தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி வடகிழக்குப் பருவமழை துவங்கியது. தொடர் மழையால், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போலத் தேங்கியது. கடந்த 4 நாட்களாக மழை அளவு சற்றுக் குறைந்தாலும், அவ்வப்போது மிதமான பெய்து வருகிறது. இதனால், மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத்நகர், ஸ்டேட்பாங்கு காலனி, அம்பேத்கர்நகர், ராஜகோபால்நகர், கதிர்வேல் நகர், திரேஸ்புரம், மணல் தெரு, சத்யாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் இதுவரை, மாவட்டத்தில் 41 வீடுகள் முழுமையாகவும், 532 வீடுகள் பகுதியாகவும் சேதமைடந்தன. வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு ரூ.25,04,900 நிவராணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாகவும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 28 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3,38,000 இழப்பீடாகவும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் சீரமைப்புப் பணிளை கடந்த நவம்பர் 7-ம் தேதி முதல் இரவு, பகலாக முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர், 2-ம் தேதி பிற்பகலில் ஆய்வு செய்தார்.
பிற்பகல் 1.40 மணிக்கு சென்னையில் இருந்தது விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின். விமான நிலையத்தில் இருந்து ஊருக்குள் நுழைவதற்கு முன்பாக, தூத்துக்குடி – கோவில்பட்டி செல்லும் மேம்பாலத்தின் கீழ் ஒரு தூணில், “வா சாமி.. மழையிலிருந்து மக்களைக் காக்க..” என தூத்துக்குடி மாவட்ட தி.மு.க இளைஞரணி நிர்வாகி ஒருவர் ஒட்டியிருந்த பேனர் அனைவரையும் கவர வைத்தது.
முதல்வர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, 3வது மைல் பாலம் ஏறும் இடத்திற்கு இடதுபுறம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள ஒரு விளம்பர டவரில், பா.ஜ.க நிர்வாகி ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக ஒட்டப்பட்டிருந்த விளம்பர பேனரைப் பார்த்த தி.மு.க நிர்வாகி ஒருவர், பாதுகாப்பில் இருந்த போலீஸாரைப் பார்த்து, “சார்.. தளபதி வர்ற வழியில இந்த கல்யாண பேனர் இருந்தா நல்லா இருக்காது.
உடனே இதை எடுத்தே ஆகணும்” எனச் சொல்ல, பதறிப் போன போலீஸார், அங்கிருந்த சிலரின் உதவியுடன் அந்த பேனரை கவனமாக அகற்றினார்கள். மதிய உணவிற்குப் பிறகு 2.31 மணிக்குக் கிளம்பிய அவர், தூத்துக்குடி சிதம்பரநகர் வழியாக, பிரையண்ட் நகர் 1வது தெருவிற்குள் வந்தார். காரில் இருந்து இறங்கி அங்கு நின்ற மக்களிடம் மனுக்களைப் பெற்றதுடன் மழை வெள்ளம் பாதிப்பு குறித்து கேட்டதுடன், ”விரைவில் இதற்கு நிரந்தரத்தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஆனால், காலை 11 மணிக்கு முன்னதாகவே இந்த பிரையண்ட் நகரில் மழைநீர் தேங்கிய நிலையிலும், முதல்வரின் கான்வாய் வாகனம் செல்வதற்காக பள்ளாமான பகுதியில் அவசர அவசரமாக ஜே.சி.பி மூலம் மண் கொட்டப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் ஸ்டாலின். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி., கனிமொழி மற்றும் எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாநகராட்சி அலுவலகத்திற்குள் முதல்வர் நுழைந்தவுடன், மனு அளித்த தமிழ் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், “ஐயா. மாநகராட்சிப் பகுதிகள்ல மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதுல மகிழ்ச்சி. ஆனா, நம்ம மாவட்டத்துல எட்டயபுரம், விளாத்திகுளம் தாலுகாவுல சுமார் 1 லட்சம் ஹெக்டேர்ல விளைவிக்கப்பட்டிருந்த உளுந்து, பாசி, சின்னவெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் அழுகிப் போச்சுங்கய்யா.
கன்னியாகுமரியில அங்குள்ள விவசாயிங்க விளை நிலத்தைப் பார்வையிட்டது மாதிரி எங்க பகுதிகள்ல உள்ள நிலத்தையும் பார்வையிடணும். போன வருஷம் செலுத்துன பயிர்காப்பீட்டுத் தொகை இன்னும் சில பயிர்களுக்குக் கிடைக்கலங்கய்யா” எனச் சொல்லி மனு அளித்தனர். மக்கள்பாதை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அமீர், “ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் போது இரும்புக்கம்பிகளை, ஒப்பந்தக்காரர்கள் ரோட்டு ஓரம் அப்படியேப் போட்டு வச்சதுனால சில விபத்துகள் நடந்துச்சு.
இது சம்மந்தமா முதலமைச்சர் தனிப்பிரிவுல கொடுத்த 4 மனுவுக்கும் பொய்யான பதிலை மாநகராட்சி அதிகாரிங்க தர்றாங்கய்யா” எனச் சொல்லி அதற்கான ஆதாரத்துடன் கூடிய மனுவை கொடுத்ததும் ஒரு நிமிடம் ஷாக் ஆகிப்போனார் முதல்வர். “தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியானது, கடல் மட்டத்தில் இருந்தது தாழ்வாக இருக்கிறது. இதனால், ஒவ்வொரு பருவமழையின் போதும் சில இடங்களில் அதிகமாக மழைநீர் தேங்கி நிற்கிறது.
இந்தாண்டு பெய்த அதிகப்படியான மழையால், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழை அளவு 398.12 மி.மீ. இது, வழக்கமாகப் பெய்யும் மழையின் அளவைவிட 112 விழுக்காடு அதிகம். மாவட்டத்தில் மொத்தம் 387 இடங்களில் தேங்கிய மழை நீர், 422 மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 355 இடங்களில் தேங்கிய மழை நீரானது, 390 மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது” என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோர் முதல்வரிடம் எடுத்துக் கூறினர்.
“மாநகராட்சிப் பகுதியில் மழைக்காலத்தில் அதிகப்படியான மழைநீர் தேங்காம இருக்க என்ன மாதிரியான திட்டத்தை செயல்படுத்தலாம்” என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அம்பேதர்கர் நகரில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிக்குச் சென்றார். கையில் மனுக்களுடன் அப்பகுதி மக்கள் காத்திருந்த நிலையில், காரை நிறுத்தாமல் கை கூப்பியபடியே சென்றார்.
இதனால், டென்ஷனான அப்பகுதி மக்கள் முதல்வரின் கான்வாய்க்குப் பின்னால் வந்த சில வாகனங்களை மடக்கி, “எங்க ஏரியாவுல எவ்வளவு தண்ணி கெட்டிக் கிடக்குன்னு பாருங்க. சி.எம் சார் இறங்கி வருவாருன்னு எதிர் பார்த்தோம். அவர், அப்படியே போனது வருத்தமா இருக்கு. மூணு மணி நேரமா கால்கடுக்க காத்துக்கிட்டிருக்கோம். கூட இருக்குற உள்ளூர் அதிகாரிங்களாவது எங்க நிலைமையைச் சொல்லியிருக்கலாம்ல? ” என அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆவேசமடைந்தனர். ”சி.எம் சார் இன்னும் ரெண்டு மூணு இடங்களைப் பார்வையிடணும்மா. கோவப்படாதீங்க” என, அவர்களை அதிகாரிகள் ஒருவழியாக சமாதானம் செய்தனர்.
தொடர்ந்து, எட்டையபுரம் சாலையில் கலைஞர் அரங்கம் எதிரேயுள்ள ஏ.வி.எம் மஹாலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000 பேருக்கு ரூ.42.60 லட்சம் மதிப்பீட்டில் அரிசி, மளிகைப் பொருட்கள், பெட் ஷீட், பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இறுதியாக முத்தம்மாள் காலனி, ரஹ்மத்நகரில் இறங்கி அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டதுடன் மனுக்களைப் பெற்றார். இறுதியாக, எட்டயபுரம் சாலையில் நிலா சீ புட்ஸ் கம்பெனி அருகில் வெள்ளநீர் வெளியேற்றுக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்த முதல்வர், அங்கிருந்து 5.02 மணிக்கு புறப்பட்டு மதுரைக்குச் சென்று, அங்கிருந்து சென்னை சென்றடைந்தார்.
source https://www.vikatan.com/news/politics/chief-minister-stalin-inspects-rain-affected-area-in-thoothukudi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக