Ad

சனி, 15 மே, 2021

Covid Questions: தடுப்பூசி இடைவெளியை அதிகரித்த அரசு... இதற்கு முன்பு போட்டவர்கள் என்ன செய்வது?

என் வயது 70. கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை இரண்டு டோஸும் போட்டுக்கொண்டேன். நான்காவது வார முடிவில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டேன். அதற்கு அடுத்தநாள் அந்த இடைவெளியை 6 முதல் 8 வாரங்களாக அரசு நீட்டித்தது. இப்போது மீண்டும் அதை 12 முதல் 16 வாரங்களாக நீட்டித்திருக்கிறது. அப்படியானால் என்னைப் போல 6 வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு தடுப்பூசி வேலை செய்யாது என அர்த்தமா? இடைவெளியை நீட்டித்துக்கொண்டே போவதன் பின்னணிதான் என்ன?

- கே.சுப்ரமணியன், சென்னை - 45

தடுப்பூசி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்.

``இந்த இடைவெளி நீட்டிப்பானது கோவிஷீல்டுக்கு மட்டும்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இரு தவணைகளுக்கிடையிலான இடைவெளியை நீட்டிக்கும்போது தடுப்பூசியின் செயல்திறன் கூடுவதாக அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதாவது 6 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்வோருக்கு, 6 வாரங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்டவர்களைவிடவும் பலன் சற்று அதிகம் என்கிறது மருத்துவ அறிவியல். இது ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டியின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டும்தான் பொருந்தும்.

தொற்று நோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

இரண்டாவது தவணையைத் தள்ளிப்போடுவதன் மூலம் தற்போது நிலவும் தடுப்பூசித் தட்டுப்பாட்டு நிலையையும் சமாளிக்க முடியும் என்பதும் இதற்கொரு காரணம். நீங்கள் எந்தத் தடுப்பூசி எடுத்துக் கொண்டீர்கள் என்ற தகவல் இல்லை. எந்தத் தடுப்பூசியாக இருந்தாலுமே நீங்கள் பயப்படுகிற அளவுக்கு அதன் செயல்திறனில் பெரிய குறைபாடு இருக்காது. கவலை வேண்டாம்.

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்,மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினந்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/news/healthy/why-govt-extended-the-gap-for-second-dose-of-covishield

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக