விருதுநகர் மாவட்ட ஆட்சியரான மேகநாத ரெட்டி, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிடும் புகார்கள், சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படும் புகார்களைக்கூட கவனித்து தீர்வு கண்டு வருகிறார். அத்துடன், அதில் எழுப்பப்படும் கேள்விகளுக்குக்கூட பொறுமையாக பதில் அளித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, விஜய் சிவா விஷ்ணு என்ற மாணவர், ``மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?” என ஆட்சியர் மேகநாதரெட்டியின் ட்விட்டர் பக்கத்தில் இரவு 10 மணிக்கு கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், ``இனி விடுமுறை கிடையாது. சூரியன் வெளியே தெரிகிறது. காலையில் ஸ்கூல் போ. படி, விளையாடு மகிழ்ச்சியாக இரு. விருதுநகர் மாவட்டத்தில் நன்றாக மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்” என பதிலளித்தார். ``ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை பெய்கிறது, அதனால்தான் கேட்டேன்” என்றார் அந்த மாணவர்.
அதற்கு, ``நாளை மழை பெய்யாது. ஏற்கெனவே நேரமாகிவிட்டது, உறங்கு. நாளை பள்ளி உண்டு தம்பி. குட் நைட்” என பதிலளித்தார். சிறியவரோ, பெரியவரோ யார் கேள்வி எழுப்பினாலும் அலட்சியப்படுத்தாமல், கிண்டலான கேள்வியாக இருந்தாலும்கூட, பொறுமையாக பதிலளித்து வருகிறார். சமூக வலைதளங்களில் இவரின் பதில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக தொடர் கனமழையின் காரணமாக விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை என பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்திற்கான விடுமுறை அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஆட்சியர் அறிவித்திருந்தார். இதற்குப் பல மாணவர்கள் பதிலளித்திருந்தனர். அதில், கோகுல் என்ற மாணவர், ``விடுமுறை அறிவித்த ஆட்சியருக்கு அனைத்து மாணவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார். அதற்கு, ஆட்சியர் மேகநாதரெட்டி, ``தம்பிகளா.. நன்றியெல்லாம் போதும். சோஷியல் மீடியா, பேஸ்புக் பக்கங்களை மூடிவிட்டு, சோஷியல் சயின்ஸ் புத்தகத்தை திறந்து, அமர்ந்து படியுங்கள். நாளை காலையில் தேர்வு இருக்கிறது. பாதுகாப்பாக இருங்கள்” என அறிவுரையுடன் பதிவிட்டிருந்தார்.
அதற்கு வர்கீஷ் என்ற மாணவர், ``ரொம்ப கண்டிப்பான கலெக்டரா இருப்பாரோ?” எனப் பதிவிட, சுமன் கார்த்திக் என்பவர், ``இப்படி மக்களுடன் நெருக்கமா இருந்தாலே மக்களின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
காவல்துறை மட்டும் நண்பன் இல்லை. நாங்களும்தான் எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.." எனப் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, ``இன்று திரும்ப மழை பெய்தால் நாளைக்கு லீவு விடுவீங்களா… ஐயா, நான் காலை 5 மணியில் இருந்து படித்துக் கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார். மாணவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியரை டேக் செய்து கேள்விகளை எழுப்பி கொண்டிருக்க, பொறுமையாக அனைவருக்கும் பதிலுடன் அறிவுரையும் கூறி வருகிறார் ஆட்சியர் மேகநாத ரெட்டி.
source https://www.vikatan.com/government-and-politics/politics/virudhunagar-collector-viral-tweets-regarding-school-leave-announcement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக