Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

`போதைப்பொருள்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டுமே போதாது!’ -திருவாரூர் எஸ்.பி-யின் வேண்டுகோள்

சமீபகாலமாக தமிழ்நாட்டில் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் போதைப்பொருள்கள் விநியோகம் பரவலாக நடைபெறுவதால், இவைகளை பயன்படுத்துபவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடர்பாக, உருக்கமான வேண்கோள் விடுத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கஞ்சா போன்ற போதைப் பொருள்களை புழக்கத்தை கட்டுப்படுத்த, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுத்திருப்பதோடு, சில வழிகாட்டுதல்களையும் அந்த வீடியோவில் முன் வைத்துள்ளார்.

விஜயகுமார் ஐ.பி.எஸ்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். நீங்கள் இந்த போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் நீங்கள் மட்டுமன்றி உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் கண்டிப்பாக போதைப் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதே சமயத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். போதைப்பொருள்களை ஒழிக்க, காவல்துறை தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதேசமயம், காவல்துறை எடுக்கக்கூடிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மட்டுமே இதுபோன்ற குற்றங்களை முழுமையாக தடுத்து விட முடியாது. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அதேபோன்று இளைஞர்கள், சிறுவர்கள், பள்ளி செல்ல கூடிய மாணவர்கள் போன்றவர்களை அவர்களுடைய நண்பர்களும், உறவினர்களும் அவர்களுடைய நடவடிக்கைகளை சற்று கூர்ந்து கவனித்து அதில் அவர்கள் போதை பொருள்கள் ஏதேனும் பயன்படுத்துவது போன்ற மாற்றம் தெரிந்தால் அவர்களது பெற்றோர்களுக்கு உடனே அதனை தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் இவர்கள் தான் சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இருப்பினும் இதனை முற்றிலும் ஒவ்வொரு கிராமமாக சென்று ஒழிக்க வேண்டுமென்றால் அதில் சமுதாயத்தின் பங்களிப்பு அவசியம்” என என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகிறது.



source https://www.vikatan.com/news/crime/thiruvarur-sp-talks-over-the-narcotic-control-in-public

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக