Ad

வெள்ளி, 7 மே, 2021

ஆக்ஸிஜன் பிரச்னையை சமாளிக்க உதவும் லிங்க முத்திரை... செய்வது எப்படி? - நிபுணர்கள் வழிகாட்டல்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. உயிர்காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கும் படுக்கைகளுக்கும் நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய நகரங்களின் மருத்துவமனை வாசல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் காத்துக் கிடக்கின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பல்வேறு நோயாளிகள் இறப்பதையும் கண் முன்னே காண்கிறோம்.

கொரோனா நோயாளிகள்

நாடு முழுவதும் உள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், லிங்க முத்திரை எனும் யோகப் பயிற்சியின் மூலமாக ஒருவருக்கு ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சரி செய்ய இயலும் எனக் கூறப்படுகிறது. லிங்க முத்திரை ஒருவரின் உடலில் எவ்வாறு செயல்பட்டு ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது, மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பது தொடர்பான தகவல்களை இயற்கை மருத்துவர் தீபாவிடம் கேட்டறிந்தோம்.

``பொதுவாக இப்போது நிறைய இடங்களில் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இது நம் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு மற்றும் நாடித்துடிப்பின் அளவைக் கணக்கிடும். அவ்வாறு கணக்கிடும்போது, நம்முடைய உடலில் ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழ் இருந்தால் நுரையீரல் நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். இந்த நிலையில் சீரான சுவாசம் பெற ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி தேவைப்படும். இதுவே பெரும்பாலான கொரோனா நோயாளிகளின் நிலை.

கொரோனா நோயாளிகள்

இவ்வாறு நுரையீரலில் ஏற்படும் நோய்த்தொற்றைக் குறைக்க லிங்க முத்திரை உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்து இருப்பது உண்மையே. நம் கைவிரல்கள் ஒவ்வொன்றும் பஞ்ச பூதத்தில் ஒரு பூதத்தைக் குறிக்கும். கட்டை விரல் - நெருப்பு, ஆள்காட்டி விரல் - காற்று, நடுவிரல் - ஆகாயம், மோதிர விரல் - பூமி, சுண்டு விரல் - நீர் என ஒவ்வொரு விரலும் ஒரு பஞ்ச பூதத்தை ஆதாரமாகக்கொண்டு செயல்படும். இந்த விரல்களுக்கு அழுத்தம் கொடுக்கும்போது நம் உடலில் உள்ள ஒரு பஞ்ச பூதத்தை நாம் கட்டுப்படுத்துகிறோம் என்பது பொருள்.

நுரையீரல் தொற்று என்பது நுரையீரலைச் சுற்றி நீர் சேர்கிறது என்பதைக் குறிக்கும். அப்படி நீர் சேரும்போது, நுரையீரல் விரிந்து, சுருங்குவதில் தடை ஏற்படும். அதனால் அணுக்களுக்குப் போக வேண்டிய ஆக்ஸிஜன் அளவில் தடை ஏற்படும். அதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதையே உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை என்கிறோம்.

கொரோனா

லிங்க முத்திரை செய்யும்போது, உடலில் வெப்ப நிலை அதிகமாகும். அவ்வாறு ஏற்படும் வெப்பநிலை நுரையீரலில் தேங்கி நிற்கும் தேவையற்ற நீரை கரைத்துவிடும். இதனால் நுரையீரல் சீராக இயங்கத் தொடங்கும். உடலில் சீராக ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, உடலில் கழிவுகள் சேர்வது, ரத்த நாளங்கள் சீராகச் செயல்படாமல் போவது என்று மூன்று முக்கிய காரணங்கள் நோய்ப் பரவலுக்கு காரணமாக இருக்கின்றன. இவை அனைத்தையும் சீராக வைத்துக்கொள்ள லிங்க முத்திரை உதவும். மேலும் பயம், பதற்றம், மாதவிடாய்க் கோளாறுகள் போன்ற பிரச்னைகளையும் சீர் செய்யும்.

சளி, மூச்சிரைப்பு, சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் இதை முதலுதவி போன்று அன்றாடம் செய்யலாம். அல்சர், அஜீரணக் கோளாறுகள், பித்தம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் லிங்க முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம்" என்ற மருத்துவர் தீபாவைத் தொடர்ந்து லிங்க முத்திரை செய்யும் வழிமுறைகளை விளக்குகிறார் யோகப் பயிற்சியாளர் அமிர்தா.

முத்திரை

``சிலருக்கு தொடர்ந்து லேசான காய்ச்சல், சளி, மூக்கடைப்பு போன்றவை இருக்கும். மாத்திரை போட்டால் அந்த நேரத்துக்கு மட்டும் காய்ச்சல் குறைந்து சில மணி நேரத்தில் மீண்டும் காய்ச்சல் அதிகரிக்கும். இந்த நிலையில் இருப்பவர்கள் லிங்க முத்திரையை 45 நிமிடங்கள் தொடர்ந்து செய்தால் உடல் சூடு அதிகரித்து, அதன் பின் வியர்த்துக் கொட்டும். அதாவது, உடலின் இயற்கை சூடு 102 டிகிரி அதிகரிக்கும். காய்ச்சலை உருவாக்கிய கிருமிகள் அந்த வெப்பத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்து விடும்.

செய்முறை :

இரண்டு கைகளின் விரல்களையும் இறுக்கமாகக் கோத்துக் கொள்ளவும்.

இடது கை கட்டை விரலை மட்டும் நேராக இருக்கும்படி மேலே தூக்கவும்.

ஓர் உள்ளங்கையால் இன்னோர் உள்ளங்கையில் அழுத்தம் கொடுக்கவும்.

அடுத்து இடது கை கட்டை விரலை மடக்கி, வலது கை கட்டை விரல் மேல் இருக்கும்படி உள்ளங்கையில் அழுத்தம் கொடுக்கவும்.

பத்மாசன நிலையில் அமர்ந்து செய்தால் முழுப்பலனும் கிடைக்கும்.

பத்மாசன நிலையில் செய்ய முடியாதவர்கள் அவர்களுக்கு வசதியான நிலையில்கூட செய்யலாம். லிங்க முத்திரை யோகா செய்யும்போது, முதுகு வளைவின்றி நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?

ஒரு நாளில் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். ஒரே நேரத்தில் செய்வதாக இருந்தால் அதிகாலை சூரியனின் வெப்பம் அதிகமாகும் முன் செய்யலாம்.

அல்லது 15 நிமிடங்கள் எனக் காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களும் செய்யலாம்" என்று விளக்கினார்.



source https://www.vikatan.com/health/healthy/how-to-do-linga-mudra-at-home-which-helps-to-increase-oxygen-flow

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக