நீலகிரி மாவட்டம் ஊட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தாண்டவ நடராஜன். ஊட்டியைச் சேர்ந்த ஜான் பாஸ்கோ என்ற நபர் வாரிசுச் சான்றிதழ் வேண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.
ஜான் பாஸ்கோவிடம் விண்ணப்பத்தைப் பெற்ற அப்போதைய கிராம வருவாய் அலுவலர், ஆவணங்களைச் சரிபார்த்து வாரிசுச் சான்றிதழ் வழங்குமாறு வருவாய் ஆய்வாளர் தாண்டவ நடராஜனுக்கு அனுப்பியிருக்கிறார். அப்போது, வாரிசுச் சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் ரூ.500 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று, ஜான் பாஸ்கோவிடம் வருவாய் ஆய்வாளர் தாண்டவ நடராஜன் கேட்டிருக்கிறார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜான் பாஸ்கோ, நீலகிரி மாவட்ட ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜான் போஸ்கோவிடம் கொடுத்து, வருவாய் ஆய்வாளரிடம் கொடுக்குமாறு கூறினர். அதையடுத்து, கடந்த 2007-ம் ஆண்டு தேதி ஊட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாண்டவ நடராஜனிடம் ஜான்பாஸ்கோ கொடுத்த 500 ரூபாயை அவர் லஞ்சமாகப் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டியிலிருக்கும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட தாண்டவ நடராஜனுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, உத்தரவிட்டார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர். மேலும், அவருக்கு ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Also Read: மிரட்டப்படுகிறாரா நீலகிரி கலெக்டர்? - நெருக்கும் ஆளுங்கட்சியினர்!
source https://www.vikatan.com/government-and-politics/crime/ooti-special-court-sentenced-9-years-for-revenue-inspector-who-demand-bribe
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக