எனக்குத் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை. எல்லா பெண்களையும் போலவே கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த எனக்கு, ஏமாற்றமும் விரக்தியுமே நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. காரணம், என் நாத்தனார்.
என் கணவர் வீட்டில் அவர், அவரின் தங்கை என இரண்டு பிள்ளைகள். அப்பா இல்லாத குடும்பத்தைக் கணவர்தான் கவனித்துக்கொண்டிருக்கிறார். தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்துச் சிறப்பாகத் திருமணத்தையும் முடித்திருக்கிறார். எங்கள் திருமணத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்னர்தான் என் நாத்தனார் திருமணம் முடிந்திருக்கிறது. ஆனால், அவர் கணவர் ஒரு மனநலம் பிறழ்ந்தவர் என்பது சில மாதங்கள் சென்ற பிறகுதான் என் நாத்தனாருக்குத் தெரியவந்திருக்கிறது. என்றாலும், அதை அவர் பிறந்த வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சகித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்.
இந்நிலையில், எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத் தேதியும் குறிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், இனி வாழவே முடியாது என்ற நிலையில் என் நாத்தனார் தன் கணவர் பற்றித் தன் வீட்டில் சொல்ல, அதிர்ந்துபோயிருக்கிறார்கள் என் மாமியாரும் கணவரும். `நீ வாழலைன்னாலும் பரவாயில்ல, வீட்டுக்கு வந்துடு' என்று அவரை அழைத்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில், ஏற்கெனவே நிச்சயக்கப்பட்ட எங்கள் திருமணம் நடந்து முடிந்தது.
புதிதாகத் திருமணமாகி நான் கனவுகளுடன் வர, ஆனால் என் புகுந்த வீட்டு சூழலோ என் நாத்தனாரின் திருமணப் பிரச்னைகளால் சோகம் அப்பிக் கிடந்தது. காவல் நிலைய பஞ்சாயத்துகள், அவருக்கு சீதனமாகக் கொடுத்த பொருள்களை திரும்பப் பெறுவது, விவாகரத்து வழக்கு பதிவது என என் கணவரும் மாமியாரும் அலைந்துகொண்டிருக்க, என் நாத்தனார் விரக்தி மனநிலையில் இருந்தார். இவர்களுக்கு மத்தியில் நான் புதுமணப் பெண் எதிர்பார்ப்புகள், சந்தோஷங்கள் எதையும் வெளிக்காட்ட வழியில்லாமல் விழுங்கியபடி வாழ ஆரம்பித்தேன்.
என் கணவர், `என் தங்கச்சி என்னைவிட மூணு வயசு சின்னவ. அவ இப்படி வாழ்க்கையை இழந்துட்டு வந்து வீட்டுல இருக்கும்போது நாம அவ மனசுக்கு சங்கடமோ, ஏக்கமோ வராதபடி பார்த்து நடந்துக்கணும்' என்று என்னிடமிருந்து தள்ளிப்போனார். ஹனிமூன் டிரிப் என்பது இல்லாமல் போனது. படுக்கையறைக்குள் விலகியதோடு, சேர்ந்து கோயிலுக்குப் போவது, ஷாப்பிங் போவது, அவுட்டிங் போவது, பூ வாங்கிக் கொடுப்பது என்று புதுமணத் தம்பதிக்கேயான சின்னச் சின்ன சந்தோஷங்கள் எதுவுமே எங்களுக்கு இல்லை. அப்படியே ஒருவேளை நாங்கள் சிரித்துப் பேசிவிட்டால், `வயசுப் புள்ள வாழாம வீட்டுல இருக்கு, பார்த்து நடந்துக்கோங்க' என்று என் மாமியார் முகம் சுண்டிப் பேசுவார்.
Also Read: பணப் பிரச்னையில் மல்லுக்கு நிற்கும் மகன்கள்; அம்மாவின் கண்ணீருக்கு தீர்வென்ன? #PennDiary 40
என் நாத்தனார் என்னுடன் சகஜமாகப் பேசுவதில்லை. தன் அம்மா, அண்ணனிடமும் தன் வாழ்க்கையில் நடந்த கொடூரங்கள் முதல் தற்போதைய வழக்கு வரை என இவற்றையே பேசி அழுகிறார் பாவம். தன் வயதுப் பெண்கள் எல்லாம் வேலை, திருமணம், குழந்தை என்று சந்தோஷமாக இருக்க, தன் நிலைமை மட்டும் ஏன் இப்படி ஆனது என்று மருகுகிறார். அவர் துயரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், அவரது சூழலால் என் வாழ்க்கையில் ஒரு சின்ன சந்தோஷம்கூட இல்லாமல் இருள் மண்டிக்கிடப்பதைப் புரிந்துகொள்ளத்தான் இந்த வீட்டில் யாரும் இல்லை.
என் பிறந்த வீட்டில், `அவங்க வீட்டுப் பொண்ணுக்கு பிரச்னைனு, எங்க பொண்ணை வாழாம வெச்சிருப்பாங்களா?' என்று கோபப்படுகிறார்கள். `அதெல்லாம் சீக்கிரம் சரியாகிடும்' என்று அவர்களை நான் சமாதானப்படுத்திவிட்டு, 'எப்போதான் நாம சந்தோஷமா வாழறது?' என்று என் கணவரிடம் கேட்டால், பிடிகொடுக்காமல் பேசுகிறார். `உங்க தங்கச்சி படிச்சிருக்காங்க இல்ல, வேலைக்குப் போகட்டும். டைவர்ஸ் கிடைச்சதும் இன்னொரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிடலாம்' என்றெல்லாம் நான் பாசிட்டிவிட்டி கொடுக்க நினைத்துச் சொன்னால், `அதெல்லாம் இப்போ எதையும் யோசிக்க முடியாது. என் தங்கச்சி முதல்ல காயங்கள்ல இருந்து வெளிய வரட்டும். நாம சந்தோஷமா இருக்கணும்னு அவளை இந்த வீட்டுல இருந்து தள்ளிவிட நினைக்கக் கூடாது' என்று புரிந்துகொள்ளாமல் பேசுகிறார் என் கணவர். `என் தங்கச்சியை அப்பா ஸ்தானத்துல இருந்து வளர்த்தவன் நான். அவ அந்த சைக்கோகிட்ட பட்ட கஷ்டங்களையெல்லாம் கேட்டு, அவளை இந்த நிலைமையில பார்த்து மனசொடிஞ்சு போயிருக்கேன். எப்படி என்னால என் சந்தோஷத்தைப் பத்தி இப்போ நினைக்க முடியும்..? புரிஞ்சுக்கோ... எல்லாம் சரியாகட்டும் எனக்குக் கொஞ்சம் டைம் கொடு' என்கிறார்.
Also Read: புறக்கணிக்கும் அண்ணிகள், ஆதரவற்றுப்போன நான்; அண்ணன்களின் அன்புக்கு வழி என்ன? #PennDiary - 41
எனக்குத் தெரிந்து என் நாத்தனாரின் பிரச்னைகள் எல்லாம் தீர ஒரு வருடம் ஆகும் எனத் தெரிகிறது. அதுவரை இந்த வீட்டில் என்னை இப்படியேதான் வைத்திருப்பார்கள் என்றால், அதை சகித்துக்கொள்ளும் பொறுமையை நான் இழந்துவிடுவேன். `நீங்க உங்க தங்கச்சி பிரச்னையை முடிச்சிட்டு வாங்க, அதுவரை நான் இங்க வாழாம இருக்குறதுக்குப் பதிலா என் வீட்டுல போய் இருக்கேன்' என்றுகூட சொல்லிவிட்டுக் கிளம்பிவிடலாமா என்று தோணுகிறது இப்போதெல்லாம்.
வெறுமையாகச் சென்றுகொண்டிருக்கிறது வாழ்க்கை, என்ன முடிவு எடுப்பது நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.
source https://www.vikatan.com/lifestyle/women/a-newly-married-woman-shares-about-her-relationship-problems
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக