தீபாவளி என்றாலே பட்டாசும், புது ட்ரெஸ்ஸும் எனக் குடும்பங்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். அதிலும் குறிப்பாக பலகாரங்களும், சைவ உணவுகளும், பிரியாணிகளும் என அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்திற்கு எந்த குறைவும் இல்லாமல் இருக்கும். திருச்சி மக்களுக்கோ உணவில் இன்னுமோர் உற்சாகமாக எப்போதும் சாப்பிடும் சிக்கன், மட்டன் பிரியாணியையும் தாண்டி தீபாவளிக்கு எனச் சிறப்பாக வான்கோழி பிரியாணியும் கிடைப்பதால், இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
தொடர்ந்து நமக்கும் வான்கோழி பிரியாணி மீதான ஆர்வமும், அதனின் சுவையின் மீதான ஈர்ப்பும் அதிகமாக பிரியாணிக்கு எனப் புகழ்பெற்ற உணவகமாக மக்கள் அனைவராலும் புகழப்படும் கேஎம்எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி உணவகத்திற்கு விசிட் அடித்தோம். திருச்சியின் முக்கிய பரபரப்பான இடமான என்எஸ்பி சாலையில் உள்ளது இந்த உணவகம்.
சாதாரண நாள்களிலேயே கூட்டம் களைகட்டும் என்எஸ்பி சாலை, தீபாவளிக்காக விற்பனையாளர்களும், வாடிக்கையாளர்களும் என மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. நடக்கக்கூட இடமில்லாமல் இருந்த சாலையில் ஊறிக்கொண்டே சென்று உணவகத்தில் நுழைந்தோம். அத்தனை பரபரப்புக்கு இடையிலும், பிரியாணியின் வாசனை நம்மை அங்கேயே கட்டிப்போட வைத்தது. சாய்ந்து உட்கார்ந்துகொள்ள ஏதுவாக ஒரு மேஜையை பார்த்து அமர்ந்தோம். பணியாளரிடம் வான்கோழி பிரியாணியுடன், ஹக்கீம் உணவகத்தின் ஸ்பெஷலான சிக்கனையும் ஆர்டர் செய்தோம். கூடவே வான்கோழி கிரேவி, வான்கோழி 65 என வான்கோழியின் குடும்பத்தையே மொத்தமாக ஆர்டர் செய்தோம்.
Also Read: திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 12: இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு... வினோத் கண் மருத்துவமனை!
ஐந்து நிமிடம் கழித்து, நாம் ஆர்டர் செய்த அத்தனையும் நம் மேசைக்கு வந்தன. கூடவே வாழை இலையை விரித்து வைக்க, வான்கோழி பிரியாணியை அதில் அப்படியே கவிழ்க்கும் போது அதிலிருந்து வந்த ஆவியும், அதனூடே கலந்த பிரியாணியின் மணமும் நம்மை சாப்பிடத் தூண்டியது. தயிர்பச்சடியுடன் பிரியாணியை எடுத்து சாப்பிட அதனின் சுவை தாறுமாறாக இருந்து நம்மை வசீகரித்தது. நல்ல பதமாக வெந்த வான்கோழியை சாப்பிட அதனின் ருசி சொர்க்கத்துக்கே அழைத்து சென்றது.
தொடர்ந்து ஹக்கீம் உணவகத்தின் ஸ்பெஷல் உணவான சிக்கனை சாப்பிட, வித்தியாசமான சுவையில் வெளியே மொறு மொறு என்றும், உள்ளே சாப்ட்டாகவும் இருந்தது. அதனை பற்றி எழுதும்போதே சுவைமொட்டுகள் நடனமாட ஆரம்பித்தன. அடுத்தடுத்து உணவுகள் அனைத்தையும் சாப்பிட்டு உணவுக்கான தொகையை கொடுத்துவிட்டு நிர்வாகத்தினரிடம் பேசினோம்.
"எங்களின் உணவகம் 35 வருடத்திற்கு முன்பு கேஎம்எஸ் ஹக்கீம் அவர்களால் தொடங்கப்பட்டது. முதலில் சிறிய சமையல் குழுவில் வேலை பார்த்து வந்த அவர், தொடர்ந்து தன்னுடைய ஆர்வத்தினால் தன்னுடைய பிரியாணிக்கு என்று ஒரு ஸ்டைல்லை உருவாக்கி வைத்திருந்தார், ஆரம்பத்தில் சிறிது சிறிதாக திருமணம், மற்ற விழாக்கள் என ஆர்டர் எடுத்து வந்தவர், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கேட்கவே திருச்சி பாலகரையில் சிறிய அளவிலான உணவகத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து மக்களின் வரவேற்பு, பிரியாணியின் சுவையால் தற்போது தமிழ்நாட்டில் 11 கிளைகள் உள்ளன.
தொடர்ந்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிது புதிதாக உணவுகளை அறிமுகம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்ததால், பதினைந்து வருடங்களுக்கு முன்பாக தீபாவளிக்கு என்று சிறப்பாக வான்கோழி பிரியாணியை அறிமுகம் செய்தோம். மக்களுக்கு சுவை பிடித்துப்போக ஒவ்வொரு தீபாவளிக்கும் கொடுக்க ஆரம்பித்தோம். தீபாவளிக்கு சில நாள்களுக்கு முன்பு ஆரம்பிக்கும் வான்கோழி பிரியாணி, தீபாவளி வரைக்கும் களைகட்டும். பிரியாணிக்காகவே பண்ணையில் தரமாக வளர்க்கும் வான்கோழியை கொள்முதல் செய்கிறோம். அதனாலேயே சுவை தனித்துவமாக இருக்கிறது. மசாலாவை பார்த்து பார்த்து தினமும் அரைப்போம், எல்லாமே இப்படி ஃப்ரெஷ்ஷாக கொடுப்பதுதான் எங்களின் சிறப்பே! இதற்கென்றே தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்" என்றனர்.
கேஎம்எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி திருச்சியில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ரொம்பவே பேமஸ். திருச்சிக்கு வரும் பெரும்பாலான பிரபலங்களுக்கு பிடித்த உணவகத்தில் இதுவும் ஒன்று. இவர்களின் பிரியாணியிற்கு என்று தனி பார்முலாவே இருப்பதாகவும், அதனால்தான் பெரும்பாலான அரசியல் தலைவர்களின் இல்ல விசேஷங்களுக்கு இவர்களே சமைத்து கொடுக்கிறார்கள் என்கிறார்கள்.
Also Read: திருச்சி ருசி: அம்மிக்கல் ரெஸ்டாரன்ட்... இந்த உணவகத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?!
சமீபத்தில் நடந்து முடிந்த அமுமுக கட்சித் தலைவர் தினகரன் இல்ல திருமண நிகழ்விற்கும் இவர்கள்தான் சமைத்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
தொடர்ந்து அங்கு குடும்பத்தினருடன் வந்திருந்த கணேசன் அவர்களிடம் பேசினோம், "நாங்க பொதுவா தீபாவளின்னா டிரஸ் எடுக்க திருச்சிதான் வருவோம். அப்படி எப்போ திருச்சி வந்தாலும் இங்க வந்து சாப்பிடுவோம். இங்க இருக்குற பிரியாணிலாம் பிள்ளைங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். ரொம்ப காரம்லாம் இருக்காது, அதனாலேயே குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க. முக்கியமா மசாலா அதிகமா இருக்காது. அதனால எங்களுக்கு இந்தப் பிரியாணி ரொம்ப பிடிச்சி போயிடுச்சி. பிரியாணி பீஸ்லாம் நல்லா வெந்திருக்கும். எப்போதும் சிக்கன், இல்லன்னா மீன் இந்த மாதிரி பிரியாணியைதான் டேஸ்ட் பண்ணுவோம். இந்த முறை வான்கோழி பிரியாணி சாப்பிட்டு பாத்தோம். எல்லாமே சூப்பரா இருக்கு" என முடித்தார்.
source https://www.vikatan.com/food/food/trichy-foods-deepavali-special-turkey-biryani-in-kms-hakkim-biryani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக