Ad

சனி, 15 மே, 2021

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு உதவி; காங்கிரஸ் இளைஞரணி தலைவரை விசாரித்த போலீஸார்! - நடந்தது என்ன?

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முதலாம் கோவிட் அலையின் போது ஏற்பட்ட பாதிப்புகளையும் உயிர்ச்சேதங்களையும் காட்டிலும் தற்போது இரண்டாம் அலையில் உயிர்ச் சேதங்கள் மிகுதியான அளவில் பதிவாகிக் கொண்டிருக்கிறது. நாட்டில் பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமலும், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் கொரோனா நோயாளிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில் தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என அனைவரும் களத்தில் இறங்கி மக்களுக்குப் பேருதவி புரிந்து வருகின்றனர். ஆக்ஸிஜன் கிடைக்காமல் துடிக்கும் நோயாளிகளுக்குத் தேடிப்பிடித்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்தும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கியும் உதவி செய்து வருகின்றனர்.

கொரோனா இரண்டாம் அலை

இந்நிலையில் கொரோனா பாதிப்பும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் மிகுதியாக உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை ஏற்பாடு செய்து தருவது, ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்குவது எனப் பல மருத்துவ அவசர உதவிகளைச் செய்து வரும் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஸ்ரீநிவாஸ் பிவியை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு உட்படுத்திய விவகாரம் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞரணி தலைவர் ஸ்ரீநிவாஸ் டெல்லியில் கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ளதால் அவரது தலைமையில் அம்மாநில நிர்வாகிகளை ஒன்றிணைத்து "எஸ்.ஓ.எஸ் - ஐ.ஓய்.சி" என்ற குழுவினை அமைத்தார். அந்த குழுவினர் டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தையும் செய்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வீட்டுச் சிகிச்சையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உணவுப் பொருள்கள், மருந்து மாத்திரைகள் வழங்குவது முதல், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்து தருவது வரை அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். இளைஞரணி தலைவர் ஸ்ரீநிவாஸின் செயலுக்கு டெல்லி மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது. இக்கட்டான சூழலில் மக்கள் உயிர் காக்கக் களத்தில் இறங்கி உதவி வரும் ஸ்ரீநிவாஸ் குழுவினர் டெல்லியில் இயங்கி வரும் நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் இதர சில நாடுகளின் தூதரகங்களுக்கும் ஆக்ஸிஜன் வழங்கி உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஸ்ரீநிவாஸ் பிவி மக்களுக்கு எப்படி உதவி செய்கிறார்?, உயிர் காக்கும் மருந்துகளை எப்படி, எங்கிருந்து ஏற்பாடு செய்து மக்களுக்கு வழங்கி வருகிறார்? என்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்கத் தேசிய காங்கிரஸ் இளைஞரணி தலைமை அலுவலகத்திற்கு விரைந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் ஸ்ரீநிவாஸ் பிவியிடம் மருத்துவ பொருள்கள் எங்கிருந்து கிடைக்கிறது, இவ்வளவு செலவு செய்வதற்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது. குறிப்பாக ரெம்டெசிவிர் மருந்துகள் எப்படி கிடைக்கிறது என்று சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணை தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ், "திடீரென என்னுடைய அலுவலகத்திற்கு வந்த போலீஸார், என்னை வெளியே வருமாறு அழைத்தனர். நானும் சென்றேன். அவர்கள் யாரோ ஒருவர் நீதிமன்றத்தில் அரசியல்வாதிகள் செய்து வரும் உதவிகளை போலீஸார் கண்காணிக்க வேண்டும் என்று மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதனால், நீதிமன்றம் எங்களைக் கண்காணித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது என்றனர். நான் பதிலுக்கு நாங்கள் யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எங்கள் கட்சியின் சார்பில் ஒன்றும் சட்டவிரோத செயல்களைச் செய்து விடவில்லை.

மக்கள் உயிர்காக்கும் நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டு வருகிறோம். அதனால் எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நான் மிகவும் வெளிப்படையான முறையில் தான் மக்களுக்கு உதவி வருகிறேன். என் தரப்பு விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக போலீஸாரிடம் அளித்துள்ளேன். எங்களிடம் துருவி துருவி விசாரணை மேற்கொள்ளும் போலீஸார் டெல்லியில் கொரோனா நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தினார்களா என்று தெரிய வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால், குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், "காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் எந்த வித அரசியல் நோக்கமும் இல்லை. கடந்த 4-ம் தேதி உயர் நீதிமன்றம் ரெம்டெசிவிர் மருந்து அரசியல்வாதிகளுக்கு எப்படிக் கிடைக்கிறது, எதனடிப்படையில் அவர்கள் மக்களுக்கு அவற்றை வழங்கி வருகின்றனர்? என்று எங்களிடம் கேள்வி எழுப்பியது. மேலும், சட்டவிரோதமாக கொரோனா மருந்துகளை விநியோகம் செய்து வருபவர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்களை அறிவுறுத்தி இருந்தது. அதனால், தான் தற்போது காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸின் செயல்களை நாங்கள் கவனித்து விசாரித்தோம். இவரை மட்டுமல்ல, முன்னதாக பாஜக எம்.பி கவுதம் கம்பீர் உள்ளிட்ட பலரையும் நாங்கள் விசாரித்துள்ளோம். எனவே இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்" என்றனர்.

கவுதம் கம்பீர்

மக்களுக்கு உதவி வரும் அரசியல்வாதிகள் மற்றும் தன்னார்வலர்களைக் குறி வைத்து போலீஸார் விசாரணை மேற்கொள்வது டெல்லி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும், நாட்டில் டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கொரோனா நோயாளிகளின் அத்தியாவசிய தேவை பொருள்களான ரெம்டெசிவிர் மருந்து மற்றும் ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் கள்ளச்சந்தையில் அவற்றைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தவிர்க்கவும், தடுக்கவும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தவறில்லை என்றும், முறையான ஆவணங்களையும், விளக்கத்தையும் அளித்து விட்டால் எந்த பிரச்னையும் இல்லை என்றும் நீதிபதிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/delhi-crime-police-inquired-congress-youth-leader-srinivas-over-his-covid-relief-distribution

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக