வேலூரிலிருந்து 59 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மேற்கு, தென்மேற்கு திசைப் பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு, லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு அதிகாரப் பூர்வ தகவலை ‘ட்விட்டர்’ பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. ரிக்டர் அளவுக்கோலில் 3.6 ஆக அதிர்வு பதிவாகியிருக்கிறது. பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்திருந்ததைப் போலவே, வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டா மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி போன்ற பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது. அதிர்வின் தாக்கம் தொடர்ந்து ஏழு முறை இருந்திருக்கிறது.
குடியாத்தம் தட்டப்பாறை, மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில், நில அதிர்வுக் காரணமாக வீடுகளில் பரண்மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்திருக்கின்றன. தரையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சில அங்குலம் நகர்ந்திருக்கின்றன. அந்தப் பகுதியில் 58 வயதான செல்வம், சாமிநாதன், நாகரத்தினம் ஆகியோர் உட்பட சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருக்கின்றன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தங்களது உடமைகளையும் வெளியில் எடுத்துவந்து வைத்துள்ளனர். கடந்த 40 நாட்களில், மீனூர் கொல்லைமேடு பகுதியில் மட்டும் மூன்றாவது முறை நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். ‘இவ்வித நில அதிர்வினால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை’ எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/vellore-early-morning-earthquake-cracks-in-homes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக