Ad

சனி, 4 டிசம்பர், 2021

பாலையாவின் `அகண்டா' விமர்சனம்: சும்மாவே ஃபைட்டர்ஸ் பறப்பாங்க... இதுல ஃபேன்டஸினா கேட்கவா வேணும்?

பாலகிருஷ்ணா படம் என்றாலே டோலிவுட்டில் ஒரே கொண்டாட்டம்தான். ஆக்‌ஷன் சீக்வென்ஸ்களும் பன்ச் டயலாக்குகளும் அரங்கத்தை அதிர வைக்கும். அதிலும் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு பக்கா மாஸ் கமர்ஷியல் படங்களைக் கொடுப்பவர். இவர் படங்களில் இடம்பெறும் வசனங்கள்தான் அதன் ஹைலைட். அப்படியிருக்கையில், பாலகிருஷ்ணாவும் போயப்பட்டி ஶ்ரீனுவும் இணைந்தால் சாதாரணமாக இருக்குமா? நிச்சயம் 1000 வாலாதான்.

அப்படி 'லெஜண்ட்', 'சிம்ஹா' என இரு ப்ளாக்பஸ்டர்களை கொடுத்த இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம், 'அகண்டா'. படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதல் எதிர்பார்ப்பு எங்கேயோ இருந்தது. படம் எப்படி இருக்கிறது?
அகண்டா

அந்தக் குழந்தையே நீங்கதான் சார்... என்பது போல், இந்தக் கதையில் இரட்டை குழந்தைகள், இரண்டுமே பாலையா! அதில் ஒன்று இறந்து பிறக்கிறது. அது தெரிந்தால் தனது மனைவி கஷ்டப்படுவாள் என்று அதனை ஒரு சாமியாரிடம் கொடுத்துவிடுகிறார், பாலகிருஷ்ணாவின் அப்பா. அந்தக் குழந்தை கைமாறி கைமாறி சிவனின் கருவறைக்குச் செல்கிறது. அங்கு சென்ற சில நிமிடங்களில் அந்தக் குழந்தைக்கு உயிர் வந்துவிடுகிறது. அந்தக் குழந்தை ஆன்மிக வழியிலேயே வளர்ந்து 'அகண்டா' எனும் பாலகிருஷ்ணாவாக மாறுகிறது. வீட்டிலிருக்கும் குழந்தை பிற்காலத்தில் அந்த ஊரின் காட்ஃபாதர் முரளி கிருஷ்ணாவாகிறது. முரளிக்கு வரும் பிரச்னையை 'அகண்டா' எப்படித் தீர்த்து வைக்கிறார் என்பதுதான் படம். அதனை ரத்தம் தெறிக்க தெறிக்க, ஃபைட்டர்ஸ் பறக்க பறக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

பார்த்தால் பனை மரம் எறிவது, ரயிலை ஒற்றைக் கையில் நிறுத்துவது, நடந்தால் டாடா சுமோக்கள் பறப்பது என பாலகிருஷ்ணா படங்களே வரைமுறைக்கு அப்பாற்பட்டவை. ஆனால், இந்தப் படமோ ஃபேன்டஸி ஜானருக்குள் வருவதால் இன்னும் ஒரு படி மேலேயே சென்றிருக்கிறார்கள். படத்திற்கான ரோப் செலவுகள் எவ்வளவு என்று தெரிந்துகொள்ள ஆசை!

பிரக்யா ஜெய்ஸ்வால் முரளி கிருஷ்ணாவுக்கு (வீட்டிலிருக்கும் பாலகிருஷ்ணா) ஜோடி. மாவட்ட ஆட்சியராக வருகிறார். பார்த்ததும் காதல், ஒரே பாடலில் திருமணம், குழந்தை என மூன்று வருடங்களை ஃபாஸ்ட் ஃபார்வர்டில் ஓட்டிவிடுகிறார்கள். அதுவும் ஒருவகையில் நல்லதுதான்!

வில்லனாக ஶ்ரீகாந்த். வழக்கமாக அவரை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்துவிட்டு இதில் மனசாட்சியே இல்லாத நெகட்டிவ் ஷேடில் பார்க்க சற்று வித்தியாசமாக இருக்கிறது. சில காரணங்களால் இவருக்கும் பாலகிருஷ்ணாவுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகே, அகண்டாவின் என்ட்ரி!

அகண்டா

கடவுளின் மறுவுருவமாக தன்னை எண்ணிக்கொள்ளும் அகண்டாவை சுற்றி அத்தனை அட்டாக்குகள். வழக்கம்போல யாராலும் அவரை வீழ்த்த முடிவதில்லை. கட்டுக்கடங்காத காளை போல படம் முழுக்க திமிலை சிலுப்பிக்கொண்டே இருக்கிறார். வாய்க்குள் துப்பாக்கி வைத்து சுட்டு, தலை வழியாக குண்டுகள் வெளியேற்றுவது, திரிசூலத்தை வயிற்றில் சொருகி குடலை குடைவது, ஒரே அடியில் பூமியைப் பிளப்பது, சாகக்கிடக்கும் குழந்தையைப் பிழைக்க வைப்பது, பக்கம் பக்கமாக பன்ச் வசனங்கள் பேசுவது என ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். I am Sivam!

படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நீ.....ள்கின்றன. அதில் பலவற்றிற்கு ஸ்லோ மோஷன் வைத்து மாஸ் காட்டியிருக்கிறார்கள். ஸ்டன் சிவா, கெவின், ஸ்டீவன் ஆகியோரின் ஸ்டன்ட் கோரியோகிராஃபி, தமனின் பின்னணி இசை படத்தை தாங்கி செல்கிறது என்று சொல்வதை விட, இது இரண்டும்தான் மொத்த படமும் என்றே சொல்லலாம். அதற்காக அசராமல் உழைத்திருக்கிறது ராம் பிரசாத்தின் கேமரா. சண்டை காட்சிகளை பாலகிருஷ்ணாவின் ரசிகர் மனநிலையில் ரசித்து ரசித்து எடிட் செய்திருக்கிறார் வெங்கடேஸ்வர ராவ்.

'ஜெய் பாலையா' என்ற பாடலில் பாலகிருஷ்ணாவின் நடனம் நிச்சயம் எண்டர்டெயின் செய்யும். பன்ச் டயலாக்குகளுக்கு பஞ்சமில்லை. படம் நெடுகவே ஒன் லைனர்கள் உலாவுகின்றன. "உனக்கு சாவைப் பார்த்து பயம், ஆனா அந்த சாவுக்கே அவனைப் பார்த்து பயம்" என்று வந்து போகும் அனைவருமே ஏகத்துக்கு பன்ச்சை உதிர்க்கிறார்கள். பாலையா லென்த்தாக அரை பக்கத்துக்கு "Both are not same" என ஒப்புமைப்படுத்தி பேசும் வசனம் ஒன்றிருக்கிறது. மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க!

அகண்டா

இது போதாது என ஆன்மிகம் பற்றியும் கடவுள்கள் பற்றியும் ஒரு நீளமான காட்சியை வைத்து கிளாஸ் எடுக்கிறார் பாலகிருஷ்ணா! எது எப்படியோ, ஸ்க்ரீன் பிரசன்ஸ், ஸ்டன்ட் காட்சிகள், டான்ஸ் என அனைத்துக்கும் அவர் போடும் உழைப்பு பாராட்டுக்குரியது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாலகிருஷ்ணா படம் பார்க்க போகிறோம் என்ற மனநிலையில் தியேட்டருக்கு செல்பவர்களை நிச்சயம் 'அகண்டா' என்டர்டெயின் செய்யும். அது ஆரவாரமாகவும் இருக்கலாம், ஜாலி கேலியாகவும் இருக்கலாம். லாஜிக்கெல்லாம் பார்க்கக் கூடாது. சும்மா ஜாலியா பார்த்துட்டு வாங்க!

ஜெய் பாலையா!



source https://cinema.vikatan.com/movie-review/nandamuri-balakrishna-starrer-akhanda-telugu-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக