Ad

சனி, 27 நவம்பர், 2021

ஜாங்கிரி டீ - தித்திப்பும் திகைப்பும் மட்டுமல்ல; அதுக்கும் மேல..! அப்படி என்ன ஸ்பெஷல்?

பயணங்கள் சார்ந்த அனுபவங்களை முடிவில்லாமல் வாழ்க்கை முழுவதும் கடத்திக்கொண்டு வருவதில் இயற்கைக்கும் உணவு மற்றும் பானங்களுக்கும் என்றென்றும் தொடர்பு உண்டு. குளிர் பிரதேசத்தில் சூடான பானங்கள், வெயில் உச்சந்தலையைப் பிளக்கும் பகுதிகளில் குளிர்ச்சியான பானங்கள் என இயற்கை நமக்காக அளித்திருக்கும் வரப்பிரசாதங்களோ மிகவும் அதிகம். குளிரோ, வெப்பமோ இயற்கை என்றுமே இனிது தானே!

மனதைக் கொள்ளைகொள்ளும் இயற்கை வனப்பின் பிரமிப்பில், கண் இமைக்காமல் மெய் மறந்து நிற்கும்போது, சுடச்சுட தேநீர் கோப்பையை விரல்களில் பற்றித் துளித்துளியாக விழுங்குவது அதீதமான சுகானுபவத்தை வழங்கவல்லது. அந்தத் தேநீரும் இதுவரை பருகியே இராத புது வகையில் தனி ரசனையைத் தூண்டுவதாக இருந்தால் எப்படி இருக்கும்... அப்படிப்பட்ட ரம்யமான அனுபவத்தைப் பெற வைத்தது ஜாங்கிரி டீ!

ஜாங்கிரி டீ

Also Read: `அந்த ஒரு சொட்டு நாக்குல பட்டதும் ஆஹான்னு சொன்னா..!' - புனே பயில்வான் டீ கொடுத்த பலே அனுபவம்

அருவியும் தேநீரும்:

`ஜாங்கிரி டீ!...’ முதன்முறையாக இந்தப் பெயரைக் கேள்விப்பட்டவுடன் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. பொள்ளாச்சியிலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்துக்குள் இருக்கிறது அந்த அழகிய அருவி. `தூவானம் அருவி’ என அதற்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். அந்த அருவிக்குச் செல்ல நடைப்பயணம் (Trek) மேற்கொள்ளும் வசதியும் உண்டு! கிட்டத்தட்ட மூன்று கி.மீ தூர நடைப்பயணம்! பயணம் தொடங்கும் இடத்தில் வனச்சரக அலுவலகம் மற்றும் அழகிய தேநீர் கடை ஒன்றும் இருக்கிறது.

அந்தத் தேநீர் கடையில் கிடைக்கும் சாயா மாற்றும் காபி ரகங்கள் அப்பகுதியின் சிறப்பு. தேநீரோ… காபியோ… இரண்டிலும் மூலிகை வாசம் குழைத்துப் பரிமாறுகிறார்கள். சிலர் தேநீர் அல்லது காபி குடித்துவிட்டு தூவானம் அருவி நோக்கி நடைப்பயணத்தைத் தொடங்குகிறார்கள். சிலர் அருவி நோக்கிச் சென்றுவந்த களைப்பு நீங்க, நடைப்பயணம் முடிந்த பிறகு பருகுகிறார்கள். எப்படியாகினும் உற்சாகத்துக்குப் பஞ்சமில்லை!

ஜாங்கிரி டீ:

`சுக்கு காபி… பால் சேர்ந்த மூலிகை காபி… பால் சேர்க்காத மூலிகை தேநீர், ஜாங்கிரி டீ… இப்படி நிறைய இருக்கு… உங்களுக்கு என்ன வேணும்…’ எனக் கடைக்காரர் கேட்க, சட்டென எனது பதில் `ஜாங்கிரி டீ…’ என வெளிவந்தது. வித்தியாசமான பெயரைக் கேட்டவுடன் ஜாங்கிரி, தேநீர் காம்பினேஷனில் ஏதாவது கொடுக்கப்போகிறார்களோ என்று தோன்றாமல் இல்லை! மனதுக்குள் கற்பனை சிறகு விரித்துப் பறந்தது.

ஜாங்கிரி என்ற இனிப்புத் திண்பண்டமோ, சமையல் அறைகளில் அதிக ரசனையுடன் வடிவமைக்கப்படுகின்ற நாவில் நீர்சுரப்புகளைத் தூண்டும் வளைவு நெளிவான ஓர் உணவுக்கோலம். ஆனால், ஜாங்கிரி டீயோ மூலிகைகள் கலந்த ஆரோக்கிய பானம்... அதனுடன் தோதாக உணவுப் பண்டங்களும் இணைந்துவிட்டால் அமிர்தம் வேறு உண்டா! நிச்சயம் இனிப்புடன் தொடர்புடையதாகவே `ஜாங்கிரி’ எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கும் என்ற எண்ணத்துடன், அதன் தயாரிப்பு முறைகளைக் கவனிக்கலானேன்.

ஜாங்கிரி டீ கடை

மண் மெழுகிய தேநீர் கடை:

அழகிய கூடாரம் அது! ஓங்கி உயர்ந்திருக்கும் மரத்தைச் சுற்றி தட்டி அமைத்து, மண் திட்டுகள் போல இருக்கைகளை மெழுகி, அழகாய் அந்தக் தேநீர் கடையை உருவாக்கியிருக்கிறார்கள். கிராமங்களில் உள்ள பாரம்பர்ய மண் வீடு போல, காட்டுக்குள் மண்ணால் மெழுகப்பட்ட தேநீர் கடை என்று வைத்துக்கொள்ளலாம். அதுவும் பானங்களைத் தயாரிக்க பாரம்பர்ய மண் அடுப்பு. பார்த்தவுடன் ஏதாவதொரு மூலிகைத் தேநீரைப் பருகிவிட வேண்டும் எனும் ஆவலை அந்தக் கடை தூண்டிவிடுகிறது.

மூலிகைகளின் சங்கமம்:

கரும்பு வெல்லம்… நன்னாரி வேர்… ஏலக்காய்… ஆகிய மூன்றும் ஜாங்கிரி தேநீரின் முக்கிய அங்கத்தினர். கொதிகலனில் கொதிக்கும் தண்ணீரில், பொடித்த கரும்பு வெல்லத்தையும், இடித்த நன்னாரி வேரையும், உடைத்த ஏலத்தையும் கலந்து, கொதிக்க வைத்து சூடாக ஒரு கண்ணாடிக் குவளையில் பரிமாறுகிறார்கள்.

மழைச்சாரல் மற்றும் சூழ்ந்திருக்கும் உயர்ந்த மரங்களால் உண்டாகும் குளிர்ச்சியான சூழலுக்கு இதமாக சூடான ஜாங்கிரி டீ பருகுவது தனி சுகம்தான். பால் கலக்காத கட்டன் சாயா ரகம் அது! நாவை குளிர்வித்து உடலுக்கு குதூகலத்தை அளிக்கும் சுவையை ஜாங்கிரி டீ வழங்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

இயற்கையும் தேநீரும்:

கையில் தேநீர் கோப்பையை வைத்துக்கொண்டு, சில நிமிடங்கள் அங்கிருக்கும் நீரோடையை ஆசைதீர ரசிக்கலாம். மரங்கள் சூழ்ந்திருக்கும் அப்பகுதியில் தாவிப் பாயும் அழகிய சிறு பறவைகளைக் கண்டு மெய் மறக்கலாம். `Grizzled giant squirrel’ எனும் பெரிய அணில் ரகங்களை அவ்விடத்தில் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். பறவைகளும் அணில்களும் ஜாங்கிரி தேநீருக்காக உங்களோடு போட்டி போடாமல் இருந்தால் சரி!

தூரத்தில் யானைகள் தெரிகின்றனவா என்றும் உற்று நோக்கலாம். இவையெல்லாம் ஜாங்கிரி டீ பருகிக்கொண்டே என்பது எவ்வளவு சிறப்பு. மண் குழைத்து அமைத்த திண்ணைகளில் அமர்ந்தோ… மரங்களால் கட்டப்பட்ட வட்ட நாற்காலிகளில் அமர்ந்தோ தேநீர் ரகங்களைப் பருகலாம். இல்லை மெதுவாக ஒரு `வாக்’ சென்றும் பருகலாம்! இயற்கையும் தேநீரும் எவ்வளவு அழகு தெரியுமா!

ஜாங்கிரி டீ

Also Read: உடல் சூட்டைத் தணிக்கும் ஆயில் மசாஜ்; கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

மருத்துவ பானம்:

பல கி.மீ தூரம் நடைப்பயணம் மேற்கொள்வதற்கான ஆற்றலை, ஜாங்கிரி டீ நிச்சயம் அளிக்கும். இனிப்புச் சுவையுடைய கரும்பு வெல்லம் உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலை உடனடியாக வழங்கும். தாகத்தைத் தணித்து நீரூட்டத்தை அள்ளிக்கொடுக்க நன்னாரி வேர் கைகொடுக்கும். ஏலத்தின் வாசனை மகிழ்ச்சியைக் கொடுத்து, செரிமானத்தை முறைப்படுத்தும். வயிற்றுப்புண்ணுக்கான சிறப்பான பானமாகவும் ஜாங்கிரி தேநீரைப் பருகலாம்.

வெல்லம், நன்னாரி மற்றும் ஏலம் மூன்றிலுமே இனிப்புச் சுவை விரவிக்கிடக்கிறது. `ஜாங்கிரி’ எனப் பெயர் சூட்டப்பட்டதற்கான காரணம் அப்போது புரிந்தது. சமீபகாலமாகச் செயற்கை சாயங்கள் கலந்து தயாரிக்கப்படும் ஜாங்கிரி ரகங்களுக்குப் பதிலாக, ஜாங்கிரி டீ போன்ற பானங்களே உடலுக்கு முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தூவானம் அருவிக்கு நடைப்பயணம் செல்வதற்கு முன்பு ஒருமுறை… சென்று வந்த பிறகு ஒருமுறை… என இருமுறை சுவைமிக்க ஜாங்கிரி தேநீரை சுவைத்தது `ஜாங்கிரி’ அனுபவம்!.. நடுக்காட்டின் உற்சாக பானம் அது.

ஜாங்கிரி டீ... பருகிய பரவசத்தில் நிரம்பிய வயிற்றை மட்டும் அல்ல, ஆன்மாவையே நன்றி சொல்ல வைக்கும் ஆரோக்கிய பானம்!



source https://www.vikatan.com/food/miscellaneous/a-man-shares-the-experience-of-pollachi-jaangri-tea

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக