Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

முதுமையின் முதல் அறிகுறி என்ன? | முதுமை எனும் பூங்காற்று #MyVikatan

முதுமையின் முதல் அறிகுறி பற்றித் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆவலாக இருக்கிறதா ? இதோ அதற்கான பதில்!

முதுமையின் தொடக்கம் எப்பொழுது என்று சரியாகத் தெரியாத நிலையில், முதுமையின் முதல் அறிகுறியைப் பற்றிக் கூறுவது சிரமத்திலும் சிரமம். எவ்வித நோய்களும் இல்லாமல் இருப்பவர்கள் பலர் என்னுடன் பகிர்ந்துகொண்ட செய்திகளை வைத்தும், அதனுடன் எனது அனுபவத்தை வைத்தும் (நான் முதுமை அடைந்து விட்டேனா இல்லையா என்பது எனக்கே தெரியாது!)

டாக்டர் வி எஸ் நடராஜன்

ஒரு சில முதுமைக்கால ஆரம்ப அறிகுறிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

⬤ பொதுவாக முதலில் தோன்றுவது உடல்வலிதான். உடலின் எந்தப் பகுதியில், எப்பொழுது வேண்டுமானாலும், எந்தக் காரணமும் இல்லாமல் கூட வலி வரும். சற்று ஓய்வு எடுத்த பின்னரோ, தானாகவோ அந்த வலி மறைந்து விடும்.

⬤ உடலில் எந்த இடத்திலும் முக்கியமாக - காலில் சிறிது அடிபட்டாலும் தாங்க முடியாத வலி உண்டாகும். அது குணமடைய பல நாட்கள் அல்லது சில வாரங்கள் கூட ஆகலாம்.

⬤ ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும்போது ஏதாவது ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்றால், (உதாரணம்: கைபேசி, பேனா, புத்தகம், நாளிதழ்) யாராவது ஒருவர் எடுத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும்.

⬤ நடக்கும்போதோ, எழுதும்போதோ, வேறு ஏதாவது வேலையைச் செய்யும் போதோ சற்று களைப்பு ஏற்படுவதாகத் தெரியும். அப்போது சற்று ஓய்வு எடுக்க வேண்டும் போலத் தோன்றும்.

⬤ இரவில் படுத்தவுடனேயே தூக்கம் வராது. அடிக்கடி விழிப்பு உண்டாகும். விடியற்காலையிலேயே தூக்கம் கலைந்துவிடும்.

⬤ சிறிய அளவில் மலச்சிக்கல் ஏற்படும். சிலருக்கு வயிற்றில் காற்று நிறைய நிரம்புவதால் அடிக்கடி பெரும் சத்தத்துடன் காற்று வெளியேறும். ஆனால், இதில் துர்நாற்றம் இருக்காது.

⬤ கார், பஸ் அல்லது ரயிலில் நெடுந்துôரம் பயணம் செய்தவுடன் அடுத்த நாள் முழுவதும் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும்.

⬤ சின்னச் சின்னச் செய்திகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளச் சற்று சிரமமாக இருக்கும். குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொள்ளும் புது பழக்கம் ஆரம்பமாகும்.

⬤ வயது ஆக ஆகச் சற்று குழந்தைத்தனமும் வெளிப்படும். அடிக்கடி முன் கோபம் வரும். இது முக்கியமாக நெருங்கிய உறவினர்கள்மீது வரும்.

⬤ பேச்சிலும், காரியத்திலும் சற்று அதிகமாகவே சுயநலம் இருப்பது தெரிய வரும்.

⬤ கைகளில் சிறிது நடுக்கம் ஏற்படலாம், முக்கியமாகப் பலரது முன்னிலையில் இது அதிகமாகத் தெரியும்.

⬤ வெளியில் தனியாக நடக்கும்போது துணைக்கு கூடவே யாராவது ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் நினைக்கத் தோன்றும்.

⬤ பாலுணர்வு சற்று குறைய ஆரம்பிக்கும். அதைச் செயல்படுத்துவதிலும் சற்று குறையிருப்பது தெரிய வரும்.

ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேற்கூறிய சிறு சிறு தொல்லைகள் எல்லாம் முதுமையின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் அல்லது மறைந்து தாக்கும் நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். உதாரணம்: நீரழிவு நோய், காச நோய், ரத்த சோகை, தைராய்டு தொல்லை, மனச்சோர்வு, புற்றுநோய் மற்றும் சத்துணவு குறைவு.

சிறு சிறு தொல்லைகள் தொடர்ந்து உங்களது வாழ்க்கைத்தரத்தை பாதிப்பதாக இருப்பின், ஏன் உடனே உங்களது மருத்துவரிடம் சென்று இது முதுமையின் விளைவா, நோயின் ஆரம்ப அறிகுறியா என்று தெரிந்து கொள்ள கூடாது? இது ஒரு அனுபவ அலசல் மட்டும்தான். இதுவே முழுமையான மற்றும் முடிவான கருத்தானதல்ல!

- பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

முதியோர் நல மருத்துவர்

டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை



source https://www.vikatan.com/news/healthy/senior-citizen-symptoms

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக