கடந்த சில அத்தியாயங்களில் பங்குச் சந்தை பற்றியும், மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் பார்த்து வந்தோம். இவை இரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது? நம்மில் பலருக்கும் இந்தக் குழப்பம் இருக்கிறது. பங்குச் சந்தை 150 ஆண்டுகளாகவும், மியூச்சுவல் ஃபண்ட் கடந்த 55 ஆண்டுகளாகவும் இந்தியாவில் இருக்கின்றன. தற்போது இரண்டுமே பிரபலமாகியுள்ள நிலையில் பங்குச் சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா, எங்கு முதலீடு செய்வது என்பதை முடிவு செய்ய நாம் மூன்று விஷயங்களைப் பார்க்கலாம்.
ரிஸ்க் அண்ட் ரிட்டர்ன்
ரிஸ்க்கும் ரிட்டர்னும் கண்டிப்பாகப் பங்குச் சந்தையில்தான் அதிகம். நாம் தேர்ந்தெடுத்து வாங்குகிற பங்கு மள மளவென்று விலையேறிவிட்டால், நாம் போட்ட முதல் பல மடங்காக வளர வாய்ப்பிருக்கிறது. ஆனால், விலை இறங்கிவிட்டால் செம அடிதான்.
மியூச்சுவல் ஃபண்டில் ரிஸ்க்கும் குறைவு; ரிட்டர்னும் குறைவு. ரிஸ்க் குறைவதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று, மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜருக்கு நம்மை விட திறமை அதிகம் இருக்கும் என்பதால் ரிஸ்க்கைத் தவிர்ப்பார்.
இரண்டாவதாக மியூச்சுவல் ஃபண்டில் குறைந்தபட்சம் ஒரு 30 - 40 கம்பெனிகளின் பங்குகள் இருப்பதால் ரிஸ்க் பரவலாகிறது. ஒரு பங்கு இறங்கினாலும், இன்னொன்று ஏறி, நஷ்டம் வராமல் காப்பாற்றிவிடும். உதாரணமாக, யெஸ் பேங்க் பங்கில் முதலீடு செய்தவர்கள், அதன் விலை ரூ.385-லிருந்து ரூ.15-க்கு இறங்கியபோது கிட்டத்தட்ட 96% நஷ்டத்தைச் சந்தித்திருப்பார்கள். ஆனால், யெஸ் பேங்க் பங்கை வைத்திருந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி 4% - 5% அளவுதான் பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில், மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகளின்படி ஒரு ஸ்கீம் 10%-க்கு அதிகமாக ஒரு பங்கில் முதலீடு செய்ய முடியாது. ஆகவே, ஒரு தனிப்பட்ட கம்பெனியின் ஏற்றமும், இறக்கமும் தனி மனிதரைப் பாதிக்கும் அளவு மியூச்சுவல் ஃபண்டை பாதிக்காது.
ஈக்விட்டி ஃபண்ட்ஸ் பொதுவாக வங்கி வட்டியைவிட அதிகமாக வருமானம் தருகிறது. ஆனால், மல்ட்டி பேகர் லாபமெல்லாம் மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்காது.
நேரம் போதாமை
நம் போர்ட்ஃபோலியோவுக்கு ஐந்து கம்பெனிகளைத் தேர்ந்தெடுக்க அட்லீஸ்ட் ஒரு ஐம்பது கம்பெனிகள் பற்றியாவது ஆராய்ச்சி செய்ய வேண்டும். நாம் வாங்க விரும்பும் கம்பெனியின் செயல்பாடுகள், லாப நஷ்டம், அது இருக்கும் செக்டாரின் ஏற்ற இறக்கம், உள்நாட்டு வெளிநாட்டு சூழ்நிலைகள் என்று தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒரு பங்கை வாங்குவதுகூடப் பெரிய விஷயமில்லை; அதற்கப்புறமும் அதன் செயல்பாடுகளைக் கண்காணித்தல், எப்போது விற்கலாம் என்று முடிவு செய்தல் போன்ற எல்லாமே நம் நேரத்தை விழுங்குபவை. கிடைக்கும் தகவல்களைப் படித்து புரிந்துகொண்டு செயல்பட நேரமும் திறமையும் தேவை. குடும்பப் பொறுப்புகள், வேலைச் சுமைகள் என்று தடுமாறும் நம் போன்ற தனி மனிதர்களுக்கு இது கஷ்டம்.
மியூச்சுவல் ஃபண்டில் எல்லாவற்றையும் முடிவு செய்வது ஃபண்ட் மேனேஜர்தான். நாம் ஓரளவு ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் இருக்கக்கூடிய பங்குகள், மேனேஜரின் செயல்திறன், சந்தைச் சூழல் பற்றி மட்டும் அறிந்துகொண்டால் போதும்.
Also Read: `எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்!' - முதலீட்டின் முக்கியமான மந்திரம் இது; ஏன்? - 38
கட்டணங்கள்
பங்குச் சந்தையில் வாங்கும்போதும் விற்கும்போதும் தரகுக் கட்டணம் செலுத்த வேண்டிவரும். அது தவிர, நம் பங்குகளை வைத்திருக்க உதவும் செக்யூரிட்டீஸ் கம்பனிக்கு வருடாந்தர டீமேட் கட்டணம் செலுத்த வேண்டும். ஸீரோதா மாதிரி கம்பனிகளில் இவையெல்லாம் மிகக் குறைவு. ஆகவே, நமக்கு வர வேண்டிய லாபம் சிந்தாமல் சிதறாமல் வந்துவிடும்.
மியூச்சுவல் ஃபண்ட்டில் என்ட்ரி லோட், எக்சிட் லோட், ஏஎம்சி சார்ஜஸ் என்று பலவித கட்டணங்கள் உண்டு. ஏனெனில், கம்பெனியை நடத்தும் செலவு, விளம்பரச் செலவு, ஃபண்ட் மேனேஜர் சம்பளம், தரகுக் கட்டணம் போன்ற எல்லா செலவுகளையும் லாபத்தில் இருந்துதானே எடுக்க முடியும்? ஆகவே, நம் கையில் வரும் லாபம் குறையும்.
Also Read: முதலீட்டாளர்களைக் கைவிடாத மியூச்சுவல் ஃபண்டுகள்; இவற்றுள் உங்களுக்கு ஏற்றது எது? - 39
பங்குச் சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா?
இவற்றைப் பார்க்கும்போது நமக்குப் புரிவது என்னவென்றால், திறமையும் நேரமும் உள்ளவர்கள் நேரடியாகப் பங்குச் சந்தையில் இறங்கலாம்; அதிக லாபம் சம்பாதிக்கலாம். அது இல்லாதவர்கள், குறிப்பாக, முதல் முறையாக பங்குச் சந்தையை அணுகுகிறவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் வழியைத் தேர்ந்தெடுக்கலாம். நம் ஆராய்ச்சித் திறமைகளை வளர்த்துக் கொண்டு, காலமும் நேரமும் ஒத்து வரும்போது முழுமையாகப் பங்குச் சந்தையில் இறங்கலாம்.
சிலர் மியூச்சுவல் ஃபண்டில் ஏழு வருஷத்தில் பார்க்கிற லாபத்தை பங்குச் சந்தையில் ஒரே வருஷத்தில் பார்த்துவிடலாமே என்று எண்ணுவார்கள். அப்படி எண்ணுபவர்கள் 50% மியூச்சுவல் ஃபண்டில், 50% பங்குச் சந்தையில் என்று பிரித்து முதலீடு செய்வதன் மூலம் ரிஸ்க்கைக் குறைக்கலாம்; தங்கள் திறமையையும் சோதனை செய்து பார்க்கலாம். எது அதிக லாபம் தருகிறது என்று தெரிந்துகொண்டு அந்த முதலீட்டு வழியை முழுவதுமாகத் தேர்ந்தெடுக்கலாம்.
- அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.
source https://www.vikatan.com/business/investment/mutual-funds-or-stock-market-which-one-is-best-for-you
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக