Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

AKS - 75: தலைமுறைகள் மாறியும் மாறிடாத ஆணின் அடிப்படை மனநிலை... சுந்தரிடமிருந்து காயத்ரி தப்பிப்பாளா?

புனிதா பரத்திடம் கிஷோரை அடித்ததை பற்றிக் கேட்கிறாள். ஏன் இப்படி அசிங்கமாக நடந்து கொள்கிறாய் என்ற புனிதா கேட்க, பரத் அவளிடம் திமிராக பதில் சொல்கிறான். புனிதாவை மருத்துவமனையில் வைத்து எதுவும் பேச வேண்டாம் என்று கவிதா கட்டுப்படுத்துகிறாள். புனிதா கிஷோரிடம் பரத் அவனை அடித்ததை ஏன் மறைத்தான் எனக் கேட்கிறாள். கிஷோர் மிகவும் நல்லவனைப் போல அதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று புனிதாவிடம் சொல்கிறான். புனிதா கிஷோரிடம் பரத் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறாள்.

AKS - 75
கிஷோரின் தந்திரங்களை புரிந்து கொள்ளாமல் புனிதா மீண்டும் மீண்டும் அவனது திட்டத்திற்கு பலியாகிறாள். இந்த சீரிசை பார்ப்பதன் மூலமாக புனிதாவை போல் தனக்கு எல்லாம் தெரியும் என்று மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பும் பெண்கள் நடைமுறை பிரச்னைகளை புரிந்து கொள்வார்களாக!

சுந்தர் கண்ணைத் திறந்ததும் எல்லாரிடமும் என்னை ஏன் காப்பாற்றுனீர்கள் என்று கேட்கிறான். காயத்ரிக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதால் இனி உயிர் வாழ்ந்து என்ன பயன் என்று சுந்தர் கேட்கிறான். சுந்தர் காயத்ரிக்கு மனதளவில் நெருக்கடி கொடுப்பது பற்றி புனிதா பேசுகிறாள். சுந்தர் காயத்ரிக்கு தன்னை பிடிக்கவில்லை என்றதும் நான் அமைதியாக விலகி வந்துவிட்டேனே என்கிறான். தான் ஒருத்தியை மட்டுமே தவம் போல் நேசித்தேன் என்று சுந்தர் சொல்கிறான்.

AKS - 75

சுந்தருக்கு நிச்சயம் செய்துவிட்டு காயத்ரி சிவாவை நேசிப்பதை மறைமுகமாகக் குத்திக் காட்டுவது போல சுந்தர் பேசுகிறான். காயத்ரி அழுகிறாள். தான் என்ன செய்ய வேண்டும் என சுந்தரிடம் கேட்கிறாள். சுந்தர் காயத்ரியை நீ சந்தோஷமாக வாழ வேண்டும், என்னை பற்றிக் கவலைப்படாதே என்றும் அதே சமயம் என்னால் உன்னை மறந்துவிட்டு வாழ முடியாது என்றும் சொல்லி எல்லோரையும் குழப்புகிறான். சுந்தர் எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறான். அது அவனுக்கும் தெரிந்தே இருக்கிறது.

சுந்தருக்கு தன்னுடைய காதல் மட்டுமே பெரிய விஷயமாக இருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்காக அவன் யாரைப் பற்றியும் யோசிக்காமல் எந்த எல்லைக்கும் செல்கிறான். காயத்ரி தன்னை திருமணம் செய்யாமல் சிவாவுடன் சேர்ந்தால் குடும்பம் மற்றும் ஊர்க்காரர்கள் காயத்ரியின் மீது பழிப் போட்டு தவறாகப் பேசுவார்கள் என்பதால் தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக சொல்கிறான். அவ்வாறு காயத்ரியின் மீது அக்கறை இருப்பதை போல் காட்டிக் கொண்டு இன்னமும் காயத்ரிக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுத்தவே செய்கிறான். உண்மையில் சுந்தர் அப்படி பேசுகையில், “உலக மகா நடிப்புடா சாமீய்ய்” என்று காயத்ரிக்குத் தோன்றியிருக்கும். சூழ்நிலை கருதி அமைதியாக அழுதுக் கொண்டு இருந்திருப்பாள்.

AKS - 75

இதையெல்லாம் பார்த்துவிட்டு சிவா தான் சென்னை வந்ததே தவறு என்று யோசிக்கிறான். எல்லோரும் சென்ற பிறகு சுந்தர் காயத்ரியிடம் தங்கள் திருமணத்தை பற்றி பேசுகிறான். திருமணத்திற்கு பிறகு தாங்கள் இருவரும் சென்னை வரவே வேண்டாம் என்று சொல்கிறான். சுந்தர் மீண்டும் திருமணத்தை பற்றி பேசுவது காயத்ரிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. காயத்ரி சிவாவை மறந்துவிட்டு சுந்தரை திருமணம் செய்து கொள்வாள் என்று சுந்தர் நம்புகிறான். ஒருவேளை அப்படியே செய்துக் கொண்டாலும் வருங்காலத்தில் காயத்ரியின் மீது சுந்தருக்கு முழுவதுமாக நம்பிக்கை எப்படி வரும்?

வலுக்கட்டாயமாக சிவாவிடம் இருந்து அவளை மனதளவில் பிரித்து திருமணம் செய்து கொள்ளும்போது சுந்தரின் மேல் அன்பு வராது, சிவாவை மறக்கவும் முடியாத சூழ்நிலையில் காயத்ரி இருப்பாள். காயத்ரியை உணர்வுபூர்வமான மனுசியாக சுந்தர் பார்க்கவே இல்லை என்பதற்கு இதுதான் உதாரணம்.

AKS - 75

பொதுவாக காதலர்கள் இடையே மதம், சாதி, வர்க்க வேறுபாடுகள் இருக்கும் போது அவர்களை பிரித்து குடும்பத்தினர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வார்கள். குறிப்பாக பெண்களை அவ்வாறு முறைப் பையனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். இந்தப் பெண்கள் வேறு ஒருவரை காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்த முறைப் பையன்கள் தங்களது சொந்தமும், சாதியும் விட்டுப் போய் விடக்கூடாது என்று திருமணம் செய்து கொள்வார்கள்.

அந்தப் பெண் மனம் உள்ள சிந்திக்கத் தெரிந்த ஓர் உயிரினமாக அவர்கள் குடும்பத்தினர் மற்றும் ஊர்க்காரர்கள் பார்க்க மாட்டார்கள். பெண்களை வெறும் உடமையாக மட்டுமே எண்ணும் வழக்கம் அது. சுந்தர் காயத்ரியை காதலிக்கிறேன் என்று சொன்னாலும் கூட காயத்ரிக்கு மனம் என்று ஒன்று இருப்பதை பற்றி சுந்தர் சிந்திப்பதில்லை. வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்களை மீண்டும் அழைத்து வந்து ஆணவக்கொலை செய்பவர்கள் எப்படி அந்தப் பெண்ணை உடமையாக எண்ணுகிறார்களோ அதேபோல சுந்தரும் காயத்ரி தனக்குக் கிடைக்க வேண்டும் என்று அவளை ஒரு பொருளை போல எண்ணுகிறான். காயத்ரி தன்னை பிரிவது சுந்தருக்கு வருத்தமாக இருப்பதைவிட தோல்வியாகத்தான் அவனால் பார்க்க முடிகிறது. அந்தத் தோல்வியை தாங்க முடியாமல் அவன் தற்கொலை வரை செல்கிறான். சுந்தர் காயத்ரியை திருமணம் செய்துகொண்டால் தான் சிவாவை ஜெயித்துவிட்டதாக உணர்வான். அதனால்தான் மீண்டும் காயத்ரியிடம் தங்களது திருமணத்தை பற்றி பேசுகிறான்.

AKS - 75

புனிதா காயத்ரியின் மனநிலை பற்றி யோசிக்க சொல்லும்போது கூட சுந்தர் தன்னுடைய மனநிலை பற்றியே பேசுகிறான். அதிலும் தற்போது அவன் தற்கொலைக்கு முயன்றதால் அவனுடைய இழப்பும் வலியும் மற்றவர்களை விட பெரியது என்று எண்ணுகிறான். ஒருவேளை காயத்ரி மனம் மாறி சுந்தரை திருமணம் செய்து கொண்டாலும் கூட அவன் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. சுந்தரை போன்றவர்கள்தான் இங்கே பெரும்பாலான சராசரி ஆண்கள். தலைமுறைகள் மாறிக் கொண்டிருக்கையில் சில காட்சிகள் மட்டுமே மாறுகிறதே தவிர, அடிப்படையான ஆணின் மனநிலை மாறுவது இல்லை. போன தலைமுறையை விட இந்த தலைமுறையில் அவர்களிடம் இருக்கும் மாற்றங்களாக தங்கள் மனைவி அல்லது காதலியை வேலைக்கு அனுப்புவது, மாடர்னாக உடை உடுத்த அனுமதிப்பது என்று தங்களது தலைமுறைக்கு ஏற்ப சிறிது மாறி இருந்தாலும் அடிப்படையில் மனைவி என்பவள் தங்களுக்கு அடிமையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இன்னும் ஏற்படவில்லை.

Also Read: AKS 74: கிஷோரின் சவாலை எதிர்கொள்வானா பரத்? காயத்ரி செய்தது சரியா?

பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவியை அடிமையாக நடத்தினாலும் அவர்களை வேலைக்குச் செல்ல அனுமதிப்பதன் பின்னால் இருப்பது குடும்பத்திற்கான பொருளாதார தேவை. சுந்தரை போல அதுவும் தேவைப்படாதவர்கள் தங்கள் மனைவியை பாதுகாப்பு என்கிற பெயரில் வீட்டுக்குள் முடக்கி வைக்க விரும்புகின்றனர். காயத்ரி சுந்தரிடம் இருந்து எப்படித் தப்பிப்பாள் என்கிற அச்சம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. சுந்தர் கிட்டத்தட்ட ஒரு சைக்கோவை போல நடந்து கொள்கிறான். காயத்ரி அவனைத் தவிர்க்கவும் முடியாது அதேசமயம் ஏற்றுக் கொண்டு வாழவும் முடியாது என்கிற இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறான்.

AKS - 75

பாண்டியனும் பொற்கொடியும் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாள். அந்த வழியாகச் செல்லும் ராஜேஷை பாண்டியன் அழைத்து பேசுகிறான். அவனிடம் கவிதாவின் பெற்றோர் அவர்களது திருமணத்தை பற்றி பேச ஊருக்கு வருவதைப் பற்றி சொல்கிறான். ராஜேஷ் பாண்டியனிடம் தானும் கவிதாவும் காதலிக்கவில்லை என்கிற உண்மையை சொல்வான் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ராஜேஷ் எதுவும் சொல்லாமல் திரும்பிச் செல்கிறான்.

கிஷோர் சிவாவிடம் பரத்துடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும்படி கூறுகிறாள். அதை பற்றி பேசிவிட்டு தான் பப்புக்கு செல்ல இருப்பதாக சிவாவை கிஷோர் அழைக்கிறான். சிவா தனக்கு வேலை இருக்கிறது என்று சொல்ல, புனிதா கிஷோருடன் வருவதாகச் சொல்கிறாள். அதை கண்டு சிவா அதிர்ச்சியாகிறான். சிவா (நடிகர் முத்தழகன்) மிக இயல்பாக அந்த ஒற்றை அதிர்ச்சி பார்வை எக்ஸ்பிரஷனில் மொத்தமாக புனிதாவின் மேல் ஒரு அவநம்பிக்கையை உருவானதை பதிவு செய்கிறார்.

AKS - 75
கவிதாவின் பெற்றோர்களை யார் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?
காயத்ரியை காப்பாற்றுபவர் யார்?

காத்திருப்போம்!



source https://cinema.vikatan.com/television/aks-episode-75-can-gayathri-escape-from-sundars-toxic-relationship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக