Ad

வெள்ளி, 14 மே, 2021

̀கொரோனா வந்து குணமானதும் டூத் பிரஷ்ஷை உடனே மாத்திடுங்க!' - மருத்துவர் சொல்லும் காரணம்

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என பல சவால்களைச் சந்தித்து வருகிறோம். என்னதான் எச்சரிக்கையாக இருந்து வந்தாலும் யார், எப்போது, எப்படி கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது யூகிக்க முடியாத ஒன்றாகவே இருந்துவருகிறது.

பல் மருத்துவர் பாக்கியலட்சுமி வினோத்

ஒருமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கூட மீண்டும் பாதிக்கப்படுவதைக் கண்கூடாகவே பார்க்கிறோம். கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும் கூட எச்சரிக்கைகளுடன் இருக்க வேண்டியது அவசியம் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில் கோவிட் பாசிட்டிவ் வந்து குணமடைந்தவர்கள் தாங்கள் பயன்படுத்திய டூத் பிரஷ்களைக் கண்டிப்பாக உடனடியாக மாற்ற வேண்டும் என்கின்றனர் பல் மருத்துவர்கள். இதுகுறித்து பல் மருத்துவர் பாக்கியலட்சுமி வினோத்திடம் பேசினோம்.

``தடுப்பூசிகள் போட்டிருந்தாலும் சரி, ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு குணமடைந்திருந்தாலும் மீண்டும் தொற்று ஏற்படவே ஏற்படாது எனக் கூறமுடியாது. எனவே, தகுந்த எச்சரிக்கைகளுடன் இருக்க வேண்டியது அவசியம். அதில் டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டியதும் அடங்கும். ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டால் கூட எதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதைக் கண்டறிந்து அவற்றை ஒதுக்கி விடுகிறோம். இப்படி எத்தனையோ இடங்களில் பார்த்துப் பார்த்து கவனமாக இருந்தாலும் சில முக்கிய இடங்களைக் கோட்டை விடவே செய்கிறோம்.

Tooth brush

வழக்கமாகவே, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியது அவசியம். இதனால், பிரஷ்ஷில் ஏதாவது சேதம் ஏற்பட்டு அதனால் வாயில் புண் ஏற்படுவது தவிர்க்கப்படும். இது மட்டுமல்லாமல், வாயிலிருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் பிரஷ்ஷில் சேர்ந்து விடுவதாலும் அதை அடிக்கடி மாற்ற வேண்டியது அவசியமாகிறது. இப்படி அடிக்கடி டூத் பிரஷ்ஷை மாற்றுவது கிருமித் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். மட்டுமன்றி குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் நோய்த் தொற்று பரவாமல் காக்கவும் முடியும். கொரோனா காலத்தில் மட்டுமல்லாது இனிவரும் காலத்திலும் சாதாரண காய்ச்சல் வந்துபோனாலும் கூட டூத் பிரஷ்களை மாற்றுவதைப் பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

குடும்பத்திலுள்ள அனைவரின் டூத் பிரஷ்களும் ஒரே ஸ்டாண்டில் இருக்கும். இதன் மூலம் ஒருவரின் பிரஷ்ஷிலிருந்து எளிதாக மற்றவரின் பிரெஷ்ஷுக்கு கிருமிகள் பரவி அதனால் தொற்றுகள் பரவும். பிரெஷ்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கவும் பூச்சிகள் தீண்டாமல் இருக்கவும் மூடி வைத்த பிரெஷ் உபயோகிக்கிறோம். அதுவும் ஒரு வகையில் கேட்டையே விளைவிக்கிறது. ஈரமான பிரெஷ்களில் கிருமிகள் பன்மடங்காக பெருகுகின்றன. காலப்போக்கில் மாற்றமடைந்து வலுவடைந்த வைரஸ் கிருமிகளாக மாறுகின்றன. இதுவே கொரோனா வைரஸுக்கும் பொருந்தும். இதனால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும் தங்களை அறியாமலேயே மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட நேர்கிறது.

Mouthwash

Also Read: கோவிட் 19 பாதிப்பைக் குறிக்கும் சி.டி.ஸ்கேன் மதிப்பெண்... எப்படி வழங்கப்படுகிறது?

டூத் பிரெஷ்களை மாற்றாததுதான் கொரோனா தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் என்று கிடையாது. வீட்டைவிட்டு வெளியே சென்றுவரும்போது கைகளை சானிட்டைஸ் செய்வது எவ்வளவு முக்கியமோ அதைப் போல வாயையும் அடிக்கடி மவுத் வாஷ் பயன்படுத்தி சுத்தம் செய்வது அவசியம் என்கிறார்" பல் மருத்துவர் பாக்கியலட்சுமி வினோத்.



source https://www.vikatan.com/health/healthy/why-people-who-recovered-from-the-covid-19-should-change-the-tooth-brush

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக