நான் புகையிலைப் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டேன். அதை நிறுத்துவதற்கு ஆலோசனை சொல்லவும்.
- விஜய் சாமி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்.
``புகையிலைப் பழக்கத்தை அடிக்ஷன் என ஒப்புக்கொள்வதுதான் அதிலிருந்து மீள்வதற்கான முதல் வழி. நீங்கள் இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர நினைத்ததற்கு முதலில் வாழ்த்துகள்.
முதலில் நீங்கள் ஒருநாளைக்கு எத்தனை முறை புகையிலை உபயோகிக்கிறீர்கள் என்று பாருங்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒருநாளைக்கு 5 முறை புகையிலை உபயோகிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். முதலில் அதைக் குறைக்க முடியுமா எனப் பாருங்கள். அதாவது 5 முறை என்பதை 3 முறை, 2 முறை எனக் குறைக்க முடியுமா என்று யோசியுங்கள்.
Also Read: Doctor Vikatan: பனிக்காலத்தில் படுத்தும் பாதவெடிப்பு; நிரந்தர தீர்வு கிடையாதா?
எந்த நேரத்தில் புகையிலை உபயோகத்தைக் குறைக்கப் போகிறீர்கள் என்பதும் முக்கியம். அதாவது, தினமும் காலையில் 10 மணிக்கு எனக்கு புகையிலை போட்டே ஆக வேண்டும், மீண்டும் மாலை 5 மணிக்கும் புகையிலை போடாமல் இருக்கவே முடியாது என்று நினைத்தால் அந்த இரண்டு நேரத்திலும் புகையிலை உபயோகித்துவிட்டு மற்ற நேரத்தில் உபயோகிப்பதை நிறுத்திவிடுங்கள்.
`என்ன டாக்டர்... புகையிலையை அறவே நிறுத்தச் சொல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் உபயோகிக்கலாம் என்று சொல்கிறீர்களே' என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதுவே குடிப்பழக்கம் உள்ள நபர் என்றால் அவரை அந்தப் பழக்கத்தை அறவே உடனே நிறுத்தச் சொல்லி அறிவுறுத்துவேன். ஆனால், புகையிலைப் பழக்கத்தை படிப்படியாகத்தான் குறைக்க முடியும்.
5 முறையிலிருந்து இன்று 3 முறையாகக் குறைத்துவிட்டு, மீண்டும் நாளைக்கு 5 முறைக்கே மாறுவது சரியானதல்ல. குறைப்பது, நிறுத்துவது என்று முடிவுசெய்துவிட்டால் உங்கள் மனஉறுதியை வைத்து அதைச் செய்துதான் ஆக வேண்டும்.
அடுத்ததாக எந்தெந்தச் சூழ்நிலைகளில் உங்களுக்குப் புகையிலை உபயோகிக்கத் தோன்றுகிறது என்பதைக் கவனியுங்கள். நான் சந்தித்த பேஷன்ட் ஒருவர், தனக்கு ஸ்ட்ரெஸ் வரும்போதும், தலை வலிக்கும்போதும் புகையிலை உபயோகிக்கத் தோன்றுவதாகச் சொல்லியிருக்கிறார். அதுபோல உங்களைத் தூண்டும் சூழல்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தமுறை அதே மாதிரியான சூழல்கள் வரும்போது புகையிலை உபயோகிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். என்னுடைய இன்னொரு பேஷன்ட்டுக்கு டூ வீலரில் போகும்போது புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது. அதனால் அதைத் தவிர்க்க டூ வீலரில் போகும்போது பபுள்கம் மெல்ல ஆரம்பித்தார். அதுபோல உங்களைத் தூண்டும் காரணிகளை நீங்கள்தான் கண்டுபிடித்து மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.
மிக முக்கியமாகத் தூக்கத்துக்கு முன்பு, மாலை 6 மணிக்கு மேல் புகையிலை உபயோகிக்கக் கூடாது. 6 மணிக்கு மேல் அதை உபயோகிக்கும்போது ஸ்ட்ரெஸ் அளவு அதிகரிக்கவும், தூக்கமின்மைக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். அந்த நேரத்துக்குப் பிறகு, மூளையைத் தூண்டும் காபி, டீ, புகையிலை போன்ற எதையும் எடுக்க வேண்டாம்.
புகையிலை போடுவதால் வாய்ப் புற்றுநோய் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதையும் தாண்டி, புகையிலைப் பழக்கத்தாலும் இதயம், மூளை, சிறுநீரகங்கள் தொடர்பான பாதிப்புகள் வரும் ஆபத்து இருக்கிறது.
Also Read: Doctor Vikatan: மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடலாமா?
`நானும் இந்தப் பழக்கத்தை விடத்தான் நினைக்கிறேன்... இரண்டு நாள்களுக்கு மேல் என்னால் கட்டுப்பாடாக இருக்க முடியவில்லை' என்று சொல்பவர்கள், மனநல மருத்துவர் அல்லது உளவியல் ஆலோசகர்களை நாடலாம். புகையிலை உபயோகிக்க வேண்டும் என்ற தேடல் ஆரம்பிக்கும்போது அதைக் கட்டுப்படுத்தவும், அது இல்லாமல் வாழவும் பபுள்கம், பேட்ச்சஸ், மாத்திரைகள் என நிறைய இருக்கின்றன. புகையிலை உபயோகிக்க வேண்டும் என்ற உணர்வு வரும்போது அதைச் சில நிமிடங்களுக்குத் தள்ளிப்போட முடியுமா என்று முயற்சி செய்யுங்கள்.
அந்த உணர்வு முதலில் கொஞ்சம் தீவிரமாக இருக்கும். தோன்றிய உடனேயே உபயோகிக்காமல் சில நிமிடங்களைக் கடத்தி விட்டால் அந்த உணர்வு மாறவோ, மறக்கவோ வாய்ப்புண்டு. இப்படித் தள்ளிப்போடுவதால் அடிக்கடி உபயோகிப்பது குறையும். உங்களை அடிமைப்படுத்துகிற எந்த விஷயத்தி லிருந்தும் மீண்டுவர முதலில் மன உறுதியும், அடுத்து மற்றவர்களிடம் அதற்காக உதவி கேட்கத் தயங்காத மனநிலையும் அவசியம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/how-to-get-rid-of-tobacco-usage
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக