Ad

சனி, 27 நவம்பர், 2021

வட இந்தியர்கள் மட்டும் அதிகம் பால் அருந்துவது ஏன்? ஓர் ஆய்வுப் பார்வை

பூமி தோன்றி 4,500 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன எனவும், அதில் உயிர்கள் தோன்றி 3,500 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன எனவும், இன்றைய மனித இனம் பரிணமித்து 2 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன எனவும் பரிணாமவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆதியில் வேட்டைச் சமூகமாக இருந்த மனித இனம் மாமிச உணவை உண்டதில் ஆச்சர்யமில்லை. இந்தியாவில் 71% மக்கள் மாமிச உணவையும், 29% மக்கள் சைவ உணவையும் உண்பதாக 2014-ம் ஆண்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒப்பீட்டளவில் சைவ உணவு சாப்பிடுபவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மிக முக்கியக் காரணம் இவர்களில் மிகப்பெரும்பாலானோர் மாட்டுப்பால் மற்றும் எருமைப்பால் அருந்துபவர்கள். இவர்களை பூரணமாக சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களாகக் கருத முடியாது. ஆகவே, இவர்களைப் பால் அருந்தும் சைவ உணவர்கள் என்றழைப்பதே சரியாக இருக்க முடியும். இவர்களின் உணவுக் கலாசாரத்தில் பால்தான் முதன்மையானது. அடிப்படையானது.

காங்கிரஜ் மாடுகள்

இந்தியாவில் பால் அருந்தும் சைவ உணவர்கள் 50%-க்கும் அதிகமானோரைக் கொண்ட மாநிலங்களில்,

- ராஜஸ்தான் (74.9%) முதலிடமும்,

அதைத் தொடர்ந்து ஹரியானா (69.25%),

- பஞ்சாப் (66.75%),

- குஜராத் (60.95%),

- மத்தியப் பிரதேசம் (50.60%) இடமும் வகிக்கின்றன.

சைவ உணவு உண்பவர்களுக்குத் தேவையான (விலங்குப்) புரதத்தை அளிப்பதில் பால் மற்றும் பால் பொருள்களுக்கு மிகப்பெரும் பங்குண்டு. ஆகவே, இந்த மாநிலங்களில் நிலவும் பாலின் தேவையும் சந்தை வாய்ப்பும் மிகவும் இயல்பானதும் இயற்கையானதும் ஆகும். இதை நிவர்த்தி செய்வதில் அங்குள்ள கறவை மாட்டினங்களுக்கும் எருமைகளுக்கும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விற்பனை முறைக்கும் முக்கியப் பங்கு உண்டு.

சைவ உணவு உண்பவர்களை அதிகமாகக் கொண்டிருக்கும் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் போன்ற வடமேற்கு மாநிலங்களின் பால் கலாசாரத்துக்கு ஏற்றவாறே அங்குள்ள மாட்டினங்களும் மற்றும் எருமையினங்களும் உருப்பெற்றிருப்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அல்லது பால் உற்பத்திக்குப் பிரசித்திபெற்ற மாடு மற்றும் எருமையினங்களைக் கொண்டிருக்கும் வடமேற்கு மாநில மக்களிடையே பால் கலாசாரம் நிலவுவதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எருமையினங்கள்

மக்களின் பால் கலாசாரம் அவர்கள் நிலத்தில் கறவையினங்கள் உருப்பெற அடிப்படைக் காரணமாக அமைந்ததா அல்லது இயற்கையாக உருப்பெற்றிருந்த கறவையினங்கள் அம்மாநில மக்களிடையே பால் கலாசாரத்தைத் தோற்றுவித்ததா என்பதெல்லாம் ஆய்வுக்குரியது. தாய்ப்பால் அருந்துவது நின்ற பிறகும், பிற விலங்கின் பாலை அருந்துவது என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள பிரத்யேகக் குணமாகும். இது சரியா தவறா அல்லது இயல்பானதா காலப்போக்கில் கற்றுக்கொள்ளப்பட்டதா என்பதெல்லாம் விவாதத்துக்குரியது.

குழந்தைப் பருவத்தில் மனிதனுக்கு லாக்டேஸ் எனும் நொதி சிறுகுடலில் சுரக்கிறது. இது பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையைச் செரிக்கிறது. குழந்தைப் பருவம் முடிந்த பிறகு, இந்த நொதி உலகில் பெரும்பாலோர்களுக்கு (68%) சுரப்பதில்லை என 2017-ம் ஆண்டின் லான்செட் ஆய்விதழ் தெரிவிக்கிறது. குழந்தைப் பருவத்துக்குப் பிந்தைய பருவத்தில் லாக்டேஸ் சுரக்கப்படாததால் பாலில் உள்ள சர்க்கரையைச் செரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. ஆகவேதான் வயது வந்தோர் பலருக்குப் பால் அருந்தியவுடன் வயிறு உப்புதல், புளித்த ஏப்பம் வருதல், வயிற்றுப்போக்கு எனப் பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இதைத்தான் லாக்டோஸ் ஒவ்வாமை (Lactose Intolerance) என மருத்துவத் துறையில் குறிப்பிடுகிறார்கள்.

இது ஒப்பீட்டளவில் ஐரோப்பாவைவிட ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக உள்ளது. இவர்களின் உணவு வரலாற்றை ஆராயும்போது பால் ஒரு பிரதானமான உணவாக இல்லை என்பது புலப்படுகிறது. இந்தியாவில் 61% மக்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளதாகவும், இதில் மூன்றில் இருவர் தென்னிந்தியர்கள் எனவும், ஒருவர் மட்டுமே வடஇந்தியர் எனவும் ஆய்வேடுகள் சொல்கின்றன.

வட மேற்கிந்திய மாடுகள்

Also Read: 'தற்சார்பு பொருளாதாரம்னா இப்படி இருக்கணும்!' பாடம் எடுக்கும் கூடலூர் பழங்குடியினர்

மாறாக உலகில் 32% மக்களுக்கு லாக்டேஸ் எனும் நொதி குழந்தைப் பருவத்துக்குப் பிந்தைய காலகட்டத்திலும் தொடர்ந்து சுரந்தவண்ணம் உள்ளது. இதற்கு லாக்டேஸ் நீடிப்பு (Lactose Persistence) என்று பெயர். இவர்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. எந்தவொரு தொந்தரவுக்கும் உள்ளாகாமல் இவர்கள் இயல்பாகப் பால் மற்றும் பால் பொருள்களை உண்டு செரித்து மகிழ முடியும். இவர்களில் பெரும்பாலோர் வடமேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். குறிப்பாகச் சொல்வதென்றால் டென்மார்க், அயர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, நார்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்ட்ரியா, ஜெர்மனி, பின்லாந்து, ஸ்பெயின் போன்றவையாகும்.

சிலர் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, சூடான், கென்யா, தான்சான்யாவையும் சிலர் மத்திய ஆசிய நாடுகளான சைப்ரஸ், சவுதி அரேபியாவையும் தாயகமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் எந்த நாட்டவராயினும் இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் அனைவரும் கறவைப் பசு வளர்ப்பதை பின்புலமாகக் கொண்ட இனக்குழுவைச் சார்ந்தவர்களாக இருப்பதாகும். இவர்களுக்குப் பால் என்பது முதன்மையான மற்றும் முக்கியமான உணவாக உள்ளதை அறிய முடிகிறது. இவர்களுக்கு மட்டும் சிறுகுடலில் லாக்டேஸ் நொதி தொடர்ந்து சுரக்கக் காரணம் என்ன என ஆராயும்போது இவர்களின் லாக்டேஸ் மரபணுவில் -13910 என்ற இடத்தில் ஏற்பட்ட C-T என்றழைக்கப்படும் திடீர் பிறழ்வே என ஆய்வுகள் பதில் அளிக்கின்றன.

ராஜஸ்தான் மாநில தார்பார்க்கர் மாடுகள்

Also Read: சுருங்கிவரும் தமிழகத்தின் மேய்ச்சல் நிலம்... காப்பது ஏன் அவசியம்? ஓர் அலசல்!

இதற்குக் காரணமென்ன? அடிப்படையில் மரபணுப் பிறழ்வு என்பது ஒரு குறிப்பிலா தற்செயல் நிகழ்வாகும். அதாவது, மரபணுப் பிறழ்வு இனம் பார்ப்பதில்லை. இடம் பார்ப்பதில்லை. நாடு பார்ப்பதில்லை. உயிரினங்களின் மரபணுக்களில் இது எந்த நோக்கமுமின்றி தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சில நேரங்களில் உயிரினத்துக்கே ஊறு விளைவிப்பதாகக்கூட அமைந்துவிடலாம். சில நேரங்களில் புதியதோர் உயிரினம் பரிணமிப்பதற்கு அச்சாரமாகவும் ஆகிவிடலாம். காலத்துக்கேற்ற உயிரினத்தைப் பரிணமிக்கச் செய்வதும் காலத்துக்கு ஒவ்வாத உயிரினத்தைக் கழித்துக்கட்டுவதும்தான் மரபணுப் பிறழ்வு நிகழ்த்தும் விளைவுகள். ஆகவேதான் அறிவியலாளர்கள் பொதுவாக மரபணுப் பிறழ்வை ஓர் `அவசியமான தீமை' என வருணிக்கிறார்கள்.

மரபணுப் பிறழ்வு உடற்செல்களில் ஏற்பட்டால் அது அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாது. மாறாக, இனப்பெருக்க உறுப்பான விந்தகம் அல்லது அண்டகத்தில் ஏற்படும்போது அது முறையே விந்தணு, கருமுட்டை மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. ஆதியில் கறவை மாடு வளர்ப்பு வாழ்க்கை முறையைப் பின்னணியாகக் கொண்டிருந்த இனக்குழுக்களிடையே குறிப்பாக வடமேற்கு ஐரோப்பா மக்களிடையேதான் -13910T எனும் மரபணுப் பிறழ்வு ஏற்பட்டதாகவும் பின்னர், காலப்போக்கில் அங்கிருந்து மக்களின் இடப்பெயர்ச்சியாலும் கலப்பு இனப்பெருக்கத்தாலும் உலகின் பலநாட்டு பூர்வகுடிகளுக்கும் கடத்தப்பட்டு கணிசமான எண்ணிக்கையில் இன்று விரவிக் காணப்படுவதாகவும் ஆய்வேடுகள் மூலம் அறிய முடிகிறது.

வட மேற்கிந்திய மாடுகள்

வடமேற்கு இந்திய மக்களிடையே காணப்படும் -13910T மரபணுப் பிறழ்வும் ஐரோப்பிய மக்களிடையே காணப்படும் -13910T மரபணுப் பிறழ்வும் தனித்தனியாக நிகழ்ந்த இருவேறு தன்னிச்சையான நிகழ்வல்ல எனவும், மாறாக, அது மத்திய ஆசிய மக்களின் இந்தியக் குடியேற்றத்தால் ஏற்பட்ட இனக்கலப்பால் வந்தேறியதுதான் எனவும் மரபணுத் தடயங்கள் பலவும் பறைசாற்றுகின்றன. ஆக வடமேற்கு இந்திய மக்களிடையே காணப்படும் தீவிர பால் உணவுக் கலாசாரத்துக்கு அச்சாரமிட்டது -13910T மரபணுப் பிறழ்வு என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த -13910T மரபணுப் பிறழ்வு வடமேற்கு மாநிலத்தவர்களில் அதிகமாகவும் தென் மற்றும் கிழக்கிந்திய மாநிலத்தவர்களில் குறைவாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாறுபடும் பால் கலாசாரத்திற்கும் மரபணுப் பிறழ்வே காரணம் என்றால், அது மிகையல்ல. பால் உணவுக் கலாசாரம்தான் அவர்கள் கொண்டிருந்த பூர்வீக மாட்டு எருமையினங்களை வழிவழியாகப் பால் உற்பத்தி நோக்க அடிப்படையில் இனவிருத்திச் செய்ய தூண்டியது எனக் கருதுவதில் அர்த்தமுள்ளது.

கி.ஜெகதீசன்

இதில் கிர், தார்ப்பார்க்கர், சாகிவால், கான்கிரேஜ், இரத்தி போன்ற பசுவினங்களும், முர்ரா, நீலி ரவி, மேசானா, சுர்தி, ஜாஃப்ராபாடி போன்ற எருமையினங்களும் குறிப்பிடத்தகுந்த வயதாகும். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் கூட்டாகச் சேர்ந்து இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் 41.23 சதவிகிதத்தை வழங்கியுள்ளதாக 2019-ம் ஆண்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

- முனைவர் கி.ஜெகதீசன்,

உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சாவூர்.



source https://www.vikatan.com/news/agriculture/why-north-indians-drink-more-milk-than-south-indians-what-research-reveals

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக