Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

புதுக்கோட்டை: முறைகேடாகப் பத்திரப்பதிவு; திடீரென சரிந்த கட்டடம்! -இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேர்

புதுக்கோட்டை நகரில் தெற்கு மூன்றாம் வீதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவுளிக் கடை என்ற பெயரில் செயல்பட்டு வந்த இரண்டு மாடிக் கட்டடம் 10ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுக் கிடந்தது. இந்தக் கட்டடத்தைச் சமீபத்தில் செந்தில்குமார் என்பவர் வாங்கியிருந்தார். இந்தக் கட்டடத்தை ஒப்பந்ததாரர் மூலம் கடந்த சில தினங்களாக இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. 20பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வழக்கம் போல் நவ.30-ம் தேதி வழக்கம் போல் கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்ற போது, எதிர்பாராத விதமாக தொடர் மழையால் ஊறிப்போய் இருந்த கட்டடம் அப்படியே இடிந்து விழுந்தது.

இதில், 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உடனே சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டைத் தீயணைப்புத் துறை மாவட்ட உதவி கோட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காவல் துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் சேர்ந்து கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கிய தவித்த 10 பேரைக் காயங்களுடன் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே தான், இந்தக் கட்டடத்தைச் சமீபத்தில் வாங்கிய மருத்துவர் செந்தில்குமார், தாம் வாங்கிய இந்த இடத்தைக் காலிமனை என்று பதிவு செய்திருக்கிறார். விசாரணை செய்தால், அரசுக்குக் கட்ட வேண்டிய தொகையுடன், அபராதத்தொகையும் சேர்ந்து வசூலித்துவிடுவார்கள் என்று தான் அவசர, அவசரமாக இடிக்க வைத்திருக்கிறார்.

ஆனால், விபத்து ஏற்பட்ட நிலையில், பதிவுத்துறை அலுவலகத்தை ஏமாற்றி முறைகேடாகப் பதிவு செய்திருப்பது போலீஸார் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

இதற்கிடையே தான், நகராட்சி ஆய்வாளர் ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த புதுக்கோட்டை நகர போலீஸார், கட்டடத்தை வாங்கிய செந்தில்குமார், ஒப்பந்ததாரர் அரங்குளவன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: இடைவிடாத மழை; அடுத்தடுத்து விழும் மரங்கள் - நிலச்சரிவு அபாயத்தில் நீலகிரி!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் நேரடியாக சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "நகராட்சியின் அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் இடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டடத்தை எக்காரணம் கொண்டும் இடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி இருந்தோம். விதிமுறைகளை மீறிக் கட்டடத்தை இடித்திருக்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஆய்வு

சார் பதிவாளர் கண்ணையா, "பத்திரப்பதிவு நடைபெற்ற ஒரு வாரக் காலத்திற்குள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தொடர்ந்து, மழை பெய்து வந்ததால், 10 நாட்களுக்கும் மேலாக அந்தப் பணி தமாதமானது. உடனடியாக ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய அபராத தொகை வசூலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, "அனுமதி இல்லாம, இது போன்ற கட்டட இடிப்பு போன்றவைகளை செய்யக்கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்.



source https://www.vikatan.com/news/crime/10-people-trapped-in-building-collapse-near-puthukottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக