உத்தரப்பிரதேச தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டே போகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. பா.ஜ.க, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என உ.பி-யில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இவை போக, சந்திரசேகர் ஆசாத்தின் பீம் ஆர்மி, ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம், சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உ.பி சட்டமன்றத் தேர்தலில் ஆழம் பார்க்கவிருக்கின்றன. நான்கு பெரிய கட்சிகளைத் தவிர்த்து சிறிய கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிடவிருப்பதால், உ.பி தேர்தல் களம் பரபரப்பாக மாறியிருக்கிறது.
கட்சி தாவும் தலைவர்கள்!
இந்த நிலையில், கடந்த நவம்பர் 28 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் காங்கிரஸில் இணைந்திருக்கின்றனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் நெருங்கிய வட்டாரத்திலிருந்த கங்கா ராம், உ.பி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் குமார் லல்லுவின் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். இவரோடு, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்களான ஷிவ் புரான் சிங் செளகானும் (Shiv Puran Singh Chauhan), ராஜ்வரதன் சிங்-கும் காங்கிரஸில் இணைந்திருக்கின்றனர். மற்றொரு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான தர்மேந்திர பாண்டே கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க-வில் இணைந்தார். முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகிய சில நிர்வாகிகள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கூட்டணி இல்லை!
கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, இந்த முறையும் உ.பி-யில் தனித்துப் போட்டியிடுவோம் என்றிருக்கிறது பகுஜன் சமாஜ். ``உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியிலிருந்துவிட்டோம். அதனால் எந்தவொரு நன்மையும் கட்சிக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணமாகத்தான் மாயாவதி எந்தக் கட்சியுடனும் கூட்டணியில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார்'' என்கிறார்கள் பகுஜன் சமாஜ் நிர்வாகிகள்.
`கட்சியை அபகரிக்கிறார்!'
கடந்த வாரத்தில், பகுஜன் சமாஜ் கட்சியைத் தோற்றுவித்த கன்சிராமின் இளைய சகோதரி ஸ்வர்ன் கவுர் (Swarn Kaur), ``மாயாவதி கட்சியை அபகரித்துவிட்டார்'' எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், ``மாயாவதி அரசியலமைப்புக்கு எதிரானவர். கன்சிராம் ஜி உருவாக்கிய கட்சியின் கதையை முடித்துவிட்டார். கட்சியை குடும்ப நிறுவனமாக மாற்றிவிட்டார். அவர் ஏழைகளுக்காக எதையும் செய்வதில்லை'' என்று பேசியிருக்கிறார் ஸ்வர்ன் கவுர். கன்சிராமின் மருமகன் லக்பிர் சிங்-கும் (Lakhbir Singh) மாயாவதியைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
இனி மாயாவதியின் நிலை என்ன?
ஒருபுறம் கட்சித் தாவல், மற்றொரு புறம் கட்சியைத் தோற்றுவித்த கன்சிராம் உறவினர்களின் குற்றச்சாட்டு எனப் பகுஜன் சமாஜ் கட்சி திண்டாடிவருகிறது. இந்த நிலையில், `உ.பி தேர்தலில், பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடுவது சரியா?' என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலர், ``2017 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது பகுஜன் சமாஜ். தற்போது மீண்டும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் மாயாவதி. கடந்த முறை இருந்ததைவிட இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும். கடந்த முறையோடு ஒப்பிடும்போது, சமாஜ்வாடி கட்சிக்கான ஆதரவு பெருகியிருக்கிறது. பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு புதிய கட்சிகளும் உ.பி தேர்தலில் களம் காணவிருக்கின்றன. அதோடு, பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வேறு கட்சிகளுக்குத் தாவிக்கொண்டிருக்கின்றனர். இப்படியான சூழலில், `தனித்துப் போட்டி' என்ற முடிவு, நிச்சயம் மாயாவதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். மாயாவதி, கட்சிக்குள் தனது மருமகனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே, பல தலைவர்களும் கட்சியைவிட்டு விலகுவதற்குக் காரணமாகத் தெரிகிறது. அவர், இந்தப் பிரச்னையை முதலில் சரிசெய்ய வேண்டும்.
உ.பி-யில், ஆளும் பா.ஜ.க-வை எதிர்த்துத்தான் அரசியல் செய்துவருகிறார் மாயாவதி. அப்படியிருக்கையில், பலம் பொருந்திய பா.ஜ.க-வை வீழ்த்த வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியைத்தான் அவர் எடுத்திருக்க வேண்டும். பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடுவதே பா.ஜ.க-வுக்கு மேலும் பலம் சேர்க்கும். எனவே, கட்சிக்குள் இருக்கும் பிரச்னையைச் சரி செய்துவிட்டு, கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி உ.பி-யில் உயிர்ப்புடன் இருக்கும். நான்கு முறை உ.பி-யை ஆட்சி செய்த மாயாவதியின் மவுசும் குறையாமலிருக்கும்'' என்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-mayawati-and-bahujan-samaj-in-uttarpradesh-elections
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக