Ad

வெள்ளி, 7 மே, 2021

கொரோனாவுக்கு எதிரான போர்... சமூக வலைதளங்கள் மூலம் உதவிகள் பெறுவது எப்படி?! ஒரு வழிகாட்டல்!

கொரோனா பெருந்தொற்று இதுவரை நடந்திராத, நாம் நினைத்துப் பார்க்காத சூழல்களை எல்லாம் நம் கண் முன்னே காட்டிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைக்குச் சென்றால் படுக்கைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருந்துப் பற்றாக்குறை என பெருந்தொற்றை விட நாம் சமாளிக்க வேண்டிய பிரச்னைகள் நம் கண் முன்னே தோன்றி நிற்கிறது. படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் இருக்கும் மருத்துவமனையைக் கண்டறிவதே பெரும் சோதனையாக இருக்கிறது. அரசு மற்றும் மருத்துவமனைகளை மட்டும் நம்பி இருக்காமல் நாமாகவும் உயிர் காக்கும் உபகரணங்களுக்கான தேடல்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த இடத்தில்தான் சமூக வலைதளங்களை அதிகளவில் மக்கள் உபயோகப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

Social Media

நமக்குத் தெரிந்தவர்கள் மூலம் மட்டும் தேடலை மேற்கொள்ளாமல், சமூக வலைதளங்களில் நம் தேடலையும் நம் தேவையையும் பதிவு செய்வது, கூடிய விரைவில் நமக்கு உதவி கிடைக்கும் சாத்தியத்தை ஏற்படுத்துகிறது. பொது மக்களை மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளையும் கவனிக்க வைக்கிறது.

எப்படி சமூக வலைதளங்களின் மூலம் நாம் உதவிகளைப் பெறுவது?

சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றில் தம் தேவைகளைப் பதிவு செய்கின்றனர் பயனர்கள். இவற்றில் வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டரில் பகிர்வதன் மூலம் விரைவாக உதவிகள் கிடைப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர் பயனர்கள். எந்தத் தளமாக இருந்தாலும் உதவிகள் விரைவாகக் கிடைக்க வேண்டும் என்றால் சரியான தகவல்களை, சரியான முறையில் பகிர்வது மிகவும் அவசியம்.

நாம் உதவி கேட்கும்போது என்னென்ன தகவல்கள் இடம்பெற வேண்டும்?

என்ன தேவை, பாதிக்கப்பட்டவர் பெயர், வயது, பாதிக்கப்பட்டவரின் ப்ளட் குரூப், ஆக்ஸிஜன் தேவை என்றால் பாதிக்கப்பட்டவரின் ஆக்ஸிஜன் அளவு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனில் மருத்துவமனையின் பெயர், மருத்துவனைத் தேவை என்றால் பாதிக்கப்பட்டவரின் இருப்பிடம், தொடர்பு கொள்ள வேண்டியவரின் தொடர்பு எண், தொடர்பு கொள்ள வேண்டியவர் பெயர் மற்றும் தேதி.

எவ்வளவு அதிக தகவல்கள் இருக்கின்றனவோ, அவ்வளவு விரைவாகச் சரியான உதவிகள் கிடைக்கும்.

கொரோனாவிற்கு உதவுவதற்கான ட்விட்டரின் தனிப்பக்கம்

சமீப காலங்களில் பயனர்கள் அதிகமாக உதவி கேட்கும் தளமாகவும், தங்கள் குறைகளைப் பதிவு செய்யும் தளமாகவும் மாறி இருக்கிறது. பதிவு செய்வது மட்டுமின்றி அதில் பதிவு செய்யும் உதவிகள் விரைவாகக் கிடைக்கின்றன மற்றும் ட்விட்டரில் பதிவு செய்யும் குறைகளுக்குப் பதிலும் கிடைக்கின்றன. இதனால் மக்கள் ட்விட்டரை அதிகமாக நாடத் துவங்கியிருக்கின்றனர்.

இந்தக் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவி கிடைக்க ட்விட்டரும் அதற்கென ஒரு பக்கத்தை ஒதுக்கியிருக்கிறது. அந்தப் பக்கத்தில் (பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்) கொரோனாவிற்கு உதவி செய்ய முன் வருபவர்கள், ஆக்ஸிஜன், படுக்கைகள், ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் இருப்பு பற்றிப் பதிவிடுபவர்களின் பதிவுகளையும் நம் ஊரின் பெயரைப் பயன்படுத்தித் தேட முடியும்.

ட்விட்டரைப் போலவே ஃபேஸ்புக்கிலும் நம் தேவைகளைப் பதிவு செய்யலாம். ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இரண்டில் எந்தத் தளத்தில் பதிவு செய்தாலும் சரியான ஹேஷ்டேக்குகளைப் (#) பயன்படுத்துவது மிகவும் அவசியம். இதனால் நமக்கு அதிகமான பாலோவர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. புதிதாகக் கணக்கு தொடங்குபவர்கள் கூட ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் எளிதாக உதவிகளையும், நமக்குத் தேவையான விபரங்களையும் பெற முடியும்.

ட்விட்டரில் பயன்படுத்த வேண்டிய ஹேஷ்டேக்குகள் (#): #COVID19IndiaHelp #COVIDEmergencyIndia #COVIDIndiaSOS

டெலிகிராம் செயலியிலும் கொரோனாவுக்கான விபரங்களை அளிப்பதற்கென்றே சில குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் இணைவதன் மூலம் நமக்குத் தேவையான உதவிகளின் விபரங்களைப் பெற முடியும்.

டெலிகிராம் குழுக்கள்: ICLU:Covid Response, Covid Resource Pan India

தமிழக அரசும் மருத்துவமனையில் படுக்கை தேவைப்படுபவர்கள் பதிவு செய்வதற்காகக் கூகுள் ஃபார்ம் (பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்) ஒன்றையும் உருவாக்கியுள்ளது. அரசின் அந்த கூகுள் ஃபார்மில் மருத்துவமனை படுக்கை வசதி தேவைப்படுபவர்கள் பதிவு செய்யலாம். #BedsforTN என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தியும் ட்வீட் செய்யலாம் மற்றும் @104_GoTN என்ற கணக்கை டேக் செய்யலாம். தமிழகத்தில் 104 என்ற எண்ணை மருத்துவ உதவிகளுக்குப் பயன்படுத்தலாம்.

ஒற்றுமையாகச் செயல்பட்டு கொரோனாவை வெல்வோம் மக்களே!



source https://www.vikatan.com/technology/tech-news/how-to-use-social-media-effectively-for-coronavirus-emergencies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக