ளது. போதுமான சிகிச்சை கிடைக்காததால் அந்த பெண் உயிரிழந்துவிட்டார்.

அரவிந்தசாமி

இதே போல் வயதான பெண் ஒருவர் தன் உறவினரை ஆம்புலன்ஸில் அழைத்து வந்திருந்தார்.பல மணி நேரம் கடந்தும் மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ யாரும் வந்து பார்க்கவில்லை. படுக்கையும் கிடைக்கவில்லை. பின்னர் அவராக போய் டாக்டரை அழைத்துள்ளார் அட்மிஷன அப்புறம் போடுங்க இப்ப வந்து ஆம்புலன்ஸில் படுத்திருப்பவருக்கு ஒரு ஊசியாவது போடுங்க என சொல்ல யாரும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து வயதில் குறைந்த செவிலியரின் காலில் விழுந்தும் எந்த புண்ணியமும் இல்லை.இது போல் என்ன நடக்குமோ என்ற அச்சத்தோடு கண்ணீருடன் பலர் காத்திருக்கின்றனர்.போர் கால நடவடிக்கையின் மூலமே இந்தத் துயரை துடைக்கமுடியும்.அரசு அதை உடனடியாக செய்யவேண்டும் " என்றார்.



source https://www.vikatan.com/news/politics/corona-patients-waiting-for-12-hours-to-get-a-bed-in-tanjore-government-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக