Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

விழுப்புரம்: ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து; பறிபோன ஓட்டுநர் உயிர்! -சூறையாடப்பட்ட பேருந்து

விழுப்புரம், ஊரல் கரைமேடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன்(28). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் நேற்று (02.12.2021) இரவு பானாம்பட்டு சாலை அருகே அர்ஜுனன் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது விழுப்புரத்திலிருந்து புதுவை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில், பேருந்து சக்கரத்தின் அடியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் அர்ஜுனன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த அர்ஜூனனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பேருந்தை மடக்கிப்பிடித்துள்ளனர். இந்த விபத்தை கண்டு அச்சமடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனர்

ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரின் நண்பர்கள், உறவினர்கள் பேருந்தின் அனைத்து கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் பேருந்தின் பின்புறத்தில் தீயிட்டும் கொளுத்தியுள்ளனர். இதனால் பயணிகள் பலரும் அச்சமடைந்து ஓட்டம் பிடித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததோடு உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

`பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்... இறந்த அர்ஜுனனின் உடலை எடுக்க விடமாட்டோம்' என்று இறந்தவரின் உறவினர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் மேலும் அதிகரித்தது. ஆகவே, கூடுதலான காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திய காவல்துறை, அதன் பின்னர் அர்ஜுனனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உடைக்கப்பட்ட தனியார் பேருந்து

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விழுப்புரம் நகர காவல்துறையினர். தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/auto-driver-death-in-private-bus-collision-in-viluppuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக